இமாம்களை கண்ணியம் செய்வோம்!

Vinkmag ad

 

                                    (கீழை நிஷா புதல்வன்)
மத்ஹபுகளை பின்பற்றக்கூடாது,அதை உருவாக்கிய இமாம்களையும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று பேசியும்,எழுதியும் வரும் ஒரு சிலர் அதற்கான காரணத்தை சொல்லும் போது வேடிக்கையாக உள்ளது.அவர்கள் சொல்லும் காரணம்தான் என்ன?இமாம்களுக்குள் கருத்தொற்றுமை இல்லை என்பதுதான்!
மார்க்க விடயங்களில் ஒரு சில இடத்தில் ஒரு இமாம் கூடும் எனச்சொன்னால்,மற்ற இமாம்கள் அதற்கு மாற்றமான வழிமுறையை கூறுகிறார்கள்.எந்த இமாமின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்வது?
அதனால் மொத்த இமாம்களையும் புறக்கணித்துவிட்டு குர் ஆன்,ஹதீஸை மட்டும் நாம் பின்பற்றுவோம் எனக்கூறுபவர்கள் நபிமார்களையும் புறக்கணித்து விடுவார்களா?
எனது இந்தக் கேள்விக்கான காரணம்,சில விடயங்களில் நபிமார்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதின் நிகழ்வை அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனது திருமறையில் இவ்வாறு கூறியுள்ளான்;
“விவசாய நிலத்தில் ஒரு சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்து விட்டபோது,அவ்வேளாண்மை விஷயத்தில் தாவூது,சுலைமான்(ஆகிய இருவரும்)தீர்ப்பளித்த சந்தர்ப்பத்தை(நபியே! நினைவு கூறுவீராக!அப்போது)அவர்களுடைய தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்”.(அத்தியாயம்:21,வசனம்:78)
“தீர்ப்புக் கூறுவதில் நாம் ஸுலைமானுக்கு அ(தன் நியாயத்)தை விளங்க வைத்தோம்.(அவ்விருவரில்)ஒவ்வொருவருக்கும் (தீர்ப்புக் கூறும்)அறிவையும்,ஞானத்தையும் நாம் கொடுத்திருந்தோம்;மலைகளையும்,பறவைகளையும் தாவூதுடன்(தஸ்பீஹ் செய்ய)வசப்படுத்தியும் கொடுத்தோம்.அவை (அவருடன் அல்லாஹ்வை)துதி செய்தன;நாம் தான் இவற்றையெல்லாம் செய்வோராய் இருந்தோம்.”(அத்தியாயம்:21,வசனம்:79)
நபி தாவூது(அலை)அவர்கள் அரசராக இருந்த போது ஒரு வழக்கு அவர்களிடம் வந்தது,அவ்வூர் வாசி ஒருவரின் விளை நிலத்தில் மற்றொருவரது ஆடுகள் இரவு நேரத்தில் இறங்கி பயிர்களை காலியாக்கி விட்டது.காலையில் தமது விளைச்சல்களின் சேதத்தை கண்ட விவசாயி யாருடைய ஆடுகள் மேய்ந்தது என்பதனை அறிந்து கொண்டு இது தொடர்பாக நபி தாவூது(அலை)அவர்களிடம் முறையிட்டார்.
வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரித்த நபியவர்களிடம் ஆடுகளுக்கு சொந்தக்காரர் தமது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்;விவசாயத்தின் சேத மதிப்பும்,ஆடுகளின் மதிப்பும் சமமாக இருக்கவே ஆடுகளை விளை நிலத்துக்காரருக்கு சொந்தமாக்கி தீர்ப்புக்கூறினார்கள் நபி தாவூது(அலை)அவர்கள்.
இத்தீர்ப்புக்கு கட்டுப்பட்டு அவையிலிருந்து வெளியேறிய வாதி,பிரதிவாதி இருவரையும் நபி ஸுலைமான்(அலை)அவர்கள் சந்தித்தார்கள்.
 அப்போது ஸுலைமான்(அலை)அவர்கள் சிறுவராய் இருந்த பருவம்.இருவரின் பிரச்சினைகளையும் ஏற்கனவே தெரிந்து வைத்ததால் தீர்ப்பு என்னவென்பதை அவ்விருவரிடமும் கேட்டார்கள்?
நபி தாவூது(அலை)அவர்களின் தீர்ப்பை பற்றி அவ்விருவரும் விபரமாக கூறியதை கேட்ட நபி ஸுலைமான்(அலை)அவர்கள் இந்த வழக்கு விஷயத்தில் நானாக இருந்தால் வேறு விதமாக தீர்ப்பளித்திருப்பேன் என்றார்கள்.
தம் ஆடுகள் முழுவதையும் இழந்து நிற்கும் பிரதிவாதி வேறு எந்த விதமான தீர்ப்பானாலும் இதைவிட நஷ்டம் ஏற்படப்போவதில்லை என்ற தைரியத்தில் நபி ஸுலைமான்(அலை)அவர்களையும்,வாதியையும் அழைத்துக் கொண்டு நபி தாவூது(அலை)அவர்களிடம் போய் அரசரே! உங்களின் மகனார் தாங்கள் வழங்கிய தீர்ப்பு விஷயத்தில் வேறு விதமான தீர்ப்பும் உள்ளதுபோல் சொல்கிறார்கள்.தயவுகூர்ந்து இந்த வழக்கு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேணுமாய் கோரிக்கை வைத்தார்.
இவரது அப்பீலை ஏற்றுக் கொண்ட நபி தாவூது(அலை)அவர்கள் சிறுவராய் இருந்த தமது அருமை மகனார் நபி ஸுலைமான்(அலை)அவர்களைப் பார்த்து நீயாக இருந்தால் இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கியிருப்பாய்?என்று கேட்டபோது,
ஆடுகளுக்கு சொந்தக்காரர் பாதிக்கப்பட்ட விளை நிலத்தில் விவசாயம் செய்து தமது ஆடுகள் விளை நிலத்தை மேய்ந்த போது எந்த அளவுக்கு பயிர்கள் முளைத்திருந்தனவோ?அந்தளவு வரை வளர்த்ததும் விளை நிலத்தை விவசாயி வசம் கொடுத்து விட்டு  தமது ஆடுகளை திரும்ப பெற்றுக் கொள்ளவேண்டும்.
அதுவரை இவரது ஆடுகளை விவசாயி பராமரித்துக் கொண்டும் ஆடுகளின் பால் மற்றும் குட்டிகளை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கியிருப்பேன் என்று நபி ஸுலைமான்(அலை)அவர்கள் கூறியதும்,
 சிறுவர் என்றோ,தமது மகன் என்றோ கருதாமல் இது மிகவும் நல்ல தீர்ப்பு என ஏற்றுக்கொண்டு இதுவே இவ்வழக்கின் தீர்ப்பு என்று அறிவித்து வழக்கை முடித்து வைத்தார்கள் நபி தாவூது(அலை)அவர்கள்.
இந்த வழக்கின் தன்மையைப் பற்றித்தான் இறைவன் தமது திருமறையில் மேற்கண்ட வசனங்களின் மூலமாக நமக்கு தெளிவு படுத்தியுள்ளான்.
வழக்கு ஒன்றுதான்,ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்ட விதம் இருவகையானது.
இரண்டு தீர்ப்புமே நபிமார்களுடையது,இரண்டு தீர்ப்புமே சரியானதுமாகும்.
நபிமார்களின் இருவேறு கருத்துக்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொடுக்கப்பட்டவையாகும் என்பதையும் சூரத்துல் அன்பியாவின் மூலம் அல்லாஹ் தனது அடியார்களுக்கு தெளிவு படுத்திய பிறகும் நபிமார்களுக்குள் கருத்தொற்றுமை இல்லை அதனால் சம்பந்தப்பட்ட இந்த இரண்டு நபிமார்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று யாராவது சொல்ல முடியுமா?
அப்படி சொல்லிவிட்ட ஒருவர் முஃமீனாக இருக்க முடியுமா?இமாம்களுக்கிடையிலே இருக்கும் மார்க்க கருத்து என்பதும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட அறிவும்,ஞானமுமாகும் என்பதுதான் உண்மையான முஃமீன்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
“எனது சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்(சகாபாக்கள்)காலத்தவர்கள்,பின்னர் அவர்களை அடுத்து(தாபியீன்கள்)வருபவர்கள்,பின்னர் அவர்களை அடுத்து வருபவர்கள் என்று அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.”(அறிவிப்பாளர்:இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி),நூல்:புகாரி-முஸ்லிம்)
நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள அடுத்து வருபவர்கள் என்பது யார்?மாட்சிமைக்குரிய நமது உயர்வான இமாம்கள் தான்!
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து வழிகாட்டிய மாபெரும் இமாம்களின் மத்ஹபுகளில் குற்றம் பார்ப்பதும்,அந்த மாமேதைகளை குறை சொல்வதுமே தங்களது கொள்கையின் இலட்சியம் எனக்கருதுபவர்களில்,
 யாராவது ஒருவர் பிற சகோதரனின் குற்றப் பார்வையிலிருந்து தப்பித்ததாக வரலாறு உண்டா?
குற்றங்களையும்,பாவங்களையுமே வாழ்க்கையாய் கொண்டிருப்போர்,இமாம்களையும் அவர்களது சட்ட நூல்களையும் குறை காண்பதற்கு முன்பாக தங்களின் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்து கொள்ளட்டும்.
இத்தகையவர்களைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்;”அவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி பல பிரிவுகளாக பிரிந்து விட்டனர்.அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள தவறானதைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனர்.”(அத்தியாயம்:30,வசனம்-32)
அல்லாஹ்வும்,அவனது ரசூலும்,குர்ஆனும்,ஹதீஸும்,இமாம்களும்,மத்ஹபுகளுமே ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்வியல் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.இவைதான் இம்மைக்கும்,மறுமைக்கும் நல்வழி காட்டக்கூடியதுமாகும்.இந்த உயர்வான கொள்கைக் குரியவர்களாக வாழும் பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாகவும் ஆமீன்!
உங்களின் மேலான கருத்துக்களை jahangeerh328@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.

News

Read Previous

Reader is the Leader

Read Next

மனித குல விரோதி “நாகரீகம்”

Leave a Reply

Your email address will not be published.