Reader is the Leader

Vinkmag ad

அண்மையில் ஓர் அலுவலை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘பிரிட்டிஷ் கௌன்சிலுக்குச் சென்றிருந்தேன்.சென்ற வேலை தொடர்பாகச் சிறிது காத்திருக்கச் சொன்னார்கள்.சரி என்று நான் அங்குள்ள நூலகத்தைச் சுற்றிப்பார்த்தேன்.வெளியில் விற்பனைக்குக் கிடைக்காத பத்திரிகை, புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.தற்செயலாகத் தலை நிமிர்ந்த போது “Reader is the Leader என்று எழுதப்பட்ட வாசகத்தைக் கண்டு மகிழ்ந்தேன்! வியந்தேன்!!

 

விடாப்பிடியான வாசிப்பாலும்,அதனால் பெற்ற பண்பாலும்,அது உருவாக்கிய ஆய்வுப் பண்பாலும் உண்மையிலேயே தலைவராக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களே எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தார். “Reader is the Leader” என்ற சொலவம் அண்ணாவுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்தும்.

 

இன்று பலரும் அறிந்திராத அல்லது மறந்துவிட்ட -அந்தக் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய- டார்பிடோ ஜனார்த்தனம் என்ற திராவிட இயக்கப் பிரமுகர் (அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த என் உடன் பிறவாத உண்மைச் சகோதரர் ஜே.எஸ்.இராசு,பி.ஏ;பி.எட்; அவர்கள் மூலம்)எனக்கு நல்ல பழக்கம். அவர் அண்ணா உயிரோடு இருக்கும்போதே “Anna Sixty ” என்ற சிறப்பு மலரை வெளியிட்டவர். ஆந்திராவைச் சேர்ந்த அவர் நல்ல தமிழறிவும் ஆங்கிலப் புலமையும் பெற்றவர்;அண்ணாவோடு நல்ல நெருக்கம் உள்ளவர்.அவர் அண்ணாவைப் பற்றிச் சொன்னவை இன்னும் என் நினைவில் இருக்கின்றன.அவற்றுள் ஒன்று:

 

அண்ணா நூல்களை விரும்பிப் படிப்பார்.அவை பெரும்பாலும் ஆங்கில நூல்களே. சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நூல் என்று படித்து முடித்துவிடுவார். அவற்றை அவர் நன்கு நினைவில் வைத்துக்கொள்வார்.அவர் படித்து முடித்த நூல்களைக் குவித்தால் குன்றுபோல் இருக்கும். அவர் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் பேசவும் எழுதவும் செய்கிறார்.அது ஒரு புதிய மொழி நடைபோல் தனித் தன்மையோடு அமைந்திருப்பதைக் காண்கிறோம்.ஆங்கில வாக்கிய அமைப்பைத் தழுவியதாகவே அண்ணாவின் தமிழ் மொழி நடை இருக்கும்.அது சுவையாகவும் இருக்கும்.(அந்தக் காலத் தமிழ் இலக்கண நூலில் தமிழின் பலவகை மொழி நடை பற்றிச் சொல்லி வரும்போது,ஆற்றொழுக்கு நடைக்கு அண்ணாவின் எழுத்தையோ,பேச்சையோ மேற்கோளாகக் காட்டுவர்.-இவ்வளவுக்கும் அது காங்கிரஸ் ஆட்சிக் காலம்!)

 

அண்ணாவின் அழகு தமிழ் நடையை திராவி நாடு,காஞ்சி ஆகிய ஏடுகளில் நெடுங்காலம் படித்துச் சுவைத்தவர்களில் நானும் ஒருவன்.கடித இலக்கியத்திற்கு ஒரு மதிப்பை ஏற்படுத்தியவர் அண்ணா என்றால் அது எந்த வகையிலும் மிகை அல்ல.உயர்ந்த இலட்சியத்திற்காகப் பாடுபடவேண்டிய ஒருவன், பயனற்ற அற்பச் செயல்களில் ஈடுபடுதல் கூடாது என்று சொல்ல விரும்பும் அண்ணா,திருக் குளத்தில் இறங்கி பாசி பறிப்பது போல” என்பார்.இது போல் பல.

 

அன்றும் இன்றும் படிக்காமலேயே நூல்களுக்கு அணிந்துரை தந்த தலைவர்கள் உண்டு. அண்ணா அதற்கு விதி விலக்கு.படித்துப் பார்த்து அணிந்துரை தருவது மட்டுமல்ல-அந்த நூல் தகுதியுள்ள நூலென்றால் அதை வாசகனின் நெஞ்சில் பதியவைக்கும் விதத்தில் அவர் அணிந்துரை இருக்கும்.இதற்கு ஓர் எடுத்துக்காட்டு: ஆலிம் புலவர் என்று அறியப்பட்ட சிராஜ் பாக்கவி அவர்கள் எழுதிய நெஞ்சில் நிறைந்த நபிமணி” என்ற காப்பிய நூலுக்கு அண்ணா கொடுத்துள்ள அணிந்துரையைப் படித்துப் பாருங்கள்.இன்றைக்கும் இதயத்தைத் தொடும்.

 

வாழ்வின் இறுதிவரை அண்ணா படிப்பவராக இருந்தார் என்பது பலரும் அறிந்த செய்தி. அந்தப் படிப்பைத் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் தன்னிகரற்ற தலைவராகத் தன்னை மிக இயல்பாக நிலைநிறுத்திக்கொள்ளவும் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு உபயோகப்படுத்திக்கொண்டார் என்பது நான் உணர்ந்த செய்தி.

 

கல்லூரிக் கல்வி முடியும்வரை தமிழ் இலக்கியங்கள் எவற்றையும் பெரிதாகப் படித்திராத அண்ணா,தமிழனாகிய நாம் அவ்வாறு இருத்தல் கூடாது என்று எண்ணி, அப்போது மண்ணடியில்(பிராட்வே?) இருந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்குச் சென்று அவர்கள் வெளியிட்ட அத்தனை நூல்களையும் மொத்தமாக வாங்கி வந்து படித்து முடித்தார் என்பது ஓர் அரிய செய்தி. அது மட்டுமல்ல எழுத்தெண்ணித் தமிழ் படித்த புலவர்களே வியக்கும் தமிழறிவுக்குச் சொந்தக்காரராகவும் அண்ணா ஆனார்.

 

கம்ப ராமாயணத்தைக் கொள்கை அடிப்படையில் கடுமையாக எதிர்த்த அண்ணா, அதன் இலக்கியச் சுவையைத் தனிப்பட்ட முறையில் பேசும்போது சொல்லி வியக்கத் தவறியதில்லை.

 

அண்ணா யேல் பல்கழக அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற போது,சிந்தனைப் பேரரசே சென்றுவா சிறப்போடு” என்ற தலைப்பில் பாவேந்தர் எழில் என்ற சிறிய இலக்கிய இதழில் எண்சீர் விருத்தத்தில் நான் எழுதி முதல் பக்கத்தில் வெளியான கவிதை அண்ணாவிடம் அளிக்கப்பட்டது என்பது எனக்கு இன்றும் மகிழ்ச்சிதரும் நினைவாக இருக்கிறது.

 

முகம் தெரியாத கவிஞன் என்று கூடப்பார்க்காமல் யாரோ ஒருவர் எழுதி,அது அண்ணாவால் திராவிட நாடு’ இதழில் முதல் பக்கத்தில் ஒரு கவிதை வெளியிடப்பட்ட்து.அதுதான் பின்னர் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீஃபா அவர்கள் தாமே இசையமைத்துப் பாடி தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்றும்கூடக் கேட்கப்படும் “அழைக்கின்றார், அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா…

 

அண்ணா தமிழ் நூல்கள் படித்தார்;ஆங்கில நூல்கள் படித்தார்.அதனால் அவர்Reader is the Leader என்பதற்கேற்ப சிறந்த தலைவராகத் திகழ முடிந்தது என்பதை அறிவார்வம் உள்ளவர்களுக்குக் கவனப்படுத்தவே இந்தக் கட்டுரை.

 

ஏடு தூக்கி இன்று படித்து,நாடு காக்கும் தலைவர்களாக,அறிஞர்களாக நம் மக்கள் நாளை விளங்குதல் வேண்டும் என்பதே நம் விருப்பம்.

 

ஏம்பல் தஜம்முல் முகம்மது

 

newlightpdkt@gmail.com

 

 

From: Syed Muthahar <smuthahar@gmail.com>
Sent: Tuesday, September 17, 2013 10:46 PM
 
 

I thank Yembal Tajammul Mohammad for this wonderful article. Why not some body bring this write up as pamphlet and distribute the same in the colleges run by the minorities. This will create an awareness among our younger generation on the importance of cultivating reading habit.
 
I would like to add one more thing to this article. When Anna was to be operated in US, he requested the doctors to delay the operation by a few more hours so that he could complete the book he was reading. Anna was such a lover of books.
 
Even I have read somewhere that Shaheed Bhagat Singh, the legendary freedom fighter, who was given capital punishment, on the day he was to be hanged pleaded for postponing the punishment by a few more hours for completing a book he was half way through.
 
Our younger generation should be taught from these examples that book reading habit will help them gain confidence and overcome all the drawbacks they face in their life.
 
But unfortunately, reading habit is on the wane not only among the younger generation, but also among the teachers belonging to our community.
 
Janab Thajammul Mohammad sahib, do write more on this subject.
 
Khuda Hafiz,
Muthahar Saqaf, Chief Reporter / Senior Assistant Editor, The Hindu, Tiruchi. 

News

Read Previous

தமிழில் இந்து நாளிதழ்

Read Next

இமாம்களை கண்ணியம் செய்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *