ஆஷூரா தினமும் சுதந்திரப் போராட்டங்களும்!

Vinkmag ad

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தர்

     thahiruae@gmail.com

0097466928662

 

ஆஷூரா தினம், இது இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதத்தின் பத்தாம் நாள் வருகிறது.எகிப்தின் சர்வாதிகாரி பிர்ஆவ்னையும் அவன் படையையும் நிர்மூலமாக்கி  இறைத்தூதர் நபி மூஸா (அலை) அவர்களையும், அவர்களை பின்பற்றிய ஒடுக்கப் பட்ட மக்களுக்கும் சுதந்திரம் மலர்ந்த நாள் இது .

அல்லாஹ் இந்த பூமியில் மனித குலத்தை ஒரே இனமாக படைத்திருக்க ஃபிர்அவ்ன் சாதிகளாக மக்களை பிளவுப் படுத்தினான் .தான் சார்ந்திருந்த கிப்தி குலத்தை சேர்ந்த மக்களுக்கு அரசின் உயர் வேலை வாய்ப்புக்களை கொடுத்த அவன்  அதனை தவிர அங்கு வாழ்ந்த மிகப் பெரிய இனமான பனு இஸ்ரவேல் இனத்தை தாழ்ந்த இனமாகவும்,அம்மக்களை அடிமைகளாகவும் நடத்தினான்.

இவ்வுலகம் முழுவதற்கும் எல்லாக் காலங்களுக்கும் ஆட்சியாளன் மற்றும் படைப்பாளன் அல்லாஹ் என்பதை மறுத்து மாபெரும் புவிப் பரப்பில் ஒரு நாட்டின் ஒரு சில காலங்களுக்கு அரசனாக இருந்த அவன் தன்னை கடவுளாக ,தெய்வமாக பிரகடனப் படுத்தினான்.தன்னை மக்கள் வணங்க வேண்டும் என வற்ப்புறுத்தினான்.

தனது ஆட்சி பனு இஸ்ரவேல் மக்களால் அகற்றப் படலாம் என அச்சப் பட்ட அவன் அந்த இனத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைவரையும் படு கொலை செய்ய ஆணையிட்டான்.இனப் படுகொலைகளை அரங்கேற்றினான்.

.தமது ஆட்சி நிலைக்க மந்திரவாதிகள் மூலம் தந்திரங்கள் செய்தான்.அவனது அக்கிரமம்,சர்வாதிகாரம்,கொடுங்கோன்மை ஆகியவற்றை எதிர்த்து இறைத்தூதர் மூஸா (அலை) பிரச்சாரம் செய்தார்கள்.அவர்களை தந்திரமாக பிடித்து படு கொலை செய்யவும் திட்டமிட்டான் .

சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள் என்பது குர்ஆன் வசனம்.

மிகச்சிறந்த சிறந்த ஜிஹாத் (அறப்போர் ) கொடுங்கோல் அரசனிடம் நீதியை எடுத்து சொல்வதாகும் என்பது நபி மொழி.

அல்லாஹ்வால் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபி மூஸா (அலை) தனது சகோதரர் ஹாரூன் (அலை ) உட்பட நல்லவர்கள் புடை  சூழ கொடுங்கோலன் ஃபிர்அவ்னை சந்தித்து நீதியை எடுத்துச் சொல்ல அங்கே அக்கிரமக்காரன் கோபப் படுகிறான் .அவர்களை எதிர்த்து கொல்ல தம் படையுடன் சூளுரைக்கிறான். அவனிடமிருந்து நபி மூசாவும் அவரது கூட்டமும் தப்பித்து ஓட நைல் நதி கடைசியாக அவர்கள் முன் தடையாக இருக்கிறது .அல்லாஹ்வின் கட்டளைப் படி  தடியால் நதி மீது அடிக்க நீருக்கு இடையே பாதை கிடைக்கிறது .அதில் இறங்கி நடந்து மறு கரையை அவர்கள் வந்து அடைய பின் தொடரும் ஃபிர்அவ்ன் படை அப்போது பாதி பாதையில் வந்துக் கொண்டிருக்க நதியின் நீர் பாதையின் மீது மீண்டும் வர அப்படியே அவர்களை மூழ்கடிக்க செய்கிறது.

இந்த சம்பவம் மனித குலத்திற்கு தரும் படிப்பினைகள் பல

  • பாலஸ்தீனம்,ஈழம்,ஆப்கன்,செசன்யா,பர்மா,குஜராத்,முஜப்பராபாத், மணிப்பூர்  என உலகெங்கும் அடக்கு முறைகளாலும், படுகொலைகளாலும் உறவுகளை இழந்த, உடமைகளை இழந்த ,அகதிகளாய் அனாதைகளாய் ஆன பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் எதிரிகள் ஒரு நாள் வீழ்வார்கள் நீதி கிடைக்கும்.சுதந்திரம் பிறக்கும். என்று சுபச்செய்தியை இந்த சம்பவம் தருகிறது.
  • அக்கிரமக்கார,அநியாயக்கார சர்வாதிகார ,ஆட்சியாளர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த சாவு  மணி இங்கு அடிக்கப் படுகிறது.உங்கள் சர்வாதிகார சட்டங்களும், திரை மறைவு திட்டங்களும் தவிடு பொடியாகும், உங்கள் .ஆயுதங்கள்  ஒரு நாள் வீழும் .அப்போது  பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிலங்களும் நியாயங்களும் நிச்சயம் மீளும் என்பதே அது .
  • ஏகத்துவம்,மனித உரிமை ,சுதந்திரம்,சமத்துவம் ஆகிவற்றுக்காக தங்களை அர்ப்பணிப்பவர்களுக்கு இங்கே ஊக்கம் கொடுக்கப் படுகிறது,.அதற்க்காக அனைவரும் முன்வருமாறு அழைப்பு விடுக்கப் படுகிறது. உண்மை கசப்பாக இருந்தாலும் சொல்லி விடு என்ற நபி மொழிக்கேற்ப உண்மையை ஆளும் வர்க்கம் முன் உரக்கச் சொல்லுங்கள். மூஸா நபிக்கு எப்படி அவர்களின் எதிரி ஃபிர்அவ்ன் வீழ வெற்றிக் கிடைத்ததோ அதே போன்று உங்கள் எதிரிகள் ஒரு நாள் வலுவிழந்து போவார்கள்.வாழ்விழந்து விடுவார்கள் என்பதே அது .

 

இதோ பரிசுத்த குர்ஆன் கூறுகிறது

நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.(28:4)

ஆயினும் (எகிப்து) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.(28:5)

ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் – ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் – அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். (8:54)

எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.( 7:137)

 

நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வருகை புரிந்தார்கள். யூதர்களும் ஆஷூரா தினத்தில் நோன்பிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டுகொண்டார்கள். இந்நாளில் நீங்கள் நோற்கும் நோன்புக்கு காரணம் என்ன? என விசாரித்தார்கள்.

‘இது ஒரு சங்கையான நாள். இந்நாளில் நபி மூஸா (அலை) அவர்களையும், அவர்களின் சமூகத்தாரையும் எல்லாம்வல்ல அல்லாஹ் காப்பாற்றி, ஈடேற்றம் அளித்த தினம். மேலும் சர்வதிகாரி பிர் அவனையும், அவனது பட்டாளத்தையும் (செங்கடலில்) மூழ்கடித்த நாள். எனவே இதற்கு நன்றிகடன்பட்ட நபி மூஸா (அலை) அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள். அவர்களைப்பின்பற்றி நாங்களும் நோன்பு நோற்கிறோம்’ என யூதர்கள் விளக்கமளித்தார்கள்.

இதைகேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உங்களைவிட நாங்கள் மூஸா நபிக்கு அதிகம் நெருக்கமுடையவர்கள், தகுதியுடையவர்கள்’ என கூறிவிட்டு, ஆஷூரா தினத்தில் நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பிருந்து, பிறரையும் நோன்பிருக்கும்படி ஏவினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்).

—————————————————————————————————————————————————————————–

News

Read Previous

டிசம்பர் 20, துபாயில் முதுவை சங்கமம் 2013

Read Next

பாரில் மது பாட்டில்கள்: 3 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published.