அநீதியான ஆட்சி — Dr.K.V.S. ஹபீப் முஹம்மத்

Vinkmag ad

 

 

சர்வாதிகார ஆட்சி !

எதேச்சதிகார ஆட்சி !

இராணுவ ஆட்சி !

மன்னராட்சி !

குல ஆட்சி, குடும்ப ஆட்சி !

இவை நடைபெறும் நாடுகளில் மயான அமைதியே நிலவும். மக்கள் எப்போதும் அச்சத்தோடும், பதற்றத்தோடும், குமுறலோடும், எரிச்சலோடும், வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை நாடுகள் என இவற்றைக் குறிப்பிடலாம்.

சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை, சுதந்திரத்தை விரும்பாத மனிதர்களே உலகில் இல்லை, தாம் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், அவர்களைத் தட்டிக் கேட்கவும், தேவை ஏற்படின் அவர்களைப் பதவியிலிருந்து இறக்கவும் மக்கள் விரும்புகின்றனர்.

இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது, தக்க தருணத்திற்காகக் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் போராட்டம், வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றில் இறங்கி விடுகின்றனர். இன்று உலகில் எந்த நாடுகளில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அந்த நாடுகளில்தாம் அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. மன்னராட்சி, நிலபிரபுக்களின் ஆட்சி, மதத்தலைவர்கள் நடத்திய கொடூர ஆட்சி, காலனி ஆதிக்க ஆட்சி ஆகியவற்றிற்கு எதிராக நடந்த புரட்சிகளின் லட்சக்கணக்கான மக்கள் மாண்ட நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த 21- ஆம் நூற்றாண்டிலும் பல நாடுகளில் குறிப்பாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மன்னராட்சியும், சர்வாதிகார ஆட்சியும், இராணுவ ஆட்சியும் நீடிக்கிறது. சூடானின் இஸ்லாமிய இயக்கத் தலைவர் ஹசன் துராபி முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகம் அனுமதிக்கப்பட்டால், அந்த நாடுகளில் பயங்கரவாதம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்றார். ஆனால் பயங்கரவாதத்தை ஒழிப்பதே தமது லட்சியம் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவு, ஐரோப்பிய நாடுகளும் தமது இலாபங்களுக்காக பல நாடுகளில் மக்களாட்சி மலர்வதைத் தடுத்து, மன்னராட்சி நீடிக்கத் துணைபுரிவது அவர்களின் நயவஞ்சகத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றது.

அமைதியை நிலைநாட்ட விரும்பும் இஸ்லாம் சர்வாதிகாரத்தை முற்றாக ஒழிக்க விரும்புகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியை துவக்கியபோது அரேபியாவிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும், உலகின் பிற பகுதிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஏதும் இருக்கவில்லை. அரபு தீபகற்பத்தில் குலத் தலைவர்களின் ஆட்சி நடைபெற்றது. அரேபியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில், பாரசீக பைசாந்தியப் பேரரசுகள், மன்னராட்சி முறையைப் பின்பற்றி வந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய ஆட்சி முறையைச் செயல்படுத்தினார்.

பொது விவகாரங்களில் எந்த ஒரு தனிமனிதரும், குடும்பமும், குலமும், தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடாது. மக்களைக் கலந்து ஆலோசனை செய்து, பொதுக் கருத்துக்கு ஏற்பவே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று விதித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முடிவு திருக்குர்ஆனின் கட்டளைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவாகும்.

“அவர்கள் தங்களின் காரியங்களை பரஸ்பரம் ஆலோசனை செய்து நடத்துகின்றார்கள்.” (42 : 38) என்ற வசனம் கலந்து ஆலோசனை செய்யாமல் முடிவுகள் எடுக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியது. இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வேளைகளில் தமது தோழர்களைக் கலந்து முடிவுகளை எடுத்துள்ளார்கள்.

நபிகள் நாயகத்தின் காலத்திற்குப் பின், நபித்தோழர்கள் தமக்கிடையே ஆலோசனை செய்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் ஒப்புதலைப் பெற்று (பைஅத்) ஆட்சியில் அமர்ந்தனர். ஆட்சியாளர்களைப் பிடிக்கவில்லை எனில் ஒப்புதல் தர மறுத்து, தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் ஆட்சி புரிந்த முதல் நான்கு கலீஃபாக்களும், இந்த வழிமுறையையே பின்பற்றினர். தமது குடும்பத்தினரை அரசியல் வாரிசுகளாக நியமிக்கவில்லை.

ஆட்சித்திறனும், நேர்மைத்திறனும் உள்ளவர்களையே பதவியில் அமர்த்த வேண்டும் என விதிக்கப்பட்டது. பதவிக்குத் தகுதியுள்ளவர்கள் இருக்க, மற்றவர்களைத் தேர்ந்தெடுப்பது துரோகச் செயல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘பதவிக்குத் தகுதியானவர் இருக்க அவரை[ புறக்கணித்து தகுதியற்றவரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பவர், இறைவன், இறைத்தூதர், இறைநம்பிக்கையாளர்கள் ஆகியோருக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவராவார்.’ (நூல் : ஹாகிம்)

’பதவிக்காக ஏங்குபவர்களையும், பதவியை அடைய முயல்பவர்களையும் நாம் பதவியில் அமர்த்த மாட்டோம்.’

’மனிதர்களில் சிறந்தவர்கள், பதவி தானாகவே அவர்களை வந்தடையும் வரை, அதனை அறவே விரும்பாதவர்களாகவே இருப்பர்.’ (நூல் : புகாரி, முஸ்லிம்) என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுகள் எப்படிப்பட்டவர்களைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. சர்வாதிகார ஆட்சியைப் போலவே, பதவி வெறியர்களின் ஆட்சியிலும் மக்கள் அமைதியை இழப்பர் என்பது அனைவரும் அனுபவித்த உண்மை. ஆட்சியைப் பிடிக்க மதவெறி, மொழி வெறி, பிராந்திய வெறி, சாதி வெறி ஆகியவற்றைத் தூண்டி விடுவார்கள். தாதாக்களையும், குண்டர்களையும் ஏவிவிட்டு, மக்களையும், அதிகாரிகளையும் மிரட்டி வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி ஆட்சிக்கு வருவார்கள்.

நல்லவர்களைப் பதவியில் அமர்த்துவதோடு மக்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. ஆட்சியாளர்களின் செயல்களைக் கண்காணித்துத் தட்டிக் கேட்டு அவர்களை நெறிப்படுத்துவதும், மக்களின் கடமையும் உரிமையுமாகும்.

‘கொடுங்கோல் ஆட்சியாளனின் முன் உண்மையை எடுத்துரைப்பது மாபெரும் அறப்போர் (ஜிஹாத்) ஆகும்.’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் தமது பதவி ஏற்பின் போது, ‘தவறுகளைச் சுட்டிக்காட்டுவது இறை நம்பிக்கையின் அடையாளம். மூடி மறைப்பது துரோகத்தின் அடையாளம்’ என்றார்.

ஒருமுறை ஒரு குடிமகன் இரண்டாவது கலீஃபா உமரை நோக்கி, ‘உமரே ! இறைவனை அஞ்சி நடந்து கொள்வீராக ! என்று கூறினார்.

அவையிலிருந்தோர் அவரைத் தடுத்தனர். அதனைக் கண்ட உமர், அவரை விட்டுவிடுங்கள். அவர் கூற விரும்புவதை கூறட்டும். இவ்வாறு தட்டிக் கேட்கவில்லை எனில், அவரிடத்தில் எந்தச் சிறப்பும் இல்லை. அதனை நாங்கள் செவியேற்கவில்லை எனில், எங்களிடம் எந்தச் சிறப்பும் இல்லை’ என்றார். கலீஃபாக்களைத் தட்டிக் கேட்ட இதுபோன்ற சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்களில் நிரம்பிக் கிடக்கின்றன.

தட்டிக் கேட்கும் அனுமதி மறுக்கப்படுமாயின், மக்கள் மீது அவிழ்த்து விடப்படும் கொடுமைகள் மூடி மறைக்கப்பட்டு, மக்கள் தொடர்ந்து துன்பத்துக்குள்ளாவர். தீவிரவாதமும், பயங்கரவாதமும் தலைதூக்கும்.

இஸ்லாமிய ஆட்சி முறையில் கொள்கைகள் இறைவனால் அருளப்படும். அதனை செயல்படுத்தும் ஆட்சியாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களின் ஆலோசனைகளைப் பெற்று ஆட்சி புரிவர். இத்தகைய ஆட்சி முறையில் மட்டுமே முழுமையான அமைதி நிலவ முடியும்.

 

நன்றி : நர்கிஸ் – மே 2014

News

Read Previous

கோடைக்கேற்ற உணவு வகைகள்

Read Next

சர்க்கரை நோய் குறித்து ஆன்-லைன் கணக்கெடுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *