பொறை ஒன்றும் குறை அன்று

Vinkmag ad

பொறை ஒன்றும் குறை அன்று !

எஸ் வி வேணுகோபாலன் 


யார் குடை என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்குமுன் ஒரு கவிதை வாசித்த நினைவு, அநேகமாக ஆனந்தன் என்ற கவிஞர் எழுதியதாக இருக்கக்கூடும். எப்போதும் குடையை  எங்காவது மறந்து வைத்துவிட்டு வந்துவிடும் ஒருவர் அன்று சிற்றுண்டிச் சாலை ஒன்றில் உணவு முடித்துக் கொண்டு வெளியே வருகையில் ஞாபகமாகக்  குடையோடு வெளியே வருகிறார். நல்ல மழை பெய்து கொண்டிருக்க, குடையை விரிப்பவர், அருகே நிற்பவரையும் அழைத்து அரவணைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்து வருகிறார். வீடு வந்து சேர்ந்ததும், வாசலில் நின்றிருக்கும் மனைவி, ‘இன்றைக்குக் குடையை மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டீர்களே, இந்த மழையில் எப்படி வருவீர்களோ என்று பார்த்திருந்தேன்’ என்கிறார். உங்கள் ஊகம் சரிதான், உடன் வந்த அப்பாவியின் குடை தான் அது, ஆனால், அவர் எதுவும் சொல்லாமல் குடையோடு  நடை போட்டுப் போய்விடுகிறார்.
நரம்பியல் மற்றும் தோல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜெ பாஸ்கரன் அவர்களது சிறுகதை ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கல்கி இதழில் வந்திருந்தது. ரயில் பயணத்தில் குறட்டை விடும் பெரியவரை, சற்று இளவயது சக பயணி எழுப்பி உட்கார வைத்து மிகவும் கடுமையாகச் சாடுகிறார். குறட்டை சத்தத்தில், தன்னுடைய குழந்தை எப்படி தூங்கும் என்பது அவரது கேள்வி. தனக்குத் தெரிந்த அரைகுறை வைத்திய சிகிச்சை முறைகளை எல்லாம் அந்த நள்ளிரவு நேரத்தில் பெரியவருக்கு உபதேசிக்கிறார். 
காலையில் பெரியவர், மேல் படுக்கையில் இருக்கும் பயணியை எழுப்பி, ‘இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது, உங்கள் குழந்தை பாவம் உறக்கத்தில் சிறுநீர் கழித்திருக்கிறாள் போலிருக்கிறது, பாவம், நனைந்த உடையிலேயே படுத்திருக்கிறாள், எழுப்பி உடையை மாற்றி விடுங்கள்’ என்று கூறி விட்டுத் தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கிப் போகிறார். பெரியவர் வெளியே போய், தமது வேட்டியின் பாகம் நனைந்திருப்பதை உதறிச் சரி செய்து கொண்டு நடப்பதை சன்னல் வழி பார்க்கிறான் சக பயணி.  தன்னிடம் ஒன்றுமே புகார் செய்யாமல், சிறுமி படுக்கையில் சிறுநீர் போகாமல் இருக்க எடுக்க வேண்டிய சிகிச்சை பற்றித் தனக்கு வகுப்பு எதுவும் எடுக்காமல் தனது வழியே போகும் பெரியவரை அவன் குற்ற உணர்ச்சியோடு பார்க்குமிடத்தில் நிறைவு பெறும் அந்த எளிய கதையின் தலைப்பு சகிப்பு. 
அறியாமல் நிகழும் விஷயங்களைப் பொறுத்திடல், அறிந்த மனிதர்கள் சிலபோது அதீதமாக நடந்து  கொண்டால் கூட அதைப் பொருட்படுத்தாது இருத்தல் போன்ற தன்மைகள் அப்படியான மனிதர்களது இயலாமை அல்ல, வலுவான பண்பாக்கம். 
வேதம் புதிது திரைப்படத்தில், ஒரு சிறுவன் தன்னைப் பார்த்து, ‘பாலுங்கிறது உங்க பேரு, பின்னால இருக்க தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்கிய பட்டமா?’  என்று கேட்கையில் கோபம் கொள்ளாது சிந்திக்கும் பாத்திரத்தில் தோன்றியிருப்பார் சத்யராஜ்.  
சமூகத்தின் பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருப்போர் தம்மைப் பற்றிய விமர்சனங்களை எப்படி கையாளுகின்றனர் என்பதில் விதவிதமான மனிதர்களைப் பார்க்க முடியும். எப்போதும் தம்மை விமர்சித்து கேலி சித்திரங்கள் வரைந்து தள்ளிக் கொண்டிருந்த புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்ட் சங்கரிடம் பண்டித நேரு ஒரு முறை பேசும்போது, ‘கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி ஒன்றுமே வரையவில்லையே, நான் எல்லாமே அத்தனை சரியாகவா செய்து கொண்டிருக்கிறேன், ?’ என்று ஏக்கமான முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாராம்.  தன்னைக் கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் மக்சீம் கார்க்கி மீது அளவற்ற மதிப்பும், நேயமும் நட்புறவும் கொண்டிருந்தாராம் லெனின். 
அதே நேரத்தில், வேண்டுமென்றே எதையாவது சொல்வோரைத் திறமையாகக் கையாளுவோரும் இருக்கின்றனர்.  சிற்பி ஒருவரின் அருமையான கலைப் படைப்பைப் பார்க்கவந்த விமர்சகர் ஒருவர்,  ‘மூக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் கூர்மையாக வந்திருந்தால் சிறப்பாக இருக்கும்’  என்றாராம். உடனே சிற்பி கொஞ்சம் தட்டிச் சரி செய்தவுடன், அந்த விமர்சகர், ‘பார்த்தீர்களா, இப்போது எப்படி மின்னுகிறது மூக்கு!’ என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாராம். அப்போது சிற்பி, ‘நான் உளியை எடுக்கவே இல்லை, உங்கள் ஆசைக்காக மேலிருந்து நானே சிதறவிட்ட தூள் தான் நீங்கள் பார்த்தது’ என்றதும் அந்த விந்தை மனிதர் தலை கவிழ்ந்தாராம்.
(வாழ்க்கையின் வண்ணங்கள் தொடரும்)கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com அலைபேசி எண்: 9445259691

ReplyForward

News

Read Previous

நிம்மதி – சிறுகதை – ஹிமானா சையத்

Read Next

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *