வாழ்க்கையை எளிமையானதாக மாற்றிடலாம்

Vinkmag ad

வாழ்க்கையை
எளிமையானதாக மாற்றிடலாம்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானதாக மாறியிருக்கிறது. இந்தச் சிக்கல் நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. நாம் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்…

அடிமனத்திலிருந்து வெறுக்கும் விஷயங்களை ஓய்வின்றிச் செய்துகொண்டிருக்கிறோம். மிகையான காரியங்களில் கவனத்தை திசைதிருப்ப அனுமதிக்கிறோம்…

சிக்கலான எண்ணங்களால் மனங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படியொரு வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம். மனங்களைச் சுரண்டும் இந்த வாழ்க்கையைத்தான் நாம் நவீன வாழ்க்கைமுறை என்கிறோம்…

இத்தகைய சிக்கலான ஓர் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அதன் தாக்கம் நம்மிடம் இருக்கவே செய்யும். ஆனால்!, எண்ணங்கள், செயல்கள், மனப்பான்மை போன்ற அம்சங்களால் நம்மால் நம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ள முடியும்…

நம்மைச் சுற்றி நடக்கும் குழப்பங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும். அத்துடன், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் ஊக்கவிக்க முடியும். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதற்குச் சில வழிகள் உள்ளன…

நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்யும்போது வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. பிடிக்காத செயல்களை ஏதோ ஒரு வற்புறுத்தல் காரணமாகச் செய்யும்போது வாழ்க்கை சலிப்பாகிவிடும்…

ஆனால்!, நம்மில் பெரும்பாலானவர்கள் பிடிக்காதவற்றைச் செய்வதற்குத்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பிடிக்காத வேலை, படிப்பு, உறவு போன்றவற்றை ஏதோவோர் அழுத்தத்துக்குப் பயந்து தொடராமல், பிடித்த விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்து அதில் நம் ஆற்றலைப் பயன்படுத்துவோம்…

இதைச் செய்யும்போது வாழ்க்கை நமக்குப் பிடித்த வகையில் முழுமையாக மாறி விடும். வாழ்க்கையில் நமது ஆற்றலின் பெரும்பகுதியை மற்றவர்களைத் தீர்மானிப்பதற்காகச் செலவிடுகிறோம். இந்தத் தீர்மானிக்கும் மனப்பான்மை நமக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்குகிறது…

இது ஒருவரிடம் இருந்து மற்றொருவரைப் பிரித்து வைக்கிறது. ஒருவருக்கொருவர் மோதலையும் உணர்வுகள் அளவிலான வலியையும் உருவாக்குகிறது…

மற்றவர்களின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்கும்போது, அவர்களை நம்மால் கூடுதல் அக்கறையுடனும் புரிதலுடனும் அணுக முடியும்…

இந்தத் தீர்மானிக்காத மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், உறவுகளைச் சிக்கலாக்கிக் கொள்ளாமல் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்…

ஆம் நண்பர்களே.

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகளைக் கடந்துதான் முன்னேற வேண்டும். ஆனால்!, அந்தத் தடைகளைப் பற்றித் தொடர்ந்து குறைபட்டுக் கொண்டேயிருப்பது எந்த வகையிலும் நமக்கு உதவாது.

அத்துடன், இப்படிக் குறைபட்டுக் கொண்டேயிருப்பது, வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதிக்க விடாமல் தடுத்து விடும். அதனால்!, சிக்கல்களைப் பற்றிக் குறைபடுவதற்குப் பதிலாக, அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பது சிறந்தது.

நாம் பிறந்ததிலிருந்தே, நம்மை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவது இல்லை. சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் நம்மிலிருந்து வித்தியாசமான ஒரு மனிதராக மாற நாம் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.

நம்மிடம் ஏதோ சிக்கல் இருப்பதாக நாமே நம்பத்தொடங்கி விடுகிறோம். அதனால்!, நமது அகத்திலிருந்து வரும் குரலையும் நம்ப மறுக்கிறோம்.

மற்றவர்கள் நம்மைப் பற்றித் தெரிவிக்கும் கருத்துகளை வைத்தும் நம்மைத் தீர்மானிக்கத் தொடங்குகிறோம். ஆனால்!, உண்மை என்னவென்றால், நமக்கு எது சிறந்தது என்று நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

அதனால், உங்கள் அகத்திலிருந்து வரும் குரலைக் கவனித்து, அது சொல்லும் பாதையில் நடக்கத் தொடங்குங்கள். வாழ்க்கை எளிமையானதாகவும், சிறந்ததாகவும் மாறி விடும்.

News

Read Previous

தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர்.

Read Next

மயிலிறகு மனசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *