இராமாயணப் பிரசங்க பொன்நெட்டி மாலைச் சர்க்கரைப்புலவர்

இராமாயணப் பிரசங்க பொன்நெட்டி மாலைச் சர்க்கரைப்புலவர்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கடாரம் எனும் ஊர் உள்ளது. தற்போது கீழக்கிடாரம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் சாந்தப்பிள்ளை என்பவரின் மூத்த மனைவியின் குமாரர் சர்க்கரைப்புலவர் ஆவார். “சைவப் புலவர் இராமநாதபுரம் கடார ஊரினர்” தமிழ்ப் புலவர் அகராதி, ப.86) “சிறுகரும்பையூர்ச் சர்க்கரைப் புலவர் என்பவரும் இவரே” (பிற்காலப்புலவர்கள், ப.78) ‘‘சர்க்கரைப்புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. அவர் பாடும் கவிகளில் அமைந்த பாகெனுமினிமையைப் பாராட்டிச் சர்க்கரைப்புலவர் எனும் பெயரைச் சேதுபதி இவருக்கு அளித்தார் என்பர்” (சேது மன்னர்களின் தமிழ்ப்பணி, ப.37) இவரது காலம் கி.பி.17 ஆம் நூற்றாண்டாகும்.
சர்க்கரைப்புலவர் எனும் பேரில் பலர் உள்ளனர். தஞ்சை மராட்டிய மன்னன் பிரதாபசிங் காலத்தில் (1739-1763) ‘மிழலைச் சதகம்’ எனும் நூலைப் பாடியவர் ஒரு சர்க்கரைப்புலவர். வேதாந்த சூடாமணி என்னும் நூலுக்கு உரை இயற்றியவர் பெயரும் சர்க்கரைப்புலவர். ஓரியூர்ச் சீமை மாகாணத்தில் உள்ள அஞ்சு கோட்டைப் பத்திலுள்ள நாட்டார், பிள்ளைமார், அம்பலக்காரர், முக்கந்தர் ஆகிய நாட்டார் பலர். பாகவத காவியப் பிரசங்கி என்று போற்றப்பட்ட சர்க்கரைப்புலவர் ஒருவர். தமிழ்நாவலர் சரிதையில் ஒரு சர்க்கரைப்புலவர் குறிக்கப் பெறுகிறார்.
பொன்நெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் திருவாவடுதுறை ஆதீனத்துச் சின்னப்பட்டம் சிவக்கொழுந்து தேசிகரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று தம் புலமையை வளர்த்துக் கொண்டவர். திருமலை ரகுநாத சேதுபதி, கிழவன் ரகுநாத சேதுபதி, விஜயரகுநாத சேதுபதி ஆகிய மூன்று சேதுபதி மன்னர்களின் காலத்தில் சேதுநாட்டின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்துள்ளார்.இவர் திருச்செந்தூர்க் கோவை எனும் நூல் எழுதியுள்ளார். வேதாந்த சூடாமணி எனும் நூலிற்கு உரை எழுதியுள்ளார். இவர் கம்பராமாயணப் பிரசங்கத்தை இனிமையாக நடத்தக்கூடியவர். பார்ப்போரைக் கட்டி இழுக்கும் திறமை இவரிடம் இருந்தது. அவ்வாறு சேதுபதி மன்னர் வியந்து இவருக்குப் பொன்னால் நெட்டிமாலை செய்து அன்றைக்கே ‘இராமாயணப் பிரசங்க பொன்நெட்டி மாலைச் சர்க்கரைப்புலவர்’ எனும் பெயர் சூட்டினார். அதுமட்டுமின்றி உழக்குடி எனும் கிராமத்தைச் சர்வமானியமாக அளித்துள்ளார். இதனை,
“வந்தசெயபாரத இராமாயணத்திலே வாடாத நெட்டிமாலை/ மருவிட்ட திருவிட்டு வழுவாது நழுவாது வாசா மருகா சரமதாய்க்/ சிந்தைமிகவே சற்றுமலையாக சபையிலே செய்யும் பிரசங்க நிபுணன்/ சேதுபதி சித்தமகிழ் சர்க்கரைக் கவிராச சிங்கம்யா மெழுது நிருபம்” எனும் அடிகளின் மூலம் அறியலாம். (சேது மன்னர்களின் தமிழ்ப்பணி, ப.38)
இப்புலவருக்குத் திருமலை ரகுநாதசேதுபதியால் சிறுகம்பையூரில் மானியம் விடப்பட்டுள்ளதென செ.கந்தசாமி குறிப்பிடுகின்றார். இவருக்குச் சேதுபதி மன்னர் சிவிகை, வெள்ளி கட்டிய தடி ஆகிய பரிசில்களை அளித்துப் பாராட்டியுள்ளார். இவருக்கு நெட்டிமாலையும், சிவிகையும் வழங்கப்பட்டது மற்றும் நாகை, ஓரூர், கடாரம், சிறுகம்பையூர் ஆகிய ஊர்களில் வாழ்ந்து வந்தமை பற்றிய செய்தியினை
“பஞ்சவனா கியாண்டி யன்றன்றேசம் பலவற்று ளேசேது பதிமன்சீமை/ மஞ்சுலவு காவளருங் கடாரநாகை வளரோரூர் சிறுகம்பை யூரில் வாழ்வோன்/ மிஞ்சுபுக ழிராமாய ணப்பிரசங்கி விருதுநெட்டி மாலையுஞ் சிவிகையும் பெற்றோன்/ தஞ்சமென்றே யாதிரத்தி னேசர்பே” / (சேது மன்னர்களின் தமிழ்ப்பணி, ப.38) எனும் பாடல் வாயிலாக அறியலாம்.
கோட்டக்குடிச் செப்பேடு
சேதுபதி செப்பேடு என்னும் நூலில், கோட்டக்குடிச் செப்பேடு எனும் தலைப்பில் கோட்டக்குடி, கொந்தலான் வயல் ஆகிய ஊர்களை முத்து வயிரவநாதர் கொடையாக வழங்கியுள்ளார் எனும் செய்தி காணப்படுகிறது. கோட்டக்குடிச் செப்பேட்டின் காலம் 16.11.1711 ஆகும் விசய ரகுநாதசேதுபதி மன்னர் காலத்தில் அரசரின் தமையனார் முத்து வயிரவநாதர் இச்செப்பேட்டை அளித்துள்ளார். இதனை.
‘ “… … … … … கிடா/ ரத்திலிருக்கும் சாந்துப்பிள்ளை புத்திரன் ராமாயணப் பிரசங்கம் சர்க்/ கரை புலவருக்கு” -(கோட்டக்குடிப் செப்பேடு வரிகள் 21-22) “கெல்கைக்குட்படா கோட்டக்குடி கொந்தலன் வயல் நஞ்சை புஞ்சை/ மாவடை மரவடை திட்டுத் திடல் மேல்” (கோட்டக்குடிச் செப்பேடு: வரி 28) எனும் செப்பேட்டுச் செய்திகள் மூலம் அறியலாம்.
இராமாயணம் பிரசங்கத்தில் ஆழங்கொண்ட இவரைச் சேதுபதி மன்னர் ‘பாகெனுமினிமையாய் பாடக்கூடியவர்’ எனப் பாராட்டியுள்ளார். இத்தகு சிறப்புமிக்க இவர் முதுகுளத்தூர் அருகேயுள்ள கடாரம் எனும் ஊரில் பிறந்தவர் என்பது பெருமைக்குரியதாகும் .
முனைவர் சே.முனியசாமி, ஆய்வாளர், மதுரை







