என்னைத்தான் பார்க்கவில்லை!
என்னைத்தான் பார்க்கவில்லை!
காசு பணம் சரி பார்த்தேன்
நகை நட்டு சரி பார்த்தேன்
சொத்து சுகம் சரி பார்த்தேன்
என்னைத்தான் பார்க்கவில்லை!
பட்டி தொட்டி சரி பார்த்தேன்
பற்று பாசம் சரி பார்த்தேன்
பங்கு பாகம் சரி பார்த்தேன்
என்னைத்தான் பார்க்கவில்லை!
ஆட்டம் பாட்டம் சரி பார்த்தேன்
தோட்டம் துரவு சரி பார்த்தேன்
அக்கம் பக்கம் சரி பார்த்தேன்
என்னைத்தான் பார்க்கவில்லை!
ஊர் உலகம் சரி பார்த்தேன்
உறவு முறை சரி பார்த்தேன்
வரவு வரை சரி பார்த்தேன்
என்னைத்தான் பார்க்கவில்லை!
நடந்து வந்த பாதையிலே
கடந்து வந்த பயணத்திலே
எத்தனையோ பார்த்துவிட்டேன்
என்னைத்தான் பார்க்கவில்லை!
- முனைவர் மு. அ. காதர்
சிங்கப்பூர்