முயற்சி வேண்டும்..!

Vinkmag ad

முயற்சி வேண்டும்..!

ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.
அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை.
அதனால்அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.

ஒருநாள் திடீரென்று
“”இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?”
என்று சந்தேகம் வந்தது.

பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்துகொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு “”இன்று எனக்கு உணவு கிடைக்குமா?
இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே…” என்று யோசித்தது.

உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,

“இறைவா,

இன்று எனக்கு உணவு கிடைக்குமா?” என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்.

“”உனக்கு இன்று உணவு உண்டு” என்று பதில் கூறியது.

மிக்க மகிழ்ச்சியுடன் “இன்று இரை தேடும் வேலை இல்லை,
எப்படியும் உணவு கிடைத்துவிடும்”

என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.
ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.

மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.
“”நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே” என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது.

“என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?”

என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.
“குழந்தாய் சற்று திரும்பிப் பார்.

உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது
”கழுகு பின்னால் சென்று பார்த்தது.

அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.

கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
“இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?’

இறைவன் பதிலளித்தார்.

“குழந்தாய்,

உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.

நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.

திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.

“கடுகளவேணும் முயற்சி வேண்டும்.

ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.

அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்” என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..

தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்
ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .

முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை…

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை…

முயற்சி திருவினையாக்கும்…!

News

Read Previous

கண்ண தாசனின் …..

Read Next

வேளாண்மைப் படிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *