வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி…!

Vinkmag ad

”வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி…!”
………………………………………

பெரும்பாலனோர் கடினமான வேலை என்றாலும் ஏதோ கிடைத்த வேலையில் சேர்ந்து விடுகின்றார்கள். ஆனால்!, கடினமான வேலைகள்தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்கும், உலகிற்கும் அடையாளம் காட்டுகின்றன…

அதன் மூலம் நம்முடைய தனித் திறன்கள் என்ன வென்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன் முதலாக தெரிய வருகிறது…

ஒரு செயலில் இறங்க வேண்டுமா…!? என்ற தயக்கம் எழுகிறபோது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும் என்றுதான் உள்மனது சொல்லும்…

ஆனால்!, இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்த உடனேயே புத்தம் புதிய உலகம் நமக்காகத் திறந்து கொள்கிறது…

ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸி சிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்து வந்த இளைஞர் ஒருவரின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலை பார்த்தார்…

விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞரும் செல்வார். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவருக்கு செங்கல் சுமப்பதொன்றும் மகிழ்வான வேலையல்ல…

ஓரிடத்தில் நின்று கொண்டு, தன்னிடம் வீசப்படும் செங்கற்களைப் பிடித்து, அதே வேகத்தில் அடுத்தவரிடம் வீசுகிற வேலையில், வெய்யிலில் உலர்ந்தும், வியர்வையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும்.

ஆனால்!, அந்த இளைஞர் மன உறுதியுடன் செயல் பட்டார். செங்கற்கள் கைகளில் வந்து விழுகின்ற போதெல்லாம் கரங்களைப் போலவே அவன் மனதிலும் உரமேறிக் கொண்டிருந்தது…

ஒவ்வொருமுறை செங்கல்லைப் பிடிக்கும் போதும் வாழ்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உறுதி கொண்டார் அந்த இளைஞர்.

கைகளில் செங்கல்லைத் தாங்கிக் கொண்டே ஒரு கால்பந்து வீரனாக தான் வரவேண்டும் என்ற கனவுக்கு நெய் வார்த்துக் கொண்டிருந்தார் அவர்…

அந்தக் கனவு நனவானது. உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரராய் வளர்ந்த ஜெர்ரி ரைஸ்தான் அந்த இளைஞர்…

ஜெர்ரி ரைஸ், தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது கூறியவை வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற வெற்றிச் சூத்திரங்கள்…

ஜெர்ரி ரைஸ் சொல்கிறார்..,

என்னை நோக்கி வீசப்பட்ட செங்கற்களைப் பிடிப்பது வேறு வழியில்லாத வேலை. ஆனால்!, பலர் வெட்டி வேலை என்று விமர்சனம் செய்தார்கள்.

ஆனால்!, அந்த வலி மிகுந்த பொழுதுகளை என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டு எதிர்காலத்தின் வரைபடத்தை இதயத்தில் வரைந்து கொண்டேன்…

அந்த வலியில் விழுந்த வியர்வைத் துளிகள் என்னுள் வைராக்கியத்தை வளர்த்தன. எதையும் எதிர் கொள்ளும் துணிச்சலைக் கொடுத்தன…

கொளுத்தும் வெய்யிலில் அயராது நிற்கும் பொறுமை, வாய்ப்புகளுக்காகக் காத்து இருக்கும் பக்குவத்தை பரிசாய்த் தந்தது…

ஆம் நண்பர்களே…!

வாழ்க்கையில் வெற்றி பெற..,

🔹 சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்…!

🟡 வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதில் விடாமுயற்சி இருக்க வேண்டும்…!

🔹 வென்று காட்ட வேண்டும் என்ற பிடிவாதம் இருக்க வேண்டும்…!!

🔴 அடைவதற்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்…!!

🔹 அந்தக் குறிக்கோள்களில் ஒரு தீவிரம் இருக்க வேண்டும்…!!!

⚫ ஆம், எந்தச் சூழலிலும் துணிவாக முடிவெடுப்பதும், தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்…!!!

-உடுமலை சு. தண்டபாணி✒️

News

Read Previous

வேண்டாம் ஏளனம்!

Read Next

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *