மரணமும்-கடமையும்!

Vinkmag ad

மரணமும்-கடமையும்!

நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடம் சென்று பகைமையினை மறந்து நலம் விசாரிப்பதும், இறந்தவர்களுக்கு சிறந்தமுறையில் அடக்கம் செய்வதற்கும் இஸ்லாத்தில் பல ஹதீதுகள் இருக்கின்றன. அவர்களுக்கு இறைவன் பாவங்களை மன்னிக்கும் பரிசுகளை வழங்குகிறான் என்றும் கூறியிருப்பதினை நீங்கள் அறிவீர்கள். ஆனால் சிலர் அதற்கு மாறுபட்டு இருப்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கின்றேன்.

மூன்று சம்பவங்களை எடுத்துக் கூறி சிலர் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதினை விளக்கலாம் என எண்ணுகிறேன்.

1 ) சென்னை புதுத்தெருவில் வாழ்ந்த திண்டுக்கலைச் சார்ந்த நடைப் பயிற்சி  நண்பர் ஹசன் இறந்து விட்டார் என்று நானும் எனது நண்பர் கீழக்கரை அமீரும் அங்கு சென்று மவுத்து சம்பந்தமாக அவருடைய மகனிடம் விசாரித்து விட்டு வெளியே ஜனாஸா எடுப்பதற்கு அமர்ந்திருந்தோம். அந்த இடத்திற்கு நான்கு கட்டிடத்திற்கு அப்பால் இருக்கும் இன்னொரு நடைப் பயிற்சி நண்பர் நூருல்  அமீன் அவர்களிடம் ஹசன் மவுத்து சம்பந்தமாக சொல்லி நாங்கள் அங்கே இருக்கின்றோம் என்றும் சொன்னோம். ஆனால் அவர் ஜனாஸா எடுத்து செம்புதாஸ் பள்ளியில் ஜனாஸா தொழுகின்றவரை வரவில்லை. மறுநாள் நடைப் பயிற்சிக்கு வந்தவரை ஏன் வரவில்லை என்று கேட்டோம், அதற்கு அவர், ‘எனக்கு மவுத்தானவர் உடலைப் பார்த்தால் பயம்’ என்றது எங்களை ஆச்சரிய பட வைத்தது.

2 ) நடைப்பயிற்சியில் ஈடுபடும் மற்றொரு நண்பர் கஸ்தூரியா என்பவரிடம் ஒரு நபர் வந்து ‘நான் இன்னொரு நடைப் பயிற்சி நண்பர் தினகரன் தாயார் இறந்ததிற்கு சென்று விட்டு வருகிறேன்’ என்று அப்பாவித் தனமாக சொல்லி விட்டு  கஸ்தூரியாவிடம் கைகொடுத்தார். அவர் உடனே கையினை எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றதும் மனைவியிடம் ஒரு வாலி தண்ணீர் வாங்கி நடைப் பயிற்சி உடையுடன் தலையில் ஊற்றிவிட்டு வீட்டுக்குள் சென்றதாக அவர் சொன்னது இன்னொரு ஆச்சரியமாக இருந்தது.

3 ) மூன்று வருடத்திற்கு முன்பு ஒரு அதிரையினைச் சார்ந்த நடைப் பயிற்சி பெரியவர் மவுத்தாகி விட்டார் என்று பார்ப்பதிற்காக நாங்கள் அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பள்ளிக்கு சென்றோம். அவருடைய ஜனாஸா வைக்கப் பட்டு இருந்தது. அதனை சுற்றி பிரமுகர்கள் நின்றார்கள். நாங்கள் அடக்கம் எங்கே என்று வினவியதிற்கு அதிரையில் என்று சொன்னார்கள். நாங்கள் அரை மணி நேரம் நின்றோம். ஆனால் குழுப்பாட்டுவதிற்கான எந்த முயற்சியும் இல்லை. வினவியதிற்கு குழுப்பாட்டுவதிற்கு ஒருவரை வரவழைத்துள்ளோம்  அவர் இன்னும் வரவில்லை என்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இஸ்லாத்தில், ‘ஒருவர் ஜனாஸாவினை குளிப்பாட்டி இறந்தவருடைய துர் வாடையை சுத்தம் செய்தால் அவருடைய பாவங்கள் அல்லாஹ்வால் மன்னிக்கப் படும்’ என்ற ஹதீதுகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல் எப்படி, யார் குளிப்பாட்ட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

1 ) ஆண் மையத்திற்கு ஆண்களும், பெண் மையத்திற்கு பெண்களும் குளிப்பாட்டி சுத்தம் செய்ய வேண்டும்.

2 ) ஆனால் கணவனுக்கோ, மனைவிக்கோ அல்லது குழந்தைக்கோ யாரும் செய்யலாம், “இபின் மஸ்ஜித்’.

3 )  அபூபக்ர்(ரழி) அவர்கள் மவுத்தின் போது அவருடைய மனைவி அஸ்மாவும், அவருடைய மகன் அப்துர் ரஹ்மானும் குளிப்பாட்டியதாக வரலாறு.

4 ) குளிப்பாடுவர் முதலில் தொழுகையினை கடைப் பிடிப்பவராக இருக்க வேண்டும்

5 ) ஜனாஸா குளிப்பாட்டிய பிறகு கை, கால் சுத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் குளிக்க வேண்டிய அவசியமில்லை.

6 ) ஜனாஸாவினை முதுகு பக்கம் பலகையில் இருக்கும் படியும், முகம் கிபிலா நோக்கியும் இருக்குமாறு கிடைத்த வேண்டும்.

7 ) ஒரு துணியை தொப்புலிருந்து முன்னங்கால் வரை போர்த்த வேண்டும்.

8 ) ஜனாஸா உடுத்தியிருந்த ஆடையினை களைய வேண்டும்.

9 ) ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து தலையிலிருந்து கால் வரை மூன்று முறை ஊற்ற வேண்டும்.

10 ) வயிற்றில் கையினை வைத்து கழிவு வெளியேறும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.

11 ) ஆண் உறுப்பிலிருந்தும், ஆசன வாயிலிருந்தும் வெளியேறும் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.

12 ) முடியின் முடிகிச்சுகளை அவிழ்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

13 ) உடலை மூன்று முறை சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

14 ) கடைசியில் பல மண பொருள்கள் கொண்ட தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

15) உடலில் ஒரு துணி கொண்டு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

16 ) அதன் பின்பு ஓலைப் பாயில் ஜனாஸாவினை எடுத்து அத்தர் கற்பூர பொடி தூவிய   கபன் துணிமேல் வைத்து ஜனாஸாவினை மூடி கால், தலையினை துணிக் கயிறால் கட்டி சந்தூக்கில் வைத்து துவா ஓதி பள்ளிவாசலில் தொழுகை வைப்பதிற்காக தூக்கிச் செல்வார்கள்.

 

ஜனாஸா குழுப்பாட்டினை, கபன் இடுதல் போன்றவற்றினை    முன்பெல்லாம் அசரத் அவர்கள் செய்வார்கள்.ஆனால் அதனையே ௧௪.௧௨.2018 அன்று எனது மைத்துனர் முகமது ரபி அவர்களின் ஜனாஸாவிற்கு  இளையான்குடியில் மதினா ஸ்டார் கபடி குழுவினைச் சார்ந்த இளைஞர்கள் ஐந்து பேர்கள் சின்னத்தம்பி அம்பலம் பேரன் சித்திக் தலைமையில் ஒரு போர் படை போல நின்று குழுப்பாட்டி, கபனிட்டு, ஜனாஸா தொழுகைக்கு மேலப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக எடுத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஐ.என்.பி. அடக்க ஸ்தலத்திற்கு தோழில் தூக்கிச் சென்று நல்லடக்கமும் செய்ததோடு தாவாவும் செய்தது நான் மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிடமிருந்து வேறு பட்டு இருந்தது என்று பார்க்கும் போது அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பல்வேறு இயக்கங்களின் சார்பாக ஜனாஸா எப்படி குளிப்பாட்டி, கபனிடுவது என்று  வகுப்புகள் எடுக்கப் படுகின்றன. அதனையே ஒவ்வொரு மதரஸாவிலும் வகுப்பு எடுத்தால் ஜனாஸாவிற்கு வேண்டிய கடமை செய்வதற்கு பிற்காலத்தில் பயப்பட மாட்டார்களல்லவா?

சென்னையில் இளையான்குடியினைச் சார்ந்தவர்கள் பல பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தி மையத்து அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இளையான்குடியில் ஐ.என்.பிக்கு வேறு பள்ளிவாசல் இருந்தாலும் ஒற்றுமையாக மேலப்பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை வைத்துவிட்டு அடக்கம் செய்வதற்கு மட்டும் ஐ.என்.பி. பள்ளிவாசல், மேலப்பள்ளி அடக்கஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லுவது ஒற்றுமை என்ற கையினை பற்றிக் கொள்ளுங்கள் என்ற நபி வழி செயலாக இருக்குமல்லவா!

News

Read Previous

மூளையை வளமாக்கும் தயிர்சாதம்

Read Next

விடை கொடுப்பதற்கில்லை, அன்பின் பிரபஞ்சன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *