விடை கொடுப்பதற்கில்லை, அன்பின் பிரபஞ்சன் !

Vinkmag ad
விடை கொடுப்பதற்கில்லை, அன்பின் பிரபஞ்சன் !
எஸ் வி வேணுகோபாலன் 
சீகரமான குரலில், தனது இளமைக்காலக் கதைகளை, தான் எதிர்கொண்ட அபத்தமான தருணங்களை புன்னகை சிந்தியபடி பேசிக்கொண்டிருக்கும் அவரது முகம் என்னுள் ஒருபோதும் வாடாது உயிர்ப்போடு இருக்கிறது.
பிரபஞ்சன் காலமாகிவிட்டார். அதனால் என்ன?  ஒரு படைப்பாளியின் காலத்தை யார் அளப்பது, காலத்தாலேயே அது இயலாது! அடுத்தடுத்த தலைமுறை படைப்பாளிகளை அன்புள்ளத்தோடு நேசிக்கும் ஓர் உயிர் எப்படி மறைய முடியும்? நாள் முழுக்கத் தான் கொண்டாடப்பட்ட ஒரு மேடையில் கூட, வேறு வேறு எழுத்தாளர்களை, கவிஞர்களை, புத்திளம் மனிதர்களை பெயர் சொல்லி அடையாளப்படுத்திக் கொண்டாடும் ஒரு மனம் எப்படி கண் மூடிக்கொள்ள முடியும் ?
சமகால அரசியலைத் தொட்டு எழுதவும், சமூக விடியலைப் பற்றி சிந்திக்கவும், அழியாத அயல் நாட்டு இலக்கியங்களை அதனதன் காலத்து அரசியலோடு இணைத்து அறிமுகம் செய்யவுமான ஓர் உன்னத இதயம் எப்படி ஓய்வெடுக்கும்?  ஆண்டன் செகாவ் எழுதிய ‘குமாஸ்தாவின் மரணம்’ எனும் சிறுகதையை –  ரஷ்ய புரட்சிக்குத் தூண்டுதலாக இருந்த 12 இலக்கியங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டு, ஒரு துன்பியல் கவிதையாக அவரைப் போல் வேறு யார் சொல்லக்கூடும்?
விடலைப் பருவத்தில் வீட்டருகே வசிக்கும் இளம்பெண்ணிடம் தான் கொடுத்த ‘காதல் இலக்கியக் குறிப்புக்கள்’ ஏந்திய நோட்டுப்புத்தகத்தை, அவள் தாயின் மூலம் சகோதரன் கொண்டு வந்து தனது தந்தையிடம் கொடுக்க, அவரது பிரம்படி பற்றிய ஞானம் முதுகிற்கு இருக்கவே வீட்டை விட்டு ஓடிய கதையை-பின்னர் தாய்மாமன் துரத்திவந்து கண்டுபிடித்து அப்பாவிடம் சேர்த்த கதையை – அஞ்சி நடுங்கி நிற்கும் வேளையில், ‘ நீ எழுதியதா இது, இத்தனை அருமையான எழுத்தை எதற்கு அற்ப விஷயங்களில் செலவிடுகிறாய், உருப்படியாக எழுதக்கூடாதா?’ என்று அப்பா கேட்ட அதிர்ச்சியில் தான் அப்போதே எழுத்தாளனாக உருவான கதையை இன்னொரு முறையும் வந்து சொல்வார் என்று காத்திருக்கும் நேயர்களின் உள்ளத்துள் மின்னும் பிரபஞ்சன் பிம்பம் எப்படி நொறுங்கும்?
அரசியல் அதிகார பீடங்கள் மீதான மரியாதையை ஒரு பக்கம் கழற்றி வைத்துவிட்டு, அரசியல்வாதிகளது அகவுலகில் நெளியும் ஆணவப் புழுக்களை – அருவருப்பான எண்ணங்களை ஒரு குச்சியில் எடுத்து நீட்டுவது போல் இருக்கும் புனைவின் கம்பீரம் எப்படி கலையும்? ஜனநாயக செயல்பாட்டிற்கு ஆட்சியாளர்கள் ஒவ்வாமை கொண்டு அடக்குமுறை ஏவுகையில் அதற்கு எதிராகக் குரலெடுக்கும் இயக்கங்களோடு துணிச்சலோடு ஒருங்கிணைந்து நிற்கும் கால்கள் எப்படி ஓய்வெடுக்கும்?
தமிழ் இந்துவில் அவரது தொடர் வருகையில் ஒவ்வொரு வாரமும் காலை வாசித்தவுடன் அவரை அழைக்கையில், ரசனை மிக்க வாஞ்சையோடு அன்பைக் கசியவிடும் பதில் குரல் எங்கெங்கோ நிலைபெற்று விட்டது என்றே தோன்றுகிறது…..
விடை கொடுப்பதற்கில்லை அன்பின் பிரபஞ்சன்!

News

Read Previous

மரணமும்-கடமையும்!

Read Next

அரைப்படி நெல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *