பெருநாள்…

Vinkmag ad
பெருநாள்
திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!

அதிகாலை துயிலெழுந்து தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து – பின்
கதிமிகதந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே இத்திங்களிதில்!

செய்த தவறுக்காய் தேம்பியழுது நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும் மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!

வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லா னருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!

எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை-இன்று
மணந்திடும் பெருநாளீதில் – நாம்
மனங்களை இணைப்போமே ஒன்றாய்!

இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத்திருநாளே!

அறையினிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் – அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தம நபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை யேந்திவா பெருநாளே!

 
பெருநாள்
காலா காலமாக
மனிதன் அதிகம் தோற்றது
அவனது வயிற்றிடம்தான்
அந்த வயிறே தோற்றது
நோன்பிடம்தான்

மருதோன்றி மணம் கமழ
ஊரெல்லாம் அம்மி இசை
விடிந்தால் பெருநாள்
பெண்ணவர்கள் உள்ளங்கையில்
மேற்கு வானம் விரியக்கண்டோம்
அதில் பிறையுடன் நட்சத்திரங்கள்
சிவந்து மின்னக் கண்டோம்

புத்தாடை புது மணத்தில்
கிறங்கி நின்றோம்
துதலுடன் மஸ்கட்டும்
வித விதமாய் பலகாரம்
முறுக்கும் சேர்த்து
அயலெலாம் பகிர்ந்த்துண்டோம்
எண்ணை தோய்ந்த
மருதோன்றிப் பிஞ்சுக் கையில்
பெருநாள் பணம் புரள
குதூகலிக்கும்
சிறப்பு கண்டோம்

நோன்புக் கஞ்சிபோல்
சுவையான மாதத்தின்
பேரீத்தம் பழத்தைப்போல்
இனிப்பான நாள் இன்று

 
பெருநாள்
நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
மாண்புடன் அல்லாஹ்வும் மன்னிப்பை” பரிசாக
வாகையுடன் தரும்நாள்வாஞ்சையுடன் அருளும்நாள்;
ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்
நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி
அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை
வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;
ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே
பயிற்சிகள் பெற்றோம்பாடங்கள் கற்றோம்
முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்
மீண்டும் ரமளான்” நம்மிடம் வரவேண்டும்
மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே
வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்
இணங்கி வாழ்வோம்இன்பமே கிட்டும்
இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே

 
பெருநாள்
உள்ளிருக்கும் சிரிப்பை
வெளியே கொணரும் ரமலான்;
மனதிற்குள் நிறைந்துள்ள தெய்வீகத்தை
முகத்தில் காண்பிக்கும் ரமலான்!

முப்பது நாள் நோன்புதனில் – ஏழையின்
பசியினை போதிக்கும் ரமலான்;
ஐந்து வேலை தொழுகையில் – மனித
ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலான்!

இல்லாது உண்ணாததை விடுத்து – எல்லாம்
இருந்தும் உண்ணாமையில் தீரம் தரும் ரமலான்;
நினைப்பதை நடத்தும் உறுதியை – மனதில் நிறைக்கும் திடத்தை
ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் ரமலான்!

சுத்தம் சுகாதாரம் ஒழுக்கம் காத்து – அதை
சுற்றத்திற்கும் வாழ்ந்து கற்பிக்கும் ரமலான்;
உடலின் புத்துணர்ச்சியை ஒவ்வொரு நாளும் கூட்டி
மருத்துவகுண சிறப்பினையும் நோன்பினில் காண்பிக்கும் ரமலான்!

மறைபொருள் இறையென விடாது
உயிர்பொருள் அவனென எண்ணியதில்
அல்லா‘ எல்லாமுமாய் நின்று அருள்பாலிக்கும் ரமலான்;
ஏற்றத் தாழ்வினை கடந்து – இறையன்பில் கூடிநின்றோருக்கு
மறையின் மகத்துவத்தை புரியவைத்திட்ட ரமலான்!

இல்லார் இல்லாததை மறந்து
இருப்போர் இயன்றதை வழங்கி
உள்ளத்தில்உலகின்வாழ்வின் சிறப்பென இந்நாளை
கொண்டாடி மகிழும் குதூகல ரமலான்;

கோடான கோடி பேரின் மகிழ்வில் பிறக்கும்
இறைதூதர் பணித்திட்ட கண்ணியப் பெருநாள் திருநாள் ரமலான்!

பெருநாள்
அணியும் ஆடைகளின் அழகில்,
குல்லாக்களின் அமைப்பில்
இருக்கலாம்
கணக்கில்லா வேறுபாடு,
கூடாது அது
காட்டும் அன்பில்
காணும் பண்பில்தியாகத்தில்
என்பதுதான்
பெருநாள் என்னும் ஈகை திருநாள்…!

News

Read Previous

சென்று வா ரமலானே!

Read Next

புனித ரமலான் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *