ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை ……………

Vinkmag ad
ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?
 
2016 மே மாத முதல் வாரத்திற்குள்ளாக தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தி புது அரசு பற்றி அறிவிப்பு வரவேண்டும் என்று தமிழகமே எதிர்பார்க்கிறது.
வழக்கம் போல் தமிழக முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பெயரளவு உள்ள அரசியல் அமைப்புகள் என்று பிரிந்து பல் வேறு நிலைப்பாட்டினை எடுக்கும் என எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றோம். அது ஒருபுறம் இருக்க;
 
இன்றைய இந்தியாவில் அரசுக்கு எதிராகப் பேசும் தலித் இனத்தவர் மற்றும் மைனாரிட்டி சமூகத்தினரை தீவிர வாத அமைப்புக்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று முத்திரை குத்தும் அச்ச நிலை உள்ளது. அது மாணவர்கள் ஆனாலும் சரியே! அப்படிப் பாதிக்கப் பட்டவர்கள் நீதி மன்றங்களை  அணுகும்போது  குண்டர்களால் தாக்கப் படும் நிலையினை தொலைக் காட்சி நிறுவனங்கள் படம் பிடித்து காட்டுவது அதிர்ச்சியினை அளிக்கின்றது என்று பல்வேறு பத்திரிக்கைகள் கூறுகின்றன.
 
தமிழக முஸ்லிம் தலைவர்கள் சக  இயக்கத் தலைவர்களுடன் சுமூக உறவு காண்பது அரிதாக இருப்பது  வேதனையாக உள்ளது. தலை எப்படியோ அப்படியே தொண்டர்களும் இருக்கின்றார்கள் என்ற பரிதாப நிலை.
 
இஸ்லாம் ஒரு சகோதர இயக்கம் என்று மார் தட்டும் நாம், சகோதரர்களுக்குள்ளேயே வெட்டு, குத்து என்ற நிலை சமீபத்தில் மண்ணடி பகுதியில் கொடி ஏற்றும் பிரச்சனையில் வெடித்து, காவல் நிலையம் வரை சென்று, வட சென்னையே சிரித்தது. முஸ்லிம் அல்லாத சமூகத்தினரும் ‘ஒற்றுமை என்னும் பாசக் கயிரினைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள’ என்று சொல்லும் மார்க்கத் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி, மோதிக் கொள்கிறார்கள் என்று வட சென்னையில் பேசப் பட்டது அனைவருக்கும் தெரியும்.
அதற்குக் காரணம் இயக்கத் தலைவர்களிடையே யார் பெரியவர், யார் பேசுவதிற்கு அதிகம் கூட்டம் சேருகிறது. நானா, நீயா என்ற ஈகோ(தலைக்கனம்) இருப்பது தான் என்றால் மிகையாகாது. அந்தத் தலை, தலைக்குள் இருக்கும் அறிவு  எல்லாம் வல்ல அல்லாஹ் அருளால் வழங்கப் பட்டது, அவன் அருளிய தலையில் கனம் கூடாது. அந்தக் கனத்தினை இறைவனுக்கு சஜ்தா செய்தால் இறக்கி  விடும். தலைவர்களுக்கிடையே ஒரு புன் முறுவல், பாசம், பற்று மருந்துக்குக் கூட அரவே இல்லையே அது ஏன்? அவர்கள் உண்மையான உம்மத்தாக இருக்க முடியுமா?
உங்களுக்கெல்லாம் தெரியும் மேற்காசிய நாடுகளில் முஸ்லிம் நாடுகளில் போர்கள் நடக்கின்றன. அவைகளில் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வரும் மக்களை ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய யூனியன் குடியமர்த்துகிறது. அமெரிக்காவும் அவர்களை குடியமர்த்த முன் வந்துள்ளது. அதற்கு அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட தயார் நிலையில் உள்ள ‘டிரம்ப்’ என்பவர் முஸ்லிம்களை அமெரிக்காவில் குடியமர்த்தக் கூடாது என்று கூக்கிரலிடுகிறார். அதனை அறிந்த கத்தோலிக கிருத்துவ மத குரு போப் பிரான்சிஸ் அவர்கள் 18.2.2016 அன்று ரோமில் பேசும்போது ‘மனித உள்ளங்களில் பிரிவை எற்படுத்தி சுவர் எழுப்புவன் உண்மையான கிருத்துவனாக இருக்க முடியாது’. ‘மாறாக  உள்ளங்களை பாலங்கள் மூலம் இணைப்பவனே உண்மையான கிருத்துவனாக இருக்க முடியும்’ என்று நெற்றியில் அடித்தது போல சொல்லியுள்ளார்.
சகோதர மதமான கிருத்துவ மத குரு போப் அவர்களே மனங்களை பாலங்கள் மூலம் இணைக்கச் சொல்லும் போது, ஒற்றுமை என்ற கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று போதித்ததினை  இஸ்லாமிய மார்க்கத் தலைவர்களும், அதன் தொண்டர்களும் மறுக்கலாமா?
 
ஆகவே இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று பேசி வரும் சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்ற கருத்தோடு   நின்று விடாமல், தேர்தலுக்குப் பின்னும் மனம் விட்டுப் பேசி சகோதரப் பாசத்துடன் பழக வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் சரியா?

News

Read Previous

சார்ஜா இஸ்லாமிய வங்கி கனி தகப்பனார் வஃபாத்து

Read Next

யானைகளின் புத்திக்கூர்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *