யானைகளின் புத்திக்கூர்மை

Vinkmag ad

அறிவியல் கதிர்
                                                                                        யானைகளின் புத்திக்கூர்மை
                                                               பேராசிரியர் கே. ராஜு
     2015-2016 ஆம் ஆண்டினை செம்மறியாடு ஆண்டாக சீனா அறிவித்திருக்கிறது. 2015ஆம் ஆண்டின் இறுதிவரை யானைகளைப் பற்றி ஏராளமான தகவல்களை நாம் அறிந்துகொண்டதை வைத்துப் பார்த்தால், 2016ஆம் ஆண்டினை நாம் யானைகள் ஆண்டாக அறிவிக்கலாம். ஆசிய யானையின் மரபணு வரிசையை ஆராய்ந்த டாக்டர் வி.ஜே. லிஞ்ச்சும் அவருடைய குழுவினரும் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதை முன்பு  இருந்த  கம்பளி மயிரடர்ந்த மாபெரும் யானையுடன் தொடர்புபடுத்தி யிருந்தனர். 2015 டிசம்பரில் புனேயில் உள்ள ஐஐஎஸ்ஈஆர், பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆசிய யானையின் மரபணு வரிசையை ஆராய்ந்து தங்கள் முடிவினை Journal of Biosciences இதழில் வெளியிட்டனர். ஆசிய யானைகளுக்கே உரிய 181 புரோட்டீன்களையும் 103 புதுமையான ஆர்என்ஏ (மரபணுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய மூலக்கூறுகள்) படிமங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏறக்குறைய இதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள உட்டா பல்கலைக்கழகத்தையும் சிகாகோ பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த விஞ்ஞானிகள்  மனிதர்களுக்கு உடலில் தோன்றும் கட்டியை எதிர்க்கக்கூடிய பி53 என்ற ஒரேயொரு மரபணு இருக்கையில், யானைக்கோ கட்டியை எதிர்க்கும் 20 மரபணுக்கள் உள்ளன எனக் கண்டுபிடித்துள்ளனர். இதன்  பொருள் என்ன? புற்று நோயை எதிர்க்கும் வல்லமை நம்மைவிட யானைகளுக்கு மிகமிக அதிகம் என்று அர்த்தம்.
ஆசிய யானையின் மரபணு வரிசை அதன் பல்வேறு குணாதிசயங்களுடன் தொடர்புடையது என்று பார்ப்பது ஒரு சுவாரசியமான ஆராய்ச்சி. பெங்களூரு ஐஐஎஸ்சியைச் சேர்ந்த யானை நிபுணர்கள் பேராசிரியர் ஆர். சுகுமார், ஜெஎன்சிஏஎஸ்ஆரைச் சேர்ந்த டாக்டர் வி.என்.சி. வித்யா மற்றும் அவர்களது குழுவினர் நீலிகிரி, கர்நாடகாவின் நாகர்ஹோல்-பந்திபுர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த யானைகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சுற்றுப்புறச் சூழலையும் அதற்கேற்றவாறு அமையும் உயிரினப் பண்புகளையும் பொறுத்து யானைகள் தனியாகவோ கூட்டமாகவோ எப்படி நடந்துகொள்கின்றன என்பதை ஆராய்வதே அவர்களது நோக்கம். அப்பகுதி மக்கள் டாக்டர் சுகுமாரை யானை டாக்டர் என்றுதான் அழைக்கிறார்கள். யானை ஒரு புத்திக்கூர்மையுள்ள விலங்கு என்பது நீண்ட காலமாகவே தெரிந்த விஷயம்தான். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், பஞ்சதந்திரம் அல்லது புராணங்களில் உள்ள கதைகள், சுகுமார், வித்யா போன்ற விலங்கியல் ஆர்வலர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாமும் இதை உறுதிப்படுத்துகின்றன. மனிதக்குரங்குகள் போல யானைகளும் ஒரு கண்ணாடியைக் காண்பித்தால் தங்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறன் படைத்தவை. கருவிகளைச் செய்வது, சுற்றியுள்ள பொருட்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் பயன்படுத்துவது எல்லாம் அறிவுத்திறனின் வெளிப்பாடுதான். மனித இனத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ள விலங்கினமான சிம்பான்சிகளுக்கு தங்களுடைய தேவைக்கேற்ற கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தத் தெரியும்.  மருந்துகளாகப் பயன்படும் தாவரங்களைத் தேர்ந்தெடுக்கத் தெரியும். அதேபோல யானைகளுக்கும் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தத் தெரியும். தும்பிக்கையால் ஒரு கம்பைப் பிடித்து மரத்தில் உள்ள பழத்தையோ காயையோ அடித்து எடுத்துக் கொள்ளத் தெரியும்.  ஒரு டயரின் மீது காலை வைத்து ஏறி உணவை எட்டிப் பெற்றுக் கொள்ளத் தெரியும். இதையெல்லாம்விட டாக்டர் வித்யா தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடும் செயல் மனதைக் கவரக்கூடியது. ஜெனட்  என ஒரு பெண் யானைக்குட்டிக்கு அவர் பெயர் சூட்டியுள்ளார். ஜெனட் கருத்தரிக்கவோ பால் கொடுக்கவோ முடியாத இளம் வயது குட்டி. இன்னொரு பெண் யானை டானாவின் குட்டி, ஜெனட்டைப் பால் கொடுக்குமாறு தொந்தரவு செய்கிறது. ஜெனட் ஒரு தந்திரம் செய்கிறது. தனது தும்பிக்கையை யானைக் குட்டியிடம் அளித்து பால் குடிப்பது போன்ற உணர்வைத் தருகிறது. நம் வீடுகளில் ஒரு குழந்தை கட்டை விரலைச் சூப்புவது போன்ற செயலால் குட்டி யானை திருப்தியடைந்து விடுகிறது. எவ்வளவு அற்புதமான பரிசோதனைகள்!
(உதவிய கட்டுரை : 2015 டிசம்பர் 28 தி ஹிண்டு இதழ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி பகுதியில் டி. பாலசுப்பிரமணியன் எழுதிய கட்டுரை).

News

Read Previous

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை ……………

Read Next

குழந்தை மனம் பெறுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *