கட்டுரைகள்

மகாத்மாவை எதிர்மறையாக நினைவுகூர்வோர்கள் 

மகாத்மாவை எதிர்மறையாக நினைவுகூர்வோர்கள் 

எஸ் வி வேணுகோபாலன் 

தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த எண்ணற்ற வழிகள் உண்டு.  தேசத் தந்தை என்று கொண்டாடப்படும் மகாத்மா காந்தி அவர்களது பிறந்த நாளில் மோடி அரசு அவருக்குப் புகழஞ்சலி செலுத்திய விதம் வினோதமானது.  அகிம்சா மூர்த்தி என்று அழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை  ஒன்றிய ஆட்சியாளர்கள் இந்த ஆண்டு நினைவு கூர்ந்த பாணி அலாதியானது.  

ஆட்சிக்கு வந்ததுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணை உறுத்தியது இந்த அக்டோபர் 2 எனும் தேதி.  அதனால் தான் ஸ்வச் பாரத் என்ற பெயரில் தேசத்தைத் தூய்மைப் படுத்துவோம் என்று இந்தத் தேதியின்  முக்கியத்துவத்தை மாற்ற ஒரு முயற்சி எடுத்தது.  தங்களுக்கு ஒவ்வாத வரலாறுகளை, தங்களுக்குப் பிடித்தம் இல்லாத தலைவர்களை மக்கள் மனத்தில் இருந்து துடைத்து எறிவது என்பது தான் இவர்களது தூய்மைப் படுத்தும் திட்டம் என்பதை எளிய மக்கள் உணர்ந்து விட மாட்டார்கள் என்ற துணிச்சல்.  

காலப் போக்கில் குப்பைகளைப் பெருக்கித் தள்ளிப் புகைப்படம் எடுத்துத் தனது புகழைத் தானே பரப்பிக் கொண்டிருந்ததும் மோடிக்கு சலித்துப் போயிருக்கக் கூடும்.  இந்த ஆண்டு அவர் எங்கேயும் விளக்குமாறு எடுத்ததாகத் தெரியவில்லை.  ஆனால், இந்த தேசத்தில் போராட்டங்களே நடக்கக் கூடாது, தனக்கு எதிராக யாரும் வீதிக்கு வந்துவிடக் கூடாது, அவர்களைத் துடைத்து எறிவோம் என்ற முறையில் ஆயுதங்களோடும் (பெயர் அட்டைகளை நீக்கிக் கொண்டும்) அராஜக ஆர்ப்பாட்டத்தோடும் காவல் துறையை தலைநகரில் ஏவி விட்டிருக்கிறது அமித் ஷா  – மோடி ஆட்சி.

தேர்தல் ஆணையத்தை அமைக்கும் கஷ்டமான பணியைத் தானே பெரும்பங்கு எடுத்துக் கொண்ட மோடி ஆட்சிக்கு (நியமனம் செய்யும் குழுவில் மூன்றில் ஒருவர் பிரதமர், மற்றொருவர் அவர் சொல்லும் அமைச்சர், மூன்றாமவர் எதிர்க்கட்சி தலைவர்), தங்களது கனவைச் செம்மையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் தலைமை தேர்தல் ஆணையரை பாதுகாக்க வேண்டியது தார்மீகக் கடமை தானே!  சிறப்பு தீவிர திருத்தம் என்பதன் உட்பொருளே தங்களுக்கு வாய்ப்பில்லாத வாக்குகள் தண்டத்திற்கு வாக்குப்பெட்டியில் விழுவானேன் என்று தான் ஞானேஷ் குமாரை   பட்டியலை  தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது ஆர் எஸ் எஸ் – பாஜக ஆட்சி.  பல கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டது என்று யாரேனும் விமர்சித்தால் அவர்களை எப்படி பேச  விட 

பீகாரில், மேற்கு வங்கத்தில் இன்னும் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் எங்கெல்லாம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் குய்யோ முறையோ என்று தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டு இருப்பதை எடுத்துக் கூறிக் கொண்டிருப்போர் குரல்கள் ஆட்சியாளர் காதுகளில் ஒலிக்காது.  தானே வாக்காளர் பட்டியல் ஒழுங்கு செய்து தரும் பணியை மேற்கொண்டுள்ள பி எல் ஓ ஒருவரது பெயரே (முகமது முஜாஹர் ஹொசைன், மேற்கு வங்கம்) அவரது பகுதி வாக்காளர் பட்டியலில் காணாமல் போயிருக்கிறது.  எல்லைப்புறக் காவல் படை வீரர் சுனில் ஷா பெயர் பீகார் பட்டியலில் நீக்கப்பட்டு விட்டிருக்கிறது.  குப்பை சேகரித்துப் பிழைக்கும் ரதி தாஸ் (மேற்கு வங்கம்), பீடி தொழிலாளி ஹஸீரா பீபி (மேற்கு வங்கம்), விவசாயி ஸ்ரீ பகவான் ஷா (பீகார்), அங்கன்வாடி பணியாளர் நஜ்மதாரா காட்டூன் (மேற்கு வங்கம்), தொழிலாளி ராகேஷ் சவுகான் (பீகார்) பெயர்கள் மட்டுமல்ல, 2021 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் முகமது அலாவுதீன் ஷேக் (மேற்கு வங்கம்) பெயரும் நீக்கப்பட்டு உள்ளது.  இன்னொன்று கேளுங்கள், இந்திய விமானப் படையில் விங் கமேண்டர் ஆக இருந்து சிவில் பணிக்குத் திரும்பியுள்ள மேற்கு வங்க வாக்காளர் 49 வயது முகமது ஷமீம்  அக்தர் அவர்களுக்கும் இதே கதி தான்! 

தேர்தல் ஆணையத்தின் படிவங்களை முறைப்படி நிரப்பி ஆவணங்கள் எல்லாம் இணைத்துக் கொடுத்தும் வெட்டி எறியப்பட்டு உள்ளன இவர்களது பெயர்கள்.  பலகோடி பெயர்களுக்கும் இப்படியான விதியைத் தீர்மானித்தவர் தான் ஞானேஷ் குமார்.  சக தேர்தல் ஆணைய அதிகாரிகள்  சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி  எடுத்துச் சொன்ன மாற்றுக் கருத்துகளை செவி மடுக்காது தன்னிச்சையாகப் படிவங்களைத் திருத்தியும் பெயர்களை நீக்கியும் இவர் செய்து வந்துள்ள அராஜகத்தை எதிர்த்து அவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை கடிதங்கள் மூலம் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.  மத்திய அமைச்சரவை செயலாளருக்கும் தெரிவித்துள்ளனர்.  இந்த வண்டவாளங்கள் அனைத்தையும் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் ரித்திகா சோப்ரா விவரமாக அம்பலப்படுத்தி தேசத்தின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்.

தர்மேந்திர பிரதானை பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்ததுபோல் இப்போது ஞானேஷ் குமாரைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் உண்மைக்காகக் குரல் கொடுக்கும் போராளிகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் மோடி அரசு, வழக்கம்போல் தில்லி காவல் துறையைக் கூடுதல் வேலை பார்க்க வைக்கிறது. தலைநகரில் அண்மையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் நெஞ்சைப் பிழிந்தெடுக்க, அதற்கு எதிராக ஒற்றை நகர்வு செய்யச் சிந்தனை அற்ற ஆட்சியாளர்களும், காவல் துறையும் அறவழியில் போராட எப்போதும் அப்படியான  ஆர்ப்பாட்டங்களுக்கான இடமான ஜந்தர் மந்தரில் சூழ்வதற்கு அனுமதிக்காமல் வன்முறையைக் கட்டவிழ்த்துத் தனது தீரச்செயலைக் காட்டி இருக்கிறது. 

அறவழியில் போராடுவது கோழைத்தனமன்று, அது தான் வீரம் என்றவர் மகாத்மா.  அதிகாரத்தில் இருப்போரை நோக்கி உண்மையை உரத்துப் பேசுவது தான் ஜனநாயகம்.  அதற்கு அனுமதி மறுக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை அன்றி வேறென்ன!  தலைநகர் தில்லியில் காந்தி ஜெயந்தி நாளில் வாக்குரிமையை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் தேர்தல் தலைமை ஆணையரை உடனே பதவி நீக்கம் செய் என்று குரல் கொடுத்தல் தவறு என்றால், ஞானேஷ் குமார் செய்திருப்பதெல்லாம் சரி என்று திமிராகப் பேசுகிறது பாஜக ஆட்சி என்று தான் பொருள்.  ஜூலை 20 அன்று நேர்பட பார்த்த பிறகும் போராளிகள் இவர்களது அத்துமீறல்களுக்கு, வன்முறை வெறியாட்டங்களுக்கு அஞ்ச மாட்டார்கள் எனும் பாடத்தைக் கற்க மறுக்கும் மோடி அரசுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுக்கவே செய்வார்கள்.

தன்னை நோக்கி ஒரு கயவன் துப்பாக்கியால் சுட்டபோதும், மகாத்மா எந்தச் சுடு சொல்லும் சொல்லாது தனக்குப் பிரியமான பெயரை உச்சரித்து விட்டு உயிர் நீத்தார்.  இன்னும் சில நொடிகள் அவரது மூச்சு நீடித்திருந்தாலும் நாதுராம் கோட்ஸேவை எதுவும் செய்யாதீர்கள் என்று தான் சொல்லி இருப்பார்.  அது காந்தியின் அறம். நல்லிணக்கத்தின் மீதான வலுவான நம்பிக்கையின் துணிவு அது.  அன்பின் உருவகமாக அவரது புன்னகை இன்றும் ஒளிவீசவே செய்கிறது.  அவரது பிறந்த நாளில் வன்முறையை ஏவியதன் மூலம் அவரை எதிர்மறையாக நினைவு கூர்ந்த ஆட்சியாளர்களை ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.  புன்னகையோடு காத்திருப்பார்கள்.நன்றி: தீக்கதிர்: 06 10 2026

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button