கட்டுரைகள்

பேயரசு செய்வதால் பிணம் தின்னும் சட்டங்கள் 

பேயரசு செய்வதால் பிணம் தின்னும் சட்டங்கள் 

எஸ் வி வேணுகோபாலன் 

சொல்லவே கூசும் அளவுக்குத் தரம் கெட்ட முறையில் நடந்து கொண்டிருக்கிறது தில்லி காவல் துறை.  காக்கிச் சீருடை அணிந்தபின் தங்களைச் சட்ட ஒழுங்கின் தாதாக்களாக பாவித்துக் கொள்ளும் இந்தப் படுபாவிகளின் அராஜகத்தை எழுதக்கூட கை நடுங்கும். காலம் காலமாக தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் பதிவு செய்து கொள்வதற்கான இடமாக தில்லியில் அமைந்திருப்பது ஜந்தர் மந்தர் பகுதி.  13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை ஒற்றை அதிகார விரல் அடித்து நீக்கிவிடும், இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து மக்கள் திரண்டால் தேசத்தின் அமைதி நாசமாகப் போய்விடுமா? 

ஒருவரைக் காக்க 

ஒரு குடும்பத்தைக் காக்க, பெருந்தீங்கு விளைவிக்கும் அந்தக் குடும்பத்தின் தனி மனிதனை அழிக்கலாம்.  கிராமத்தின் நலனுக்காக, ஒரு குடும்பத்தை தியாகம்  செய்யலாம், ஒரு நாட்டின் நலனுக்காக ஒரு கிராமம் எதிராக நிற்குமானால் அதை முடித்துவிடலாம் என்று இதிகாச நீதி பேசுவார்களே, ஆர்.எஸ்.எஸ்-பாஜக அதரும ஆட்சியைக் காக்க ஒரு நாட்டையே தியாகம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார்களா மோடி அமித் ஷா கும்பல்?    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எனும் ஒற்றை மனிதரை பாதுகாக்க, கோடிக்கணக்கான வாக்காளர் குடியுரிமையை அழிக்கலாம், அதை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கும் மாணவரை, இளைஞர்களை, எதிர்க்கட்சி தலைவர்களை, ஜனநாயக சக்திகளை எப்படி வேண்டுமானாலும் புரட்டி அடிக்கலாம், ஜனநாயக நெறிகள், அரசியல் சாசன சரத்துகள் அனைத்தையும் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வைத்துவிடலாம் என்று இந்த ஆட்டம் போடுகின்றனரா ஒன்றிய ஆட்சியாளர்கள்?

அருவருக்கத் தக்க அணுகுமுறை 

இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளான பெண் தோழர்கள் தாங்கள் நடத்தப்பட்ட விதம் பற்றியும், தங்கள் கண்ணெதிரே சக ஆண் தோழர்கள் மிருகத்தனமாக மிதித்துத் துவம்சம் செய்யப்பட்ட கொடுமைகளையும் ஆறாத சினம் கொண்ட கண்கள் கொப்புளிக்க எடுத்துக் கூறுகின்றனர்.  வெட்கக்கேடான விஷயம், பெண் காவலர்களே பெண் போராளிகளை படு கேவலமான முறையில் பற்றி இழுப்பது, ஆடைகளை வேண்டுமென்றே விலக்கப் பார்த்து  ‘வீதிகளில் இறங்கிப் போராட வந்தால் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு உன்னை அவமானத்திற்கு உள்ளாக்குவேன்’ என்கிற ரீதியில் அவமதிப்பு செய்வது, தரதர என்று இழுத்துப் போய் உடல் கொழுத்த ரவுடிக் கும்பல் போன்ற கமாண்டோ படையிடம் ஒப்படைத்துப் பேருந்தில் திணித்து உதைத்து உள்ளே தள்ளுவது, ஆடு மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்ற கூண்டுகள் அமைக்கப்பட்ட பேருந்துகளில் நுழைந்த மாத்திரத்தில் தங்களிடம் சிக்கியவர்களை கண்மூடித் தனமாக அந்த ஆண் காவலர்கள் (உள்ளே ஒற்றை பெண் காவலர்கள் இருப்பதில்லை) அடி உதை மிதி என்று ஊழிக் கூத்து ஆடி முடிப்பது என்று தில்லி காவல் துறை கடமை ஆற்றி வருகிறது. 

ஒற்றை போராளியை அல்லது இரண்டு மூன்று போராட்டக்காரர்களை டஜன் கணக்கில் காவல் துறை அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு சாலையில் போட்டு அலைபேசிகளைப் பிடுங்கி உடைத்துத் தூக்கி எறிந்து துவைத்து எடுத்ததை பெண் தோழர்கள் கண்களில் இருந்து இன்னும் அகலாத அதிர்ச்சியோடு விவரிக்கின்றனர்.  ‘படிக்க வந்தாயா போய்ப் படி, வேலை தேடுகிறாயா, தேடித் தேடிக் காணாமல் போ, பணியில் இருக்கிறாயா பணிந்து குனிந்து நாசமாய்ப் போ, பொது வெளியில் ஏன் போராட்டத்திற்கு வருகிறாய்’ என்று வெறித்தனமாகப் பாடம் எடுக்கிறது அமித் ஷாவின் காவல் துறை. 

இந்து ராஷ்டிரத்திற்கான களை எடுப்பு

போதை பொருள் கடத்துபவர்கள், விநியோகம் செய்பவர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், இயற்கை  வளங்களைச் சூறையாடுவோர்,  கறுப்புப் பணம் பதுக்குவோர், கொள்ளை லாபம் அடிப்போர், வரி ஏய்ப்போர் யாருக்கும் எதிராக ஓங்காத தங்களது  அதிகாரக் கழிகளை, அராஜகத் தாக்குதலை, அடிதடி வன்முறைகளை ஜனநாயகக் குரல் எழுப்பும் எளிய மனிதர்கள் மீது செலுத்துகிறது அதிகார வர்க்கம். அதற்கு உத்தரவு விடுபவர்கள் யார், அவர்களது நோக்கம் என்ன, யாரை பாதுகாக்க சொந்த நாட்டுக் குடிமக்களை இந்தப் பாடு எடுத்து ஒடுக்கப் பார்க்கின்றனர் ஒன்றிய ஆட்சியாளர்கள்? குடியுரிமை மறுப்பு – வாக்குரிமை மறுப்பு – அடையாள அழிப்பு என்பது அவர்களது இந்து ராஷ்டிர உருவாக்க ராஜ பாட்டையின் களையெடுப்பு. 

உச்ச நீதி மன்ற வழிமுறைகளை அதே உச்ச நீதி மன்றம் இருக்கும் அதே மாநகரில் அங்கிருந்து மிகச் சிறு தொலைவில் உள்ள மையத்தில் அத்து மீறும் அதிகாரத் திமிர் எப்படி வாய்க்கிறது ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு ? நாடாளுமன்ற உறுப்பினர்களையே, முன்னாள் முதல் அமைச்சர்களையே, பொறுப்பு மிக்க ஜனநாயக இயக்கங்களின் நிர்வாகிகளையே தங்களுக்கு இல்லாத அதிகார ஆயுதங்களைக் கொண்டு பாய்ந்து தள்ளிக் குதறிக் கொக்கரிக்கும் ஆணவம் இவர்களுக்கு எப்படி வந்தது?  போராட்டக் களத்திற்கு இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் வந்துவிடக் கூடாது என்று பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல், வன்முறைகளை ஏவும் துணிச்சல் இவர்களுக்கு எப்படி வருகிறது?

ஜனநாயகத்தின் உடலிலிருந்து வழியும் குருதி 

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேல் ஜியோனிச அரசு நடத்திக் கொண்டிருக்கும் அராஜக இன அழிப்புப் போரில், செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மீது குறி வைத்து குண்டுகள் வீசிக் கொள்வது உள்ளிட்ட தாக்குதல்களை வேதனையோடு பார்க்கிறோம்.  தில்லி போராட்டத்தில் தாங்கள் ஊடக பிரதிநிதிகள் என்று அடையாள அட்டை உள்பட காண்பித்துக் கூறியும் கூட பத்திரிகையாளர்களையும் புரட்டி எடுத்துள்ளது தில்லி காவல் துறை.  உச்ச நீதி மன்ற வாசலில் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்களும் மணிக் கணக்கில் சிறைப்பிடித்து வைத்து சீறி விழுந்திருக்கிறது. 

தனிப்பெரும்பான்மை இல்லாமல் முட்டுக் கொடுக்கும் இரண்டு கட்சிகளின் ஒட்டுறவோடு ஆட்சியில் இருக்கும் உணர்வற்று, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் தாங்களே ஆட்சியாளர்கள் எனும் திமிரோடு தர்பார் நடத்தும் இவர்களது அத்து மீறல்களை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் அனுமதிக்க முடியாது.  அக்டோபர் 2, அக்டோபர் 10, அக்டோபர் 11 என்று தொடரும் இவர்களது வன்முறை வெறியாட்டத்தில் பொங்கி வழியும் குருதி, ஜனநாயகத்திற்கு நேர்ந்துள்ள காயத்திலிருந்து வழிவது.  அரசியல் சாசன சட்டத்தின் மீதான தாக்குதலில் இருந்து பெருகும் இரத்தத் துளிகள் அவை. 

தங்களது சொந்த உடலியல் உபாதைகளைக் கூட பொறுத்துக் கொள்வோம், ஜனநாயகத்திற்கு எதிரான கொலைவெறி தாக்குதலை மன்னிக்க மாட்டோம், நீதிக்காகக் குரல் எழுப்புவோம், உரத்துக் கேட்போம், ஓயாது போராடுவோம் என்று மாணவர், வாலிபர் சங்க இளம் தோழர்கள் அத்தனை இரத்தக் காயங்களையும் மீறிய உறுதியோடு, அறச்சீற்றத்தோடு மீண்டும் களத்தை நோக்கியே திரள்கின்றனர்.  

ஜந்தர் மந்தரில் கால் வைத்தாலே கைது 

இதோ, இப்போது ஜந்தர் மந்தர் இடத்தையே போராட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட இடம் என்கிற பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது கார்பொரேட் வகுப்புவாத பாஜக அரசு.  அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளின் பெருங்குரலாக மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம் ஏ பேபி அன்றே கண்டனம் வெளியிட்டு இருந்தார்.   தடுக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் தேசியக் கொடி ஏந்தி நுழைந்துவிட்டனர்  என்கிற காரணத்திற்காகவே அத்து மீறல் என்ற குற்றச்சாட்டின் பேரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் இருவரை சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா கைது செய்து 5 நாள் நீதி மன்றக் காவலில் வைக்க வழி செய்துவிட்டனர் ஒன்றிய ஆட்சியாளர்கள்.  ஜந்தர் மந்தர் ஓர் இடமல்ல, அது ஜனநாயக போராட்டங்களுக்கான குறியீடு.  அதை பாதுகாக்க இன்னும் கூடுதல் உறுதிப்பாடோடு துள்ளி வருகுது படை, பகையே சுற்றி நில்லாதே, ஓடு!

நன்றி: தீக்கதிர்: அக் டோபர் 16, 2026

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button