வா! மழையே! வா!

வா! மழையே! வா!

இப்போதெல்லாம்
மனிதனைப் போல
தாமதமாகவே வருகிறது
காய்ந்து கிடக்கும்
ஏரி குளங்களின் வயிறுகளை
நிரப்புகிறது
திருடப்பட்ட
நீர்நிலைகளை
நீரை நிரப்பிக்
காட்டி விடுகிறது
பருவம் வந்ததும்
துளிர்க்கும் காதல் போல
கிளைகளில்
துளிர்த்து எழுகிறது
பச்சை இலைகள்
கனமழை விட்டதும்
தொடரும் இசை மழையாக
தவளைப் பாடலும்
பூச்சிகளின் ரீங்காரமும்
இரவில் கேட்கிறது
கறுப்பை
ஆசையோடு சூடும்
மேகத்திற்கு
ஏழு வண்ணத் துண்டை
பரிசாக அளிக்கிறது
வானம்
ஏழை வீட்டுப்
பாத்திரங்கள்
மொத்தமாக நிறைய…
தூரத்திலிருந்து
எட்டி எட்டிப் பார்க்கிறான்
செல்வந்தன்
கடலிலிருந்தும்
கரையிலிருந்தும்
படகுகளை
வீதிக்கு அழைக்கிறது
பருவமழை
எப்போதும் போல
வேட்டியை மடித்து
வெள்ளம் சூழ்ந்த
தெருவில் இறங்குவார்
அரசியல்வாதி
அவருக்கு
குடைப் பிடிக்க
மழையில் நனைவார்
தொண்டர்
ரணங்களை மக்களுக்கும்
நிவாரணங்களை அரசியல்வாதிக்கும்
தந்துவிட்டுப் போகும்
உருவாகும் புயல்
பருவமழையே!
பருவம் தவறினால்
எல்லாமும் பிழையாகும்
அளவிற்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகும்
தவறாது வா!
தவறு இழைக்காது வா!
வள்ளுவரின்
வான் சிறப்பாக வா!
வா! மழையே! வா!
சா. கா. பாரதி ராஜா