வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலை

Vinkmag ad

முதுகுளத்தூர், : தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் இந்தியா முழுவதும் கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசு உதவியுடன் அனைத்து கிராம ஊராட்சிகள் மூலம் துவக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இத்திட்டம் கடந்த 2008ம் ஆண்டு துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கண்மாய், ஊரணி ஆழப்படுத்துதல், வரத்து கால்வாய் சீரமைத்தல், பண்ணை குட்டைகள் அமைத்தல், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முதலில் தினக்கூலியாக ரூ.80 வழங்கப்பட்டது.  பின்னர் ரூ.119, ரூ.132 என படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது பணியின் அளவை பொறுத்து அதிகபட்சமாக ரூ.148 வரை தினசரி கூலியாக வழங்கப்படுகிறது. வறட்சி மாவட்டங்களில் கிராம மக்களுக்கு இத்திட்டத்தின் மூலம் தினசரி வருவாய் கிடைத்து வருகிறது.
ஆனால் இத்திட்டத்தில் அதிகபட்சமாக ஒருவர் ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடியும். கடந்த ஆண்டு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை முற்றிலும் பொய்த்து விட்டதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தேசிய வேலை உறுதி திட்ட பணி நாட்கள் கடந்த ஆண்டு 150 என உயர்த்தி மாநில அரசு அறிவித்தது.
இதனால் கிராம மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இந்த ஆண்டு மீண்டும் 100 நாட்கள் மட்டுமே இத்திட்டத்தில் பணி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து வறட்சி நிலவுவதால் தேசிய ஊரச வேலை திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கூறுகையில், “மழை பொய்த்து வறட்சி நிலவுவதால் கிராமங்களில் அனைத்து குடும்பத்தினரும் இத்திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.

போதிய மழையில்லாததால் தமிழக அரசு சென்னை தவிர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. எனவே தேசிய வேலை திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்கினால் கிராம மக்களுக்கு பேருதவியாக இருக்கும். சென்ற ஆண்டை போல தமிழக அரசு இந்த ஆண்டும் கூடுதலாக 50 நாட்கள் பணி வழங்க வேண்டும்“ என்றனர்.

News

Read Previous

போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

Read Next

என்.எஸ்.எஸ் முகாம் நிறைவு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *