முதுகுளத்தூரில் தொடரும் ஆபத்தான பயணம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் தொடரும் ஆபத்தான பயணம் ஒரு ஆட்டோவில் 9 பேர் போதிய பஸ் வசதி இல்லாததால் விபரீதம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் ஒரு ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆட்கள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது.
முதுகுளத்தூரில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கும், கூலி வேலைகளுக்கும் முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதுபோக பள்ளி, கல்லூரி மாணவர்களும் கிராமங்களில் இருந்து நகரங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இவர்களின் வசதிக்காக முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான கிராமங்களுக்கு ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உதாரணமாக, முதுகுளத்தூரில் இருந்து ஏனாதி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி வழியே உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதேபோல், முதுகுளத்தூரில் இருந்து இளஞ்செம்பூர், பூக்குளம், மேல்சிறுபோது சிக்கல் வழியே உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பஸ் இரண்டும், தனியார் பஸ்கள் இரண்டும் செல்கின்றன.

இவ்வாறு கிராம பகுதிகள் அனைத்திற்கும் ஒன்றிரண்டு பஸ்களே இயக்கப்படுகின்றன. சில கிராமங்களுக்கு வெறும் மினி பஸ்தான் இயங்குகிறது. இதுபோன்று இயக்கப்படும் குறைவான பஸ்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வருகின்றன. இதனால் வேலைக்கு செல்பவர்களும், கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய மாணவர்களுக்கும் பஸ்சில் முட்டிமோதி ஏறி, பயணிக்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் காட்சியை பார்க்கலாம்.

பஸ்களில் ஏற முடியாதவர்கள், ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். காசு பார்க்கும் ஆசையில் ஆட்டோ டிரைவர்கள், அதிக ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர். ஏற்கனவே, முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் சாலை மேடும், பள்ளமுமாக படுமோசமாக கிடக்கிறது. இதில் ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயமே நிலவுகிறது. மக்களும், மாணவர்களும் தினமும் ஆபத்தான பயணத்தையே மேற்கொள்கின்றனர். எனவே முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேடுபள்ளம் சாலை பயமுறுத்தும் ஆளை

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் முத்துசெல்லம், கவிதா ஆகியோர் கூறுகையில், ‘‘ முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி செல்ல முடியவில்லை. எனவே வேறு வழியின்றி ஆட்டோக்களில் பயணிக்கிறோம். ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர். இங்குள்ள மோசமான சாலைகளில் ஆட்டோக்கள் குலுங்கி செல்லும்போது, பயமாக உள்ளது. எந்த இடத்தில் கவிழும் என்று தெரியவில்லை. எனவே எங்களது சிரமத்தை போக்கும் வகையில், கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்’’ என்றனர்.

News

Read Previous

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

Read Next

அன்புத் தோழி

Leave a Reply

Your email address will not be published.