பரமக்குடி- முதுகுளத்தூர் சாலை ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தல்

Vinkmag ad

பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரூ.37 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் வழியாக சாயல்குடி, திருச்செந்தூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களால் முதுகுளத்தூர் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

மேலும் அச்சாலையின் முக்கிய பகுதியான ஐந்து முனை சந்திப்பானது மதுரை, திருச்சி, சென்னை, நயினார்கோவில், இளையான்குடி, ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் மற்றும் பரமக்குடிக்கு வரும் வாகனங்கள் வந்து செல்லும் இடமாகவும், மக்கள் கூடும் பகுதியாகவும் இருந்து வந்தது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ரயில்வே மேம்பாலப் பணியுடன் ஐந்துமுனை சந்திப்பு பகுதியிலும் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்காக ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ரயில்வே கேட் பகுதியிலிருந்து முதுகுளத்தூர் சாலை மற்றும் இளையான்குடி சாலையில் வேந்தோணி வரத்துக்கால் பகுதியை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டியுள்ளனர். இவர்களை காலி செய்யுமாறு அரசு தரப்பிலிருந்து நோட்டீஸ் விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் மேம்பாலப் பணியினை திட்டமிட்டபடி நடக்க விடாமல் தடுக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகள் அனுபவம் செய்து வந்ததற்காக அரசிடம் இழப்பீடாக மாற்று இடம் வேண்டும் என கோரலாம். இதனை விடுத்து அரசின் திட்டத்தையே முடக்க நினைப்பது தவறான போக்காகும். இதுபோன்ற காரணங்களைக் கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பாலப் பணியினை தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News

Read Previous

பீ.மு.மன்சூர்

Read Next

பிரபலங்கள் வாழ்விலே

Leave a Reply

Your email address will not be published.