தண்ணீர் தேடாத கிராமம்: மழைநீரை சேமித்து சாதனை

Vinkmag ad

 

 

முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே மைக்கேல்பட்டிணத்தில் ஊரணியில் மழைநீர் சேமிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு 11 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடே ஏற்பட்டது இல்லை.

மைக்கேல்பட்டிணம் கிராமத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில், நுாறு சதவீதம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து வெளியேறும் கூடுதல் மழைநீர், 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஊரணியில் அமைக்கப்பட்ட இரண்டு ராட்சத தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. ஊரணி எப்போதும் நிரம்பியே உள்ளது.இந்த தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச்செல்லும் மக்கள், ‘தேத்தாங்கொட்டை’ விதைகள் மூலம் தண்ணீரை தெளிய வைத்து, காய்ச்சி பயன்படுத்துகின்றனர். இந்த தண்ணீர், ‘மினரல் வாட்டரை’ விட துாய்மையாக உள்ளதாக கிராம மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

மிக்கேல் கூறியதாவது: கலங்கலான தண்ணீரை தெளிய வைக்க, கடைகளில் 200 கிராம்’தேத்தாங்கொட்டை’ விதைகளை 5 ரூபாய்க்கு வாங்கி, மண் பானைகளில் உரசி, பின்னர் காய்ச்சி பயன்படுத்துவதால், எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எங்கள் ஊராட்சியில், 11 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. ஊராட்சியில் வெற்றிகரமான மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தியதை பார்வையிட, தினமும் வெளியூர்களில் இருந்து பார்வையாளர்கள் வந்து செல்வது, எங்களுக்கு பெருமையாக உள்ளது, என்றார்.

ஊராட்சி தலைவர் ஜேசுமேரி கூறியதாவது: 2003ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, ஊராட்சியில் அமல்படுத்தியதற்காக மாநில விருது பெற்றேன். மேலும், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுத்ததற்காக, உலக வங்கி சார்பில் விருது பெற்றேன். 30 லிட்டர் கொள்ளவுள்ள மண் பானைகள், அனைத்து வீடுகளிலும் உள்ளன. இவற்றில் தேத்தாங்கொட்டைகளை உள்புறம் உரசி தண்ணீரை ஊற்றினால் தெளிந்து விடும். அதை காய்ச்சி வைத்து நன்னீராகவே மக்கள் பயன்படுத்துகின்றனர், என்றார்.

 

News

Read Previous

மோட்டார் சாதிக் தாயார் வஃபாத்து

Read Next

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகம் அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *