கமுதி-முதுகுளத்தூர் சாலையில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்

Vinkmag ad

கமுதி, :  கமுதி – முதுகுளத்தூர் சாலையில் கோட்டைமேடு பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் உடனடியாக இந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கமுதி – முதுகுளத்தூர் சாலையில் கனரக வாகனங்கள் உட்பட தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. முதுகுளத்தூர், பேரையூர், கடலாடி, ராமநாதரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் பாக்குவெட்டி, கருங்குளம், உலகுநடை, செகநாதபுரம்,  கிடாரிகுளம், உப்பங்குளம், மருதங்கநல்லூர், சின்னஆனையூர், பெரியஆனையூர், புலியங்குளம், புல்வாய்க்குளம், கொல்லங்குளம், செங்கோட்டைபட்டி, சாமிபட்டி, கல்லிக்குளம், இலந்தைக்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் டூவீலர், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் கோட்டைமேடு பகுதியில் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின் கம்பங்களில் உள்ள சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகளின் பலத்தில் எலும்புக்கூடாக இந்த மின் கம்பங்கள் சாலையோரங்களில் உள்ளன. எந்த நேரமும் இவை ஒடிந்து சாலையில் விழும் நிலையில் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது குறித்து இப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். இருப்பினும் இதுவரை இந்த மின்கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “வரிசையாக அனைத்து மின்கம்பங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளன. ஒரு மின் கம்பம் ஒடிந்து விழுந்தால், மின் கம்பிகளோடு சேர்ந்து அடுத்த மின்கம்பத்தையும் இழுத்துக் கொண்டு நடுரோட்டில்தான் விழும். விபரீதம் ஏற்படும் முன்னர் இந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.

கமுதி மின்வாரிய பொறியாளர் சரவணன் கூறுகையில், “நேரில் சென்று சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, உடனடியாக அவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

News

Read Previous

உதவித்தொகை கிடைக்காமல் மாணவ, மாணவிகள் அலைக்கழிப்பு

Read Next

அசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *