கொரோனா

Vinkmag ad

கொரோனா தொற்று கண்டவர்களில்
85% பேருக்கு அறிகுறிகள் ஏதுமின்றி
எப்போது வந்தது
எப்போது சென்றது என்பது கூட அறிய முடியாத அளவில் வந்து செல்கிறது

அறிகுறிகள் தோன்றுவோரில்
பெரும்பான்மை சாதாரண அறிகுறிகளுடன் சரியாகிவிடுகிறார்கள்

மரண விகிதம் நூறுக்கு ஒன்று என்ற அளவில் மட்டுமே இருக்கிறது

இதனால் கொரோனா வந்தாலே குலை நடுங்கி ஒடுங்கத்தேவையில்லை

தேவையற்ற பீதி பல நேரங்களில் நம்மை தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தேவையற்ற விபரீத முடிவுகளை எடுக்க வைக்கிறது.

அன்னாரின் தற்கொலையும் அதைப் போன்ற ஒரு தவறான முடிவினால் விளைந்ததே ஆகும்.

கொரோனா தொற்று ஒரு பக்கம் அச்சுறுத்த
இன்னொரு பக்கம் அதை சுற்றி எழுப்பப்படும் தேவையற்ற பீதி பெரிதாக அச்சுறுத்துகின்றது.

கட்டாயம் எச்சரிக்கை உணர்வு தேவை தான் ஆனால் அந்த எச்சரிக்கை உணர்வு ஒருபோதும் நம் மனிதத்தன்மையை விட்டும் நம்மை விலகிச்செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் மனநலன் கருதி

அரசு தினமும் தொற்று எண்ணிக்கையை அறிவிப்பதையும்
மரண எண்ணிக்கையை அறிவிப்பதையும்
தவிர்த்து விடுவது சிறந்தது.

காரணம்
இதையே அனைத்து ஊடகங்களும் மீண்டும் மீண்டும் பக்கம் பக்கமாக
காட்சி காட்சியாக ஒலிபரப்புகின்றன

இதனால் வீட்டில் இருக்கும் மக்கள் அதிலும் முதியோர் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

அவர்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வு
நல்ல விழிப்புணர்வு
மற்றபடி

தினமும் நமது மாநிலத்தில் எங்கெல்லாம் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது
எங்கெல்லாம் மக்கள் இறந்தனர் என்பது ஒரு அளவுக்கு மேல் செய்தியாக கொண்டு சென்றால் அதை தாங்கும் சக்தி நம்மில் பெருமளவு மக்களுக்கு இல்லை

கொரோனா என்றாலே மரணம் என்ற அளவில் புரிந்து கொள்ளப்பட்டாலும் தவறு.

கொரோனா ஒரு நோயே இல்லை
அதற்கு நாம் சட்டையே செய்ய வேண்டியதில்லை என்று புரிந்து கொண்டாலும் தவறு.

மேற்சொன்ன இரண்டுக்கும் இடையே தான் அந்த நோய் குறித்த உண்மை நிலை இருக்கிறது.

அதை உணர்த்த அறிவார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு மீடியாக்கள் ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா வந்த அனைவரும் மரணமடைவதில்லை. நூற்றில் ஒருவர் மட்டுமே மரணமடைகிறார் எனும் செய்தியை அடிக்கடி மக்களுக்கு செய்தி வாசிப்பவர்கள் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்

கொரோனா குறித்த பீதி நிலை ஏற்பட்டாலோ
தீவிர மன அழுத்தத்தை உணர்ந்தாலோ கட்டாயம் டிவி பார்ப்பது வாட்சப் பார்ப்பதை தவிர்த்து விட்டு புத்தகம் படிப்பது இசை கேட்பது ஆன்மிகத்தில் லயிப்பது என்று இறங்கிவிட வேண்டும்.

மீண்டும் மீண்டும் கூறுகிறேன்

நம்மில் யாருக்கும் வேண்டுமானாலும் கொரோனா வரலாம்.
ஆனால் நம்மில் யாரெல்லாம் அதைக் கடந்து வெற்றி பெற்று வாகை சூடப்போகிறோம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்

நமது தன்னம்பிக்கையையும் அறிவையும் கொண்டு கொரோனாவை வென்றிட முடியும்

கொரோனா வந்த ஒருவரை
மனதால் அரவணையுங்கள்
அவரிடம் போனில் பேசுங்கள்
அவரை ஆசுவாசப்படுத்துங்கள்

அவரை வெறுக்காதீர்கள்
அருவருக்கத்தக்க ஒன்றாக அவரைப் பார்க்காதீர்கள்

நிச்சயம் உங்களின் அன்பால் அவர் கொரோனாவை வென்று வருவார்.

நாளை உங்களை அது தொற்றிக்கொள்ளும் போது இன்று நீங்கள் தந்த அன்பை
அவரும் உங்களுக்குத் தருவார்

அன்பினால் ஆகும் உலகு

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

News

Read Previous

தமிழ் இலக்கியங்களில் சமூகப்பணி

Read Next

புலன வார இதழ்

Leave a Reply

Your email address will not be published.