கொரோனா நோய் காற்றின் மூலம் பரவும்..

Vinkmag ad

கொரோனா நோய் காற்றின் மூலம் பரவும்..

உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் !

 

அப்படியானால் ஒரு தெருவிலுள்ள நோயாளியிடமிருந்து வேறு ஒரு தெருவில் இருக்கும் ஒருவருக்கு காற்றின் மூலம் நோய்  பரவுமா?  ஓர் அலசல்.

முதலில் கொரோனா நோய் எப்படியெல்லாம் பரவுகிறது என்று பார்ப்போம். இது கீழ்க்கண்ட மூன்று வகைகளில் பரவுகிறது.

1 Droplet infection -நீர்த்திவலைகள் மூலம்

2. Droplet nuclei – நுண்திவலைகள் கருக்கள் மூலம் – இதைத் தான் நாம் காற்றின் மூலம் பரவுதல் என்கிறோம்

3. Fomites – தொடுபொருட்கள் மூலம்.

இவற்றை  விரிவாகப் பார்ப்போம்.  அதாவது நோயுள்ள ஒருவர் இருமும்போதோ தும்மும்போதோ, பேசும்போதோ அல்லது பாடும்போதோ  வைரஸ் கிருமியானது மூச்சுக் குழல் வழியாக வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும்போது மூச்சுக் குழலிலுள்ள  காற்று, நீர்  மற்றும் இறந்துபோன அணுக்கள் இவைகளுடன் வைரஸ்  சேர்ந்து பல வகை அளவுகளில் உள்ள  நீர்த்துளிகளாக வெளியேறுகிறது.

இது வேறு ஒருவரின் மூச்சுக் குழலுக்கு நேரடியாகவோ அல்லது  இந்தக் காற்றை சுவாசிப்பதன் மூலமாகவோ அல்லது  இந்த வைரஸ் படிந்த பொருட்களைத் தொட்டுவிட்டு அதே கைகளைக் கொண்டு வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதாலோ சென்று நோயை ஏற்படுத்துகிறது.

இந்த வைரஸ் அடங்கிய நீர்த்துளிகள் எப்படி அடுத்தவரின் மூச்சு மண்டலத்திற்கு செல்கிறது? இங்கேதான் இந்த நீர்த்துளியின்  அளவு  முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு நீர்த்துளியின் அளவு 5 மைக்ரானிற்கு (ஒரு மைக்ரான் அல்லது ஒரு மைக்ரோமீட்டர் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) மேற்படும்போது அதை நீர்த்திவலை (droplet) என்கிறோம். அதுவே  5 மைக்ரானுக்குக் கீழாகும்போது அதை நுண்திவலைகள் (droplet nuclei ) என்கிறோம். இந்த அளவின் புரிதலுக்காக ஒன்றை ஒப்பிடுவோமேயானால் ஒரு முடியின் அளவோடு ஒப்பிடலாம். ஒரு முடியின் தடிமனானது  50 லிருந்து 75 மைக்ரான் வரை இருக்கும்.

இந்த அளவின்  முக்கியத்துவம் என்ன?  நீர்த்திவலைகள்  சற்றே அளவில் பெரியவை என்பதினால் நோயாளியிடமிருந்து வெளியேறியவுடன்  புவிஈர்ப்பு விசை காரணமாக சில நிமிடங்களிலேயே  தரையில் வீழ்ந்துவிடும். எனவே  இவற்றால்  சற்றேறக்குறைய ஒரு மீட்டர் தூரம் வரையே காற்றில் மிதந்து செல்ல இயலும். இந்த ஒரு மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒருவரின் வாய், மூக்கு மற்றும் கண்களின் மீது இந்த நீர்த்திவலைகள் நேரடியாகப் படிந்து  நோயை ஏற்படுத்தும். இதுவரை இந்த வழியாக ஏற்படும் பரவலே முக்கியத்துவம் பெற்றது   எனவேதான் அரசாங்கம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தியிருக்கிறது.

 

இரண்டாவதாக  நுண்திவலைகள் மிகவும் அளவில் சிறியவை என்பதினால் இவற்றால் காற்றில் நீண்ட நேரம் மிதக்கவும் முடியும். பல மீட்டர் தூரம் வரை  பயணிக்கவும் முடியும். இதைத்தான் காற்றின் மூலம் பரவுதல் என்கிறோம். அப்படியானால் ஒரு தெருவிலுள்ள நோயாளியிடமிருந்து அடுத்த தெருவிலுள்ள ஒரு நபருக்கு நோய்  பரவ இயலுமா? பயப்பட வேண்டாம். பரவாது ! ஏன் பரவாது?

ஒருவரிடமிருந்து அடுத்தவர்க்கு நோய் தொற்ற வேண்டுமானால் இருவருக்குமிடையிலுள்ள தூரம் மட்டுமல்லாது வைரஸ் துகள்களின் அடர்த்தி, காற்றோட்டம் மற்றும் காற்றின் ஈரப்பதம் போன்றவையும்  முக்கியமானது.  நல்ல காற்றோட்டமுள்ள பொதுவெளியில் இந்த நுண் திவலைகள்  நீண்ட தூரம் பயணிக்கும்போது இவற்றின் அடர்த்தி நோயை ஏற்படுத்த இயலாத அளவிற்கு குறைந்துவிடுகிறது . எனவே நோய் ஏற்படுவதில்லை.

அப்படியானால் எங்கே இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது?  நல்ல காற்றோட்டம் இல்லாத அறைகள்,  குளிரூட்டப்பட்ட சந்திப்பு அறைகள்  மற்றும் அலுவலகங்கள் குளிரூட்டப்பட்ட கார்கள் மற்றும் இதர வாகனங்கள்,  குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள், காற்றோட்டம் இல்லாத பிரார்த்தனைக் கூடங்கள், உள்ளரங்கு பாட்டுக் கச்சேரிகள், மக்கள் நெருக்கம் நிறைந்த சந்தைகள் மற்றும்  போக்குவரத்து சிக்னல்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மூன்றாவதாக தொடு பொருள்கள் மூலம் பரவுவது  கொரோனா நோயாளிகள் நிறைந்த மருத்துமனை வார்டுகளிலுள்ள பொருள்கள்  மற்றும் வீடுகளில்  தங்கியிருக்கும் நோயாளியின்  அறையிலுள்ள பொருள்களால் மட்டுமே பரவக்கூடும்.

எனவே நண்பர்களே ! அச்சம்  வேண்டாம். ஆனால் முன்னெச்செரிக்கை மற்றும் கவனம் தேவை . ஆகவே மிகவும்  அவசியம் இல்லாத மக்கள்  கூட்டங்களைத் தவிர்ப்போம். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்போம். பொது வெளியில் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக் கவசம்  அணிவோம். கொரோனாவை வெல்வோம்.

-டாக்டர் எம். வசந்த குமார் எம்.டி.(பொது மருத்துவம் )

சென்னை.

News

Read Previous

சிறு புன் மாலை

Read Next

வையத் தலைமைகொள்

Leave a Reply

Your email address will not be published.