மக்களுக்கு தீராத தொல்லை தரும் நாய்களும் கொசுக்களும்…1

Vinkmag ad

அறிவியல் கதிர்

மக்களுக்கு தீராத தொல்லை தரும் நாய்களும் கொசுக்களும்…1
பேராசிரியர் கே. ராஜு

இந்திய நகரங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க அண்மையில் விசாகப்பட்டினத்தில் உள்ள சூழல் ஆர்வலர்கள் ஒரு பட்டறை நடத்தினர். தங்கள் நகரத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தெரு நாய்களும் கொசுக்களும்தான் என்பதை அங்கு பலரும் வலியுறுத்தினர். உண்மையில், அவர்களில் சிலர் தங்கள் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சந்திக்கும் ஒரே பிரச்சினை நாய்கள் மட்டுமே என்று கூறும் அளவுக்குச் சென்றனர். கிட்டத்தட்ட அதே நேரத்தில் நாய்க்கடியினால் இறப்பவர்களுக்கு  நீதிமன்றம் அமைத்த குழு நிர்ணயித்திருக்கும்  நஷ்டஈடு (சில சமயங்களில் 20 லட்ச ரூபாய் என்ற அளவுக்கு) மிக அதிகம் என்பதால் அதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தது. நாய்க்கடிகளைப் பற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்கும் அளவுக்கு உச்சநீதிமன்றம் செல்லவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

இந்தியாவில் சுமார் 3 கோடி தெரு நாய்கள் இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம். அப்படியெனில் 42 பேருக்கு ஒரு தெரு நாய் என கணக்காகிறது. மற்ற எந்த நாட்டை விடவும் தெரு நாய்கள் அதிகமாக இருப்பது இந்தியாவில்தான். தில்லியில் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கொரு முறை ஒருவரை நாய் கடித்துவிடுகிறது என்கிறது இன்னுமொரு புள்ளிவிவரம். ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ரேபீஸ் தொற்றால் 20,000 பேர் இறக்கின்றனர். உலக அளவில் நாய்க்கடியினால் இறப்பவர்களில் இது 36 சதவீதம். இந்த எண்ணிக்கை வேறு எந்த நாட்டையும் விட அதிகமானது. இந்திய நகரங்களில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் நாய்கள் திரிவதற்கு முக்கியமான காரணம் திறந்த வெளிகளில் சேரும் குப்பைகள்தான். தங்கள் உணவுக்கு தெரு நாய்கள் நம்பியிருப்பது இந்த குப்பைகளைத்தான்.  ஸ்வச் பாரத் பற்றி அதிகம் விளம்பரம் செய்யப்பட்டாலும் கூட, குப்பைகளை அகற்றி நகரங்களைச் சுத்தமாக வைத்திருக்க அரசுத் தரப்பில் செயல்பாடு என்பது பூஜ்யத்திற்கு அருகில்தான். தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் அரசுத் தரப்பில் முனைப்பு இல்லை. குப்பைகளை அகற்றவும் கருக்கலைப்பு அல்லது விரைநீக்கம் மூலம் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் நிதிச் செலவும் மனித சக்தியும் தேவை. இப்படி உருப்படியான விஷயங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க அரசு தயாராக இல்லை.

தெரு நாய்ப் பிரச்சினையிலும் வர்க்கப் பாகுபாடு உண்டு. வசதி படைத்தோர் வசிக்கும் பகுதிகளில் நாய்க்கடியினால் பலியாகும் செய்திகள் அதிகம் வருவதில்லை. குப்பைகளிலிருந்து கிடைக்கும் உணவும் ஒதுங்குவதற்குக் காலி இடங்களும் மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தெரு நாய்களுக்குக் கிடைப்பதில்லை. தேவையான அளவு நிதி ஒதுக்கி இப்பகுதிகளை ஒழுங்காகப் பராமரிப்பதில் நகராட்சி மன்றங்கள் கவனம் செலுத்திவிடுகின்றன.

எல்லா தெரு நாய்களையும் கொல்ல அனுமதி கிடையாது. தீர்க்கவே முடியாத நோய் பீடித்திருந்தாலோ விபத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே நாய்களைக் கொல்லலாம் – அதுவும் மனிதநேயமிக்க வழிகளில்.  தேவையான அளவுக்கு நாய்க் கொட்டடிகள் அல்லது பண்ணைகள் அமைத்துப் பராமரிக்கும் உயர்ந்த கடமை உள்ளாட்சி மன்றங்களுக்கு இருக்கிறது. விலங்குநல அமைப்புகளிடம் இந்த பராமரிப்புப் பணியை விடலாம் என்று உச்சநீதிமன்றம் 2015-ம் ஆண்டில்  கொடுத்த ஒரு தீர்ப்பில் உத்தரவிட்டிருக்கிறது. அதனால் மக்களிடமிருந்து அதிக அழுத்தம் வரும்போது சில நாய்களைப் பிடித்து வேறு பகுதியில் கொண்டுபோய் விட்டுவிடுவது நகராட்சி மன்றங்களின் வழக்கம். ஆனால் நாய்கள் தாங்கள் வழக்கமாக வசிக்கும் பகுதி பற்றிய நுண்ணறிவு உள்ளவை. வேறு பகுதிக்கு கொண்டுபோய் விடப்பட்ட மறுகணமே அவை தாங்கள் இருந்த பகுதிக்குத் திரும்பிவிடும்! “இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க?” என்று அவை நடனமாடாத குறைதான்!

தீர்ப்பு கொடுப்பது மட்டுமே நீதிமன்றங்களின் வேலை. அதைத் தாண்டி வேறு எதையும் செய்ய அவற்றுக்கு அதிகாரம் கிடையாது. தேவையான நிதியை ஒதுக்கி நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டிய கடமை அரசுக்குத்தான் உண்டு. இந்தியாவைவிட மிகக் குறைவான எண்ணிக்கையில் தெரு நாய்கள் உள்ள அமெரிக்காவில் ஒரு நகரத்திற்கு 12 மில்லியன் டாலர்கள் ஒதுக்கினால் மூன்று ஆண்டுகளில் அங்குள்ள தெரு நாய்களை ஒழித்துவிட முடியும் என்கிறது ஓர் ஆய்வு. இந்தியாவில் நாய்களுக்கென இவ்வளவு தொகை ஒதுக்குவதைப் பற்றி கற்பனைதான் செய்ய முடியும்.

News

Read Previous

அன்பு

Read Next

மலேசியாவில் தூரிகை மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published.