கொரோனாவை கேரளா கட்டுப்படுத்தியது எப்படி?.. நாம் அறிந்து கொள்வோம்!

Vinkmag ad

கொரோனாவை கேரளா கட்டுப்படுத்தியது எப்படி?.. நாம் அறிந்து கொள்வோம்!

ஏப்ரல் 12, 2020

வாஷிங்டன் போஸ்ட்’ சிறப்புக் கட்டுரை

கோவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்தியதில் கேரள அரசாங்கத்தின் மகத்தான பணிகளை உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ பட்டியலிட்டு பாராட்டியுள்ளது. கேரளாவின் பணிகள் இந்திய அரசாங்கத்திற்கே கூட முன்மாதிரியாக உள்ளது என வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

கேரளாவில்தான் முதல் தொற்று ஜனவரி மாதம் 30ம் தேதி பதிவானது. ஆனால் தொற்று சென்ற வாரத்தை ஒப்பீடு செய்யும் பொழுது 30% குறைந்தது மட்டுமல்ல; குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 34%ஆக உள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம். மேலும் இது வரை 3பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது சிறந்த முன்னேற்றம் என குறிப்பிடும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை இது எப்படி சாத்தியமாயிற்று எனும் கேள்வியை எழுப்பி கீழ்கண்ட பதிலைத் தருகிறது:

மிகத் தீவிரமான அதிக அளவிலான பரிசோதனைகள், தொற்று உள்ளவர்களைக் கண்டுபிடித்து நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்துதல், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை தீவிரமாக தேடிக் கண்டுபிடித்தல், தொற்று உள்ளவர்களுக்கும் குணமடைந்தவர்களுக்கும் அடிக்கடி மன நல ஆலோசனைகள்.. இவ்வாறு மன நல ஆலோசனையில் மட்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபடுகின்றனர் எனவும் வைரசுக்கு எதிரான போராட்டத்தில் 30,000க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் எனவும் இப்பத்திரிக்கை குறிப்பிடுகிறது.

கேரளா சாதித்தது எப்படி?

வெல்கம் டிரஸ்ட் எனும் தனியார் அமைப்பின் முதன்மை அதிகாரியும் தொற்று நோய் நிபுணருமான ஷாஹித் ஜமீல் கூறுகிறார்:

“கேரளாவின் அணுகுமுறை மிகவும் கண்டிப்பும் அதே சமயம் மனிதாபிமானம் இரண்டும் கலந்ததாக இருந்தது. தொற்று பாதித்தவர்கள் கண்டிப்புத் தன்மையுடன் பாரபட்சமின்றி தனிமைப்படுத்தப்பட்டனர். அதே சமயம் மகத்தான மனிதாபிமானம் அவர்களிடம் காட்டப்பட்டது.”

” உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஹெங்க் பெகடம் இன்னோரு முக்கியமான கோணத்தை முன்வைப்பதையும் வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டுகிறது:

கேரளா அதிவிரைவில் எப்படி கோவிட் 19 வைரசுக்கு எதிராக தன்னைத் தயார்படுத்திக் கொண்டது?

கடந்த காலங்களில் நிபா போன்ற வைரசை எதிர்த்துப் போராடிய அனுபவம் கேரளாவுக்கு கை கொடுத்தது. அது மட்டுமல்ல; அப்பொழுது தான் கற்று கொண்ட படிப்பினைகளை கேரளா அமலாக்கியது. துல்லியமாக இவை எல்லாம் இப்பொழுது கேரளவுக்கு பலன் தருகிறது.”

கேரளாவின் வெற்றிக்கு வேறு இரண்டு காரணங்களையும் ஹெங்க் பெகடம் குறிப்பிடுகிறார். அவை:

1. ஆபத்து குறித்த அம்சங்களை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்ததுஇது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கியது. 2. கோவிட்19 க்கு எதிரான போரில் மக்களையும் ஈடுபடுத்தி, மக்கள் இயக்கமாக மாற்றியது. 

கேரளா எதிர்கொண்ட ஆபத்துக்கள்

வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட கேரளா மிகப்பெரிய ஆபத்துக்கள சந்தித்ததுஅவை என்ன?

1.    ஒரு ஆண்டிற்கு பத்து இலட்சம் சுற்றுலா பயணிகள் கேரளா விற்கு வருகின்றனர்.
2.    கேரளா மக்கள் தொகையில் சுமார் 67 இலட்சம்பேர் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர்.
3.    கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் சீனாவில் கல்வி பயில்கின்றனர்.

இந்த பிரிவினரில் எவர் வேண்டுமானாலும் வைரசைக் கேரளாவிற்குள் கொண்டுவரும் அபாயம் இருந்தது. அதுதான் நடக்கவும் செய்தது. சீனாவில் தொற்று பரவும் செய்தி வந்த உடனே அங்கிருந்து கேரளாவுக்கு திரும்பும் அனைத்து மாணவர்களும் வளைகுடா நாடுகளிலிருந்து வருவோரும் கட்டாய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்திய அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகளை கேரள அரசாங்கம் எடுத்தது. அப்படித்தான் ஜனவரி 30 அன்றே சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்டுகள் ஆட்சி புரிந்த கேரளத்தில் அடிப்படை சுகாதாரத்துக்கும் மருத்துவ வசதிகளுக்கும் கல்விக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது எனும் அடிப்படை உண்மையையும் அதனால்தான் கல்வியிலும் மருத்துவ வசதிகளிலும் கேரளம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது எனவும் வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிறந்த மருத்துவ அடிப்படை வசதிகள்தான் உலக சுகாதார நிறுவனம் பிப்ரவரி மாதத்திலேயே வெளியிட்ட அனைத்து வழிகாட்டுதல் களையும் உடனடியாக அமலாக்க கேரளாவிற்கு உதவியது.

‘ரேபிட் டெஸ்ட்’ எனப்படும் அதிவிரைவு சோதனைகளைத் தொடங்கியது. “பரிசோதனை கியோஸ்க்” எனப்படும் யார் வேண்டுமானாலும் தானாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ளும் பூத்களை உருவாக்கியது. முதன் முதலில் பிளாஸ்மா சிகிச்சையை அமலாக்க அனுமதி பெற்றுள்ளது கேரளா.

அனைத்துக்கும் மேலாக, முதன் முதலில் வைரசால் பாதிக்கப்படும் மக்களுக்கு பொருளாதார திட்டங்களையும் அறிவித்த முதல் மாநிலம் கேரளம்தான் என்பதையும் வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அவற்றைக் கீழ்கண்டவாறு பட்டியலிடுகிறது:

2.6 பில்லியன் டாலர் அதாவது சுமார் 20,000 கோடி ரூபாய் பெறுமான பொருளாதார உதவிகளை இந்திய அரசாங்கம் ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பே கேரளம் அமலாக்கியது. ஊரடங்கிற்கு பிறகு மற்ற மாநிலங்கள் நிதி ஆதாரங்கள் பற்றி திட்டமிடத் திணறிய பொழுது கேரள அரசாங்கத்தின் வேகமான அறிவிப்பும் அமலாக்கமும் மக்களுக்கு ஊரடங்கை பின்பற்ற நம்பிக்கையையும் விருப்பத்தையும் தோற்றுவித்தது.

மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வீடுகளுக்கே அரிசி,பருப்பு உட்பட அனைத்து பொருட்களும் அனுப்பப்பட்டன.வீடுகளுக்குக் கொண்டுபோய் பொருட்களைத் தருவதற்கு தனியாக இரண்டு இலட்சம் பேர் கொண்ட தன்னார்வலர் படை உருவாக்கப்பட்டது. ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களும் இரண்டு மாதங்களுக்கு சேர்த்துத் தரப்பட்டது. அங்கன்வாடி குழந்தைகளுக்குக் கூட உணவு வீடுகளுக்கு அனுப்பப்பட்டது. வீடுகளில் உள்ளவர்களுக்கு இணையத்தின் தேவையை உணர்ந்து அனைத்து நிறுவனங்களிடம் பேசி அதிகப்படியான டேட்டா பெறுவதை உத்தரவாதம் செய்தது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சுமார் 68% நிவாரண முகாம்களை அமைத்தது. மக்களுக்காக சமூக சமையல் கூடங்களை உருவாக்கியது.

குறைகளே இல்லையா? சில குறைகளும் உண்டு என வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுகிறது.

 

உதாரணத்திற்கு ஓரிரு விழாக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் ஊரடங்கு இன்னும் கடுமையாக அமலாக்கப்பட வேண்டும் எனவும் சில இடங்களில் இன்னும் தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் சில சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் வைரசைக் கட்டுப்படுத்திய கேரளாவின் சாதனை ஒரு முன்மாதிரியாக உள்ளது. பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் இத்தாலி குடி மக்கள் கூட கேரளாவில் குணம்  அடைந்துள்ளனர். 75 வயதுக்கு மேலே உள்ள 6 பேர் குணம் அடைந்துள்ளனர். குறைந்தபட்சம் 6 மாநிலங்கள் கேரளாவின் செயல்பாடுகள் குறித்து ஆழமாகக் கேட்டு அறிந்துள்ளனர். 

இந்த செயல்பாடுகள் குறித்து கேரளா சுகாதார அமைச்சர் கே.கேஷைலஜா

என்ன கூறுகிறார் ?

“நாங்கள் நல்லது நடக்க வேண்டும் என விரும்பினோம்; ஆனால் மிக மோசமான சூழலுக்கு எங்களை தயார் படுத்தி கொண்டோம். இப்பொழுது நோய் தொற்றின் வரைபட கோடு உயராமல் தட்டையாக உள்ளது. ஆனால் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்”

இந்த தன்னடக்கமும் உறுதியும்தான் கேரளாவின் வெற்றிக்கு காரணம் !

(தொகுப்புஅன்வர்உசேன்)

News

Read Previous

‘.இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள்.”

Read Next

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *