“ஸ்டெம்செல் மூலம் பல நோய்களுக்குத் தீர்வு’

Vinkmag ad

தீர்க்க முடியாத நிலையிலுள்ள பல நோய்களுக்கு ஆதார திசுக்களை (ஸ்டெம் செல்) உடலில் செலுத்தி சிகிச்சையளிப்பதன் மூலம் தீர்வு காணலாம் என்றனர் மதர்செல் ரீஜெனரேட்டிவ் மையத்தின் இயக்குநர்களும், மருத்துவர்களுமான எஸ். சங்கரநாராயணன், வி.ஆர். ரவி.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் அளித்த பேட்டி:

திருச்சி மதர்செல் ரீஜெனரேட்டிவ் மையமும், தேசியக் கல்லூரி முதுநிலை உயிர்தொழில்நுட்பவியல் துறையும் இணைந்து ஆதார செல் (ஸ்டெம்செல்) மற்றும் டிஸ்யூ என்ஜினியரிங் என்ற தலைப்பில் மருத்துவ மேம்பாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தியுள்ளது.

இந்த கருத்தரங்கில் மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், உயிர்தொழில்நுட்பவியல் ஆகிய துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு அப்துல்கலாம் கனவு போட்டியில் வினாடி வினா, சுவரொட்டி தயாரித்தல், மாதிரி வடிவம் தயாரித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெறும் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுடன் நாங்கள் இணைந்து ஓராண்டு காலத்துக்குள் மனித உறுப்புகளை முப்பரிமாண அச்சு (3டி பிரிண்டிங்) மூலம் உருவாக்கும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். புற்றுநோய், அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நவீன முப்பரிமாண அச்சு மூலம் காது, மூக்கு, ஜவ்வு, தாடை எலும்பு ஆகியவற்றை உருவாக்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். உதாரணமாக, பாதிக்கப்பட்ட நபரின் காது, மூக்கு, தாடை பகுதிகளுக்காக, அவர்களது உடலிருந்து ஆதார திசுக்களை எடுத்து அதை பாதிக்கப்பட்ட உடல்பகுதியில் பொருத்தி, பொறியியல் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் மூலம் வளரச் செய்து, நோய் குறைபாட்டை சரி செய்யும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

புற்றுநோய்க் கட்டிகள், கொழுப்புக் கட்டிகள், அமில வீச்சு, ரத்த நாளக் குழாய்களில் ஏற்படும் புண்களுக்குச் சிகிச்சையளித்தல், முகத்தாடைச் சீரமைத்தல் போன்ற பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையளிக்கலாம். திருச்செங்கோட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு வாய்ப் பகுதியில் ஏற்பட்டிருந்த கொழுப்புக் கட்டியையும், செங்குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 36 வயது இளைஞருக்கு கண் பார்வைக்கான சிகிச்சையையும் ஸ்டெம் செல் மூலமாக அளித்து அவர்கள் நலம் பெற்றுள்ளனர். இதுபோல, 7 வயதுடைய உடல் வளர்ச்சிக் குறைபாடு கொண்ட சிறுவனுக்கு கை, கால்கள் அசைவு இல்லாமல் இருந்தது. அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை மூலம் தற்போது கை, கால்கள் செயல்பட தொடங்கியிருக்கிறது.

மருத்துவர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆதார திசுக்கள் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்ய முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றனர் அவர்கள். முன்னதாக, காலையில் நடைபெற்ற மருத்துவத் தொடர் சொற்பொழிவை கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.கே. முரளிதரன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் பல்வேறு மருத்துவர்கள் பங்கேற்று பேசினர்.இந்திய மருத்துவ மன்றத்தின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் எம்.எஸ். அஷ்ரப், திருச்சிப் பிரிவுத் தலைவர் எஸ். சேதுராமன், காவேரி மருத்துவமனை இயக்குநர் எஸ். மணிவண்ணன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

News

Read Previous

வணிகப் பொருளா கல்வி?

Read Next

காதல் பித்தன்

Leave a Reply

Your email address will not be published.