மது ஒரு பெரும் பாவம்

Vinkmag ad
 
 
மது என்பது தீமைகளின் தாய். அது பெற்றெடுக்கும் பிள்ளைகள் நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
”ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்;பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை.
அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது.வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள். கோபம், வெறுப்பு,சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது,குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது,திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது,காரணமே இல்லாமல்
மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். ‘குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்’ என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை”
ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும்.சிந்திப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. .
ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம்,தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும்.கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை,ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண்,ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம்,கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை,இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு,இதய தசைகள் பழுதடைதல்
என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும்.
விசுவாசிகளே ! நீங்கள் போதையாக இருக்கும் நிலையில் தொழுகையின்பால் நெருங்காதீர்கள்
அல்குர்ஆன் 4:43
மது அருந்துபவனுக்கு நபிமொழியிலும் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.
 ‘போதைப் பொருளை அருந்துபவனுக்கு ‘தீனதுல் கபால்’ எனும் பானத்தைப் புகட்டுவதாக அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி உள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! ‘தீனதுல் கபால்’என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டதும் அல்லாஹ்வின் தூதரவர்கள், ‘நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),நூல்: முஸ்லிம்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஒருவன் மரணமடைந்து விட்டால் அவன் விக்கிரக ஆராதனை செய்தவன் போலவே அல்லாஹ்வை சந்திப்பான்’ என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி
 ‘போதை தரக்கூடிய அனைத்தும் மதுவாகும்.போதை தரக்கூடிய அனைத்தும் ஹராமாகும்’
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்
‘எவன் மது அருந்தி அதனால் அவனுக்குப் போதை ஏற்பட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.அவ்வாறே அவன் மரணமடைந்து விட்டால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனுடைய நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான். அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
தவ்பா செய்து மீண்டும் மது அருந்தி, போதை ஏற்பட்டால் (மீண்டும்) அவனது நாற்பது நாட்களின் காலைத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.அப்படியே அவன் மரணமடைந்தால் நரகம் புகுவான்.அவன் தவ்பா செய்தால் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். திரும்பவும் அவன் மது அருந்தி போதை ஏற்பட்டால் மறுமை நாளில் அவனுக்கு ‘ரத்கதுல் கபால்’ என்ற பானத்தைப் புகட்டுவது அல்லாஹ்வின் மீது கடமையாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ‘ரத்கதுல் கபால்’ என்றால் என்ன? என்று வினவினர். அதற்குநபி (ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளின் சீழ்’ என பதிலளித்தார்கள்’
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்:இப்னு மாஜா
எவனொருவன் போதை தரும் மதுவை அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புஹாரி : 5575
மது அருந்துவோர் குற்றவாளியாக இருப்பது போல அவர்களுக்கு உதவியாக இருப்போரும் குற்றவாளிகளே!. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மது சம்பந்தமாக 10பேர்களை சபித்துள்ளார்கள்.
1) மதுவை காய்ச்சுபவர்,
2) அதனை காய்ச்சுவதற்கு உதவுபவர்,
3) அதை குடிப்பவர்,
4) அதனை புகட்டுபவர்,
5) அதனை சுமந்து செல்பவர்,
6) அதனை சுமந்து செல்ல ஏற்பாடு செய்பவர்,
7) அதனை விற்பனை செய்பவர்,
8) அதை வாங்குபவர்,
9) அதனை வெகுமதியாக கொடுப்பவர்,
10) அதனை விற்றுப் புசிப்பவர்
 ஆகியோர்.
அறிவிப்பவர் : ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு,  நூல்: திர்மிதி
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்”
ஹாகிம்
மதுவால் ஏற்படும் பிரச்சனைகள்

மது மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது.
மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் (Cirrhosis) ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

மது வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி (Gastritis) ஏற்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது.

வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது.

தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது.

உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்படுகிறது.

அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.

கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம் (Korsakoff’s Syndrome) என்ற மூளை பாதிப்பு நோய் ஏற்பட வழி வகுக்கிறது.

உயிர்சத்து `பி’ குறைவால் வெர்னிக் சின்ட்ரோம்(Wernike’s Syndrome) என்ற நோய் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மது அருந்துபவர்களுக்கு மன நோய்கள் பல ஏற்பட்டு மன நோயாளிகளாகி விடும் வாய்ப்பு அதிகமுண்டு.

மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.

1, 30,000… இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்...மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள்24 சதவிகிதம்
என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40சதவிகிதத்துக்கும் அதிகமாம்).
இன்னும் எத்தனையோ பிரச்சனைகள்.அத்தனையும் மதுவினால் ஏற்படுவதே.மதுப்பிரியர்களே! முதலில் மதுவை குடிப்பீர்கள்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மது மனிதனைக் குடிக்கும் என்பது மட்டுமே உங்கள் நினைவில் நிற்கப்படும்.
 குடிநோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பதைவிட அந்தப் புதைக்குழிக்குள் ஒருவர் விழாமல் காப்பாற்றுவது புத்திசாலித்தனம். அதனால், குடிபோதைபற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தே தொடங்க வேண்டும்.அப்படி செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்!
உங்களால் முடிந்த அளவு இந்த பதிவை மற்றவர்களோடு பகிரவும். மது என்பது பெரும் பாவம் என்று அறியாமல் விளையாட்டாக அருந்தும் ஒருவர் மதுவை விட்டு விலகினாலும் , இந்த கட்டுரையின் நோக்கம் நிறைவேறிவிடும்.

News

Read Previous

முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம்

Read Next

தொழுகையில் அணிவகுத்த நாம் – கொள்கையில் விலகி போகலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *