பருமன் எனும் பலத்த பிரச்னை!

Vinkmag ad

பருமன் எனும் பலத்த பிரச்னை!

More and more private clinics than in the stomach along with another

பெண்களுக்கு ஆயிரம் கவலைகள் என்றாலும், அவற்றில் முக்கியமான கவலை பருமனாகத்தான் இருக்கும். ஆரோக்கியத்தின்  மீதான அக்கறை என்பதைவிட, உடல் தோற்றம் பற்றிய பிரச்னை என்பதால், பெண்களுக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக  இருந்து வருகிறது பருமன். இந்த பருமனுக்கான காரணிகள் என்னென்ன? அந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகள்  என்னென்ன? பொதுமருத்துவர் சாதனா விளக்குகிறார்.
பருமன் என்று எதைச் சொல்கிறோம்?

‘‘பருமனுக்கு என்று பொதுவான அளவுகோல் எதுவும் இல்லை. ஒரு தனி மனிதரின் உடலமைப்பையும் உயரத்தையும்  பொறுத்தே போதுமான எடையா அல்லது பருமனா என்பதை முடிவு செய்ய முடியும். இதைத்தான் Body mass  index என்ற பி.எம்.ஐ. முறையின் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். பருமன் அதிகரித்துக் கொண்டிருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், ஒரு பொதுமருத்துவரிடம் சென்றாலே போதும்… அவர் சில கணக்குகளின் அடிப்படையில் கண்டுபிடித்துவிடுவார்.

18.5 என்ற அளவில் பி.எம்.ஐ. இருந்தால் போதுமான எடையில் இல்லை என்பதையும், 18.5 முதல் 24.9  வரை இருந்தால் அது  சரியான எடை என்பதையும், 25க்கும் மேல் இருந்தால் அது அதிக எடை என்றும், 30க்கும் மேல்  இருந்தால் பருமன் என்றும்  கணக்கிடுவார்கள். உங்கள் பி.எம்.ஐயை நீங்களே கண்டுபிடிக்க இன்னொரு எளிய வழியும் இருக்கிறது. உங்கள் உயரம் 165  செ.மீ. இருந்தால் அதில் 100ஐ கழித்துவிடுங்கள். மீதமிருக்கும் 65 என்பது உங்கள் எடையாக இருக்கலாம். ஆனால், 65  கிலோவுக்கு மேல் இருந்தால் நீங்கள் பருமனில் இருப்பதாக அர்த்தம். இது தோராயமான கணக்குதான்…’’

பருமன் எதனால் ஏற்படுகிறது?

‘‘உடலில் ஏற்படும் இந்த தேவையற்ற எடை மரபியல் சார்ந்த காரணங்கள், வாழ்க்கை முறைத் தவறுகள் என இரண்டு  வழிகளில் ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் மரபியல் காரணங்களைவிட வாழ்க்கைமுறைத் தவறுகளால்தான் பருமன்  அதிகம் ஏற்படுகிறது. ஒருநாளைக்கு 1,800 கலோரிகள் சராசரியாக நம் உடலுக்குத் தேவை. தேவைக்கும் அதிகமான  கலோரிகளை நாம் சாப்பிட்டு, அந்த சக்தி செலவழிக்கப்படாமல் இருந்தால் அது கொழுப்பாக மாறி பருமனை ஏற்படுத்துகிறது.

எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைவாக இருந்தாலும், உடல்ரீதியான போதுமான செயல்பாடுகள் இல்லாவிட்டால்  பருமன் ஏற்படும். Empty calories என்று சொல்லக்கூடிய பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் இன்று நம்மிடையே அதிகமாகிவிட்டது. இவற்றில் இருக்கும் அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்பு போன்றவை பருமனை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள்…’’

மருத்துவரீதியான காரணங்களாலும் பருமன் ஏற்படுமா?

‘‘நீரிழிவு, ஹைபோதைராய்டு, பாலிசிஸ்டிக் ஓவரி, ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்வது, ரத்த அழுத்தம்,  கொலஸ்ட்ரால், புற்றுநோய்கள் போன்ற உடல்ரீதியான பிரச்னைகளின் அறிகுறியாகவும் பருமன் இருக்கும். பருமன்  ஏற்படுவதாலும் இந்த நோய்கள் வரலாம். அதனால் தான், பருமனை உடனடியாக கவனியுங்கள் என்று சொல்கிறோம். பரம்பரை  ரீதியான காரணங்களால் நமக்கு இந்த நோய்கள் ஏற்பட்டால் கூட உடல் எடையை சரியாகப் பராமரிப்பதன் மூலம் இந்த  நோய்கள் வராமல் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட முடியும்…’’

பெண்களுக்கு பருமன் ஏற்படும் காலம் எது?

‘‘இன்றைய நிலைமையில் குழந்தைப் பருவத்திலேயே உடல் எடை அதிகமாகத் தொடங்கிவிடுகிறது. குறிப்பாக, 11 வயது முதல்  18 வயது வரையுள்ள வளர் இளம்பருவத்தில் ஏற்படுகிற பருமன் (Adoloscent Obesity) இந்தியாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலம், கர்ப்ப  காலத்தைத் தொடர்ந்த இரண்டு வருடங்கள்தான் உடல் எடை கூடும் காலமாக (Crucial period) இருக்கிறது.  கர்ப்ப காலத்தின்போது குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக நன்றாக சாப்பிடச் சொல்வார்கள். இந்த  உணவுப்பழக்கம் குழந்தை பிறந்த பின்னும் தொடர்ந்துவிடுகிறது. உடற்பயிற்சியும் இருப்பதில்லை என்பதால் உடல் எடை  அதிகமாகிவிடுகிறது. இதுதான் கவனமாக இருக்க வேண்டிய காலம்…’’

இன்றைய அவசர வாழ்வில் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லையே?

‘‘குழந்தையை கவனிக்க வேண்டியிருக்கிறது, வீட்டு வேலைகள், ஜிம்முக்கு போக முடியவில்லை என்று பல காரணங்கள்  இருக்கலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் விட நம் உடல்நலனுக்காக அரைமணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று  நினைத்தால் அது நிச்சயமாக முடியும். மோட்டிவேஷன் இல்லாததால்தான் மற்ற காரணங்களைச் சொல்லி சமாளிக்கிறோம். 24  மணி நேரமும் வீட்டு வேலைகள் இருக்கப்போவதில்லை, ஜிம்முக்குதான் போக வேண்டும் என்று கட்டாயமும் இல்லை.  கணவரிடமோ வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ குழந்தையைக் கொடுத்துவிட்டு எளிமையான நடைப்பயிற்சியை அரை  மணி நேரம் மேற்கொண்டாலே போதும். பிரசவத்துக்குப் பிறகு அந்த இரண்டு வருட காலத்தில் முயற்சியை விட்டுவிட்டால்  எதிர்காலத்தில் அந்தப் பழக்கத்தை மாற்றுவது கடினமாகி விடும்.’’

கஷ்டப்பட்டு பயிற்சிகள் செய்தாலும் எடை குறைவதில்லையே?

‘‘உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவதில்லை. நாளுக்கு நாள், மாதத்துக்கு மாதம், வருடத்துக்கு வருடம் என்று  படிப்படியாகத்தான் உயர்கிறது. ஆனால், எடை குறைப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே மாதத்தில் நடக்க வேண்டும் என்று  எதிர்பார்த்தால் அது தவறு. ஒருவாரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, கண்ணாடி முன்பு நின்று பார்த்துவிட்டு எடை குறையவே  இல்லையே என்று பலரும் மனம் தளர்ந்துவிடுகிறார்கள். அதன்பிறகு டயட் கட்டுப்பாடு, உடற்பயிற்சியை விட்டு விட்டு பழைய  வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். இதுதான் எடையை குறைக்க முடியாததற்கு காரணம். ஆனால், எடை குறைகிற  மாற்றங்கள் அப்படி உடனடியாக கண்கூடாகத் தெரியாது என்பதே உண்மை. இந்த இடத்தில்தான் கவனமாக இருக்க வேண்டும்.’’

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

‘‘இன்று 70 சதவிகிதத்தினர் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பருமன் இவர்களுக்குத்தான் அதிகம் வருகிறது. அதிலும் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதும் முக்கிய காரணம். இவர்கள் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற சத்துகளை சரிவிகிதத்தில் உணவில் எடுத்துக்கொள்வதோடு,  உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாட்டுகள் என உடல்ரீதியான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது அவசியம்.  இல்லாவிட்டால் நாளடைவில் இதயரீதியான பாதிப்புகள், பக்கவாதம், மூளை தொடர்பான பிரச்னைகள், ரத்த அழுத்தம், பாத  நரம்புகளில் பிரச்னை, சிறுநீரகம், கண் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.’’

ஆண்களின் பருமனுக்கும்பெண்களின் பருமனுக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கிறதா?

‘‘பருமனால் ஏற்படும் பாதிப்புகளில் வித்தியாசங்கள் எதுவும் இல்லை. ஆனால், ஆண்கள் உடல் எடை கூடுவதைப் பெரிதாக  எடுத்துக் கொள்வதில்லை. பெண்களுக்கு அது அழகு சார்ந்த விஷயமாகவும் இருப்பதால் பல குழப்பங்கள் வந்துவிடுகின்றன.  ‘குண்டம்மா’ என்று குழந்தைகளே கிண்டலடிக்கும் நிலைமை, வெளியிடங்களுக்குக் கணவருடன் சென்றால் கணவருக்கு அக்கா  போல் தோன்றுகிறோமோ என்று நினைத்துக்கொள்வது, நம் மீது கணவருக்கு அன்பு போய்விடுமோ என்ற பயம் என உளவியல்  ரீதியான பல பிரச்னைகளுக்குப் பெண்கள் ஆளாகிறார்கள். அதனால், பெண்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது  அவசியம்.’’

உடல் பருமனைக் குறைக்க என்னென்ன சிகிச்சைகள் இருக்கின்றன?

அழகு சிகிச்சை நிபுணர் நாராயண மூர்த்தி சொல்கிறார்… ‘‘உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்கவும் உணவு இரைப்பைக்குச் செல்லாமல் மாற்றுப் பாதையில் வெளியேறவும்  Bariatric என்ற அறுவை சிகிச்சையை இரைப்பை குடலியல் சிகிச்சை மருத்துவர்கள் செய்வார்கள். அதன்பிறகு,  உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை அகற்ற Liposuction சிகிச்சையை அழகு சிகிச்சை மருத்துவர்கள்  செய்வார்கள். கொழுப்பு அகற்றப்பட்ட பிறகு, உடலுக்கு வடிவம் கொடுக்க Body condouring என்ற முறையும்  இருக்கிறது.

சிகிச்சை செய்துகொள்ள விரும்புபவரின் உணவுமுறை,உடல் செயல்பாடுகள், மருத்துவப் பரிசோதனைகள் என  எல்லாவற்றையும் கவனமாகப் பரிசீலித்த பிறகுதான் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்வார்கள். அதனால் பாதிப்புகள்  ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகும் மருத்துவமனை தரமானதா, சிகிச்சை  அளிக்க இருப்பவர் தகுதி பெற்ற மருத்துவரா என்பதை நன்கு தெரிந்து கொண்டுதான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.  சிகிச்சைக்குப் பிறகும் மருத்துவர்கள் சொல்லியிருக்கும் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றினால் பிரச்னை வர  வாய்ப்பில்லை.’’

ஓர் எச்சரிக்கை!

சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்த கௌரி சங்கரின் மனைவி அமுதா. 35 வயதான அமுதாவுக்கு உடல்  பருமனைக் குறைக்க வேண்டும் என்று ஆசை. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் 3  லட்ச ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். வீடு திரும்பிய 15 நாட்களில் வயிற்றில் வலி ஏற்பட்டிருக்கிறது.  மருத்துவமனைக்குச் சென்று கேட்டபோது, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சீழ் வந்துகொண்டிருக்கிறது. அதை சரி செய்ய  வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் மீண்டும் இன்னொரு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார் அமுதா.

ஆனாலும், வயிற்றுவலி குறையாமல் மேலும் அதிகமானதால் இன்னொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து  பரிசோதித்திருக்கிறார்கள். அப்போதுதான் வயிற்றுக்குள் பஞ்சு வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் பிறகு 20  லட்சம் ரூபாய் செலவு செய்து அமுதாவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இப்போது உடல் உருக்குலைந்த நிலையில்,  வயிற்றில் டியூப் வழியாக திரவ உணவுகளை அமுதாவுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் மூன்று  ஆண்டுகளுக்கு வாய் வழியாக அமுதாவால் உணவு சாப்பிட முடியாது. இரண்டு குழந்தைகளின் தாயான அமுதா, ‘நான்  தவறான முடிவெடுத்து விட்டேன்’ என்று இப்போது அழுது கொண்டிருக்கிறார். ஒல்லியாகும் ஆசை தவறில்லைதான். ஆனால்,  அதற்கு முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்!

News

Read Previous

நீ வாழ நினைத்தால் வாழலாம்!

Read Next

கோட்டை எக்ஸ்பிரஸ்.காம்

Leave a Reply

Your email address will not be published.