சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை…?

Vinkmag ad
உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.

உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே… தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

சாதாரண ரசம் வைப்பதை கூட பல ஆண்டுகள், பல வகைகளில் செய்து பார்த்து, அதற்கு முழுவடிவம் கொடுத்திருப்பார்கள். இன்று எல்லாமே அவசர கதியில் செய்கிறோம். நாம் சாப்பிடும் உணவுக்குக் கூட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்று பெயர் வைத்துள்ளோம். இதனால், நம் தட்டில் எவ்வளவு சுவையான உணவு பரிமாறினாலும், அள்ளிக் கொட்டிக் கொள்வதால், அதன் ருசியும் பலனும் முழுமையாக தெரிவதில்லை. சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பேசாமல் சாப்பிட்டால், நன்றாக மென்று உண்ண முடியும். அதனால்தான் ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்று தமிழ் பாட்டி சொல்லி வைத்தாள்.
சரி, விஷயத்துக்கு வருவோம். சந்தோஷமான நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட செல்லும்போது, அசைவ பிரியர்கள் ‘சில்லி சிக்கன்’ ஆர்டர் செய்வது வழக்கம். சிகப்பு நிறத்தில், எண்ணெயில் பொறித்து எடுத்து தட்டில் வைத்து பரிமாறுவார்கள். இதை, பார்க்கும்போதே, பக்கத்து டேபிளில் உள்ளவர்களுக்கும் கூட வாயில் எச்சில் ஊறும். சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும். சில்லி சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமல், அதை அப்படியே விட்டுவிடுவோம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்கள் அதை, சிக்கன் மீது பிழிந்து விட்டு சாப்பிடுவார்கள்.
சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டை கொடுக்க முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.
அதாவது, ”சிக்கன் மட்டுமல்ல… இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஓட்டலில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்துவிடாமல், சிக்கனை சாப்பிட்டால் நீங்கள் கொடுத்த பணத்துக்குரிய பலன் கிடைக்காமல் போகும்.
ஆகையால், அடுத்த முறை ஓட்டலுக்கு போனால், எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு, சிக்கனை ருசித்துவிட்டு வாருங்கள்!

News

Read Previous

காதலை என்றும் காப்போம் !

Read Next

கதவு

Leave a Reply

Your email address will not be published.