இது தூக்கிப் போடவேண்டிய காகிதம் அல்ல!

Vinkmag ad

மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைக்காக சேர்கிறார். அவர் உடல்நலம் தேறி  வீட்டுக்கு போகும்போது கோப்பு ஒன்றை கையில் கொடுப்பார்கள்.  அதற்கு பெயர் டிஸ்சார்ஜ் சம்மரி. அவருக்கு எதிர்காலத்தில் என்ன உடல் நலப் பிரச்னை வந்தாலும் இந்த சம்மரியை பார்த்தால்தான் இன்னொரு  டாக்டர் எளிதாக மருத்துவம் செய்ய முடியும். அதற்கு முன்பு நோயாளி என்ன விதமான மருந்துகளை எடுத்திருக்கிறார்? அறுவை சிகிச்சை  செய்யப்பட்டு இருக்கிறதா என்பதையும் சம்மரி மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், டிஸ்சார்ஜ் சம்மரி பற்றிய விழிப்புணர்வு படித்தவர்களுக்கே  கூட இருப்பதில்லை. டிஸ்சார்ஜ் சம்மரியின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார் மிட்வே மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்  டி.பழனியப்பன்.

‘‘டிஸ்சார்ஜ் சம்மரி என்பது ஒரு நோயாளியின் அடையாள அட்டை போன்றது. ஒருவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றார்  என்பதற்கான சான்று. எந்த உடல்நல பிரச்னைக்காக மருத்துவமனைக்கு  வந்தார், அவருக்கு எந்தவிதமான நோய் அறிகுறிகள் இருந்தன, எந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன,அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பட்டியல், கொடுத்த மருந்துகளின் பட்டியல், ஒவ்வாமை  ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன? வீட்டுக்கு சென்ற பிறகும் தொடர வேண்டிய மருந்துகளின் பரிந்துரை, தவிர்க்க வேண்டிய உணவுகள் என ஒரு  நோயாளியை பற்றிய அனைத்து குறிப்புகளும் டிஸ்சார்ஜ் சம்மரியில் இருக்கும். எதிர்காலத்தில் அந்த நபருக்கு என்ன நோய் வந்தாலும், இன்னொரு மருத்துவரைப் பார்க்கப் போகும் போது  இந்த சம்மரியை எடுத்துக்கொண்டு போனால் மிக எளிதாக சிகிச்சை கொடுக்கமுடியும்.

இந்த சம்மரி கையில் இல்லாவிட்டால் மறுபடியும் முதலில் இருந்து எல்லா பரிசோதனைகளையும் செய்ய வேண்டியிருக்கும். ஒரு மருத்துவமனை  சரியான முறையில் சிகிச்சை அளித்து உள்ளது என்பதற்கான ஆவணமும் இதுதான். சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று ஒரு நோயாளி  மருத்துவமனை மீது  வழக்கு தொடர்ந்தாலும் சம்மரியை வைத்துதான் அந்த மருத்துவ நிர்வாகம் நிரூபிக்க முடியும். அதே போல ஒருவரின்  டிஸ்சார்ஜ் சம்மரி விவரங்களை குறைந்தது மருத்துவமனை நிர்வாகம் 7 வருடங்களுக்குப் பாதுகாக்க வேண்டும். அதுதான் தரமான மருத்துவமனைக்கு அழகு. ஒரு நோயாளி மருத்துவமனையில் இருந்து குணமாகி கிளம்பும் போதே டிஸ்சார்ஜ் சம்மரி கொடுத்து விடவேண்டும். அவர் ஏதாவது  விடுமுறை நாளில் கிளம்பினால், தட்டச்சு செய்ய ஆள் இல்லாமல் போனால் அன்று சம்மரி கொடுக்க முடியாமல் போகலாம்.

அவர் வீடு சென்ற இரண்டு நாட்களுக்குள் சம்மரியை அவர் கையில் கிடைக்குமாறு கூரியர் தபாலில் அனுப்பிவிடுவோம். தற்போது மின்னஞ்சல்  முறையில் கூட சம்மரியை அனுப்பி வைக்கிறோம். சில மருத்துவமனைகளில் நோயாளி கிளம்பிய ஒரு வாரம் கழித்து சம்மரியை அனுப்பி  வைப்பார்கள். இது தவறான முறை. அந்த ஒரு வாரத்தில் ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் சம்மரி கையில் இல்லை என்றால் மிகவும்  சிக்கலான சூழல் ஏற்படும். வெளியூரில் இருந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு டிஸ்சார்ஜ் ஆகும் அன்றே சம்மரியை கொடுத்து அனுப்புவதே  நல்லது. அவரது ஊரில் சிகிச்சையை தொடர மிகவும் உதவியாக இருக்கும். காப்பீடு நிறுவனங்கள் மூலம் சேரும் நோயாளிகளின்  சம்மரியின் அசல்  பிரதியை காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்பிவிடுவோம். நகலை சிகிச்சை எடுத்தவருக்கு வழங்குவோம். இதன் மூலம் சிகிச்சைக்கான தொகையை  காப்பீடு நிறுவனத்திடம் இருந்து எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

சில இடங்களில் தட்டச்சு செய்ய ஆள் இல்லை என்பார்கள். அவர்கள் கையில் எழுதி பிரதி எடுத்து சம்மரியை வழங்கலாம். டிஸ்சார்ஜ் சம்மரி என்பது  ஒரு தனிப்பட்ட மனிதனின் அந்தரங்க உரிமை, மற்றவர்களிடம் அதை வெளிப்படுத்தவும் கூடாது’’ என்கிறார் டாக்டர் பழனியப்பன். டிஸ்சார்ஜ் சம்மரி  அவரவர் தாய் மொழியில் கொடுக்க வேண்டிய அவசியத்தை பற்றி பேசியும் எழுதியும் வருபவர் டாக்டர் நல்லி கோபிநாத், தமிழில் டிஸ்சார்ஜ் சம்மரி  எழுதக்கூடியவர்.அவரிடம் பேசினோம். ‘‘டிஸ்சார்ஜ் சம்மரி அல்லது விடுவிப்பு சுருக்கம் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு செய்த அனைத்து  மருத்துவத்தின் சுருக்கமாகும். நோயாளி மருத்துவம் முடிந்து விடுவிக்கப்படும் அன்றே கைப்பட எழுதிக் கொடுக்கப்படும் சுருக்கமும், மற்றொன்று  கணினி மூலம் தட்டச்சு செய்யப்படும் மருத்துவ சுருக்கப்படி ஆகும். சில நேரங்களில் நோயாளிகள் விரும்பினால் இந்த சுருக்கப்படி மின்னஞ்சல்  மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.

மருத்துவமனையில் நோயாளி சேரும் முன்னர் நோயாளியின் நோயின் தன்மை, வீரியம், நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் இருப்பின் அதன்  தாக்கம் போன்ற பிற நோய்களின் இருப்பு அச்சுருக்கத்தில் பதியப்படுகிறது. மருத்துவமனையில் சேர்ந்த பின்செய்யப்பட்ட மருத்துவத்தின் அல்லது  அறுவை சிகிச்சையின் குறிப்பும் உள்ளடங்கும். சிகிச்சைக்குப் பின் நோயாளியின் முன்னேற்றம் அல்லது பின்னடைவும் அதில் குறிக்கப்படுகிறது.  அவருக்கு செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் குறிக்கப்படுகின்றன. இறுதியாக விடுவிப்புக்கு பின் நோயாளி தொடர வேண்டிய மருந்துகளும்,  அவர் செய்ய வேண்டிய மேல் மருத்துவம் அல்லது இயன்முறை மருத்துவம் (Physiotherapy) போன்ற துணை மருத்துவமும் குறிக்கப்படுகிறது.   அனுமதிக்கும் முன், அனுமதித்த பின், சிகிச்சை செய்யப்பட்ட பின் ஆகிய மூன்று காலங்கள் பற்றி சுருக்கமாக விளக்கு
வதால் இது மிக பயன் தரும் ஆவணமாகும்.

சட்ட ரீதியாகவும் இச்சுருக்கம் பயன் தரும். விபத்துக்காக சிகிச்சைக்கு பின் கொடுக்கப்படும் சுருக்கமானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துஇழப்புக்  காப்பீடு பெற உதவுகிறது. மருத்துவ சுருக்கத்தில் சேர்க்கை எண், விபத்துப் பதிவுநூல் எண், சேர்க்கை நாள், அறுவை சிகிச்சை நாள்,விடுவிப்பு நாள்  ஆகியவை கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். இக்குறிப்புகள் மருத்துவ, சட்ட ரீதியாகஅத்தியாவசியமானவை. இவை அனைத்தும் குறிக்கப்பட்டு  உள்ளனவா என்று நோயாளிகள் கவனமாக படித்துப் பார்த்து  சுருக்கத்தை பெறவேண்டும். கொடுக்கப்பட்ட சுருக்கத்தின் நகல்களை பல பிரதிகள்எடுத்து  வைப்பதும் அவசியமாகும்.மருத்துவ சட்ட ரீதியாக நோயாளியின் பெயரோ, வயதோ, முகவரியோ   சரியாக குறிக்கப்படவில்லைஎன்றாலும்  மருத்துவமனையில் சேர்த்த நாள், அறுவை சிகிச்சை நாள் போன்றவை சரியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் இழப்புத் தொகை காப்பீடு பெறுவது  சிரமமாகும்.

இந்த விஷயங்களில் எந்த இடத்தில் ஐயம் ஏற்பட்டாலும் காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தொகையை தராது. மருத்துவ சுருக்கத்தில், செய்யப்பட்ட  மருத்துவத்தின் குறிப்பும் காயங்களின் தன்மைகளும், மருத்துவத்துக்கு முன்னர் உள்ள நோயின் அறிகுறிகள் ஆகியவற்றின் குறிப்பும் சரியாக  இல்லையெனில் இழப்புக் காப்பீடு குறையவாய்ப்புள்ளது.காப்பீடு தாண்டி பார்த்தோமானால், நோயாளி வெளியூர்களுக்கு சென்றாலும்  அல்லது அவரது  சொந்த ஊருக்கு சென்ற பின்  மருத்துவச்சுருக்கம் கையில் இல்லாவிட்டால் மேல்மருத்துவம் செய்ய வேண்டியிருந்தால் அதில் சிக்கல் ஏற்படும்.  மீண்டும் முதலில் இருந்து எல்லா ஆய்வுகளையும் செய்ய வேண்டியிருக்கும். இதனால் பணமும் நேரமும் விரயமாகும்.நோயாளி வீட்டுக்குச் சென்ற  பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், மீண்டும் நோய் தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை,உட்கொள்ள வேண்டிய மருந்துகளின், காலமும்  நேரமும் வழிமுறையும் விடுவிப்பு அறிவுரையாக குறிக்கவில்லை எனில் நோயாளி மருத்துவம் பார்த்தும் முழுப் பலனை அடைய முடியாமல்  போய்விடும்.

இப்படியான பல பயன்களை உடைய விடுவிப்பு சுருக்கத்தின் அவசியத்தை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும்.  விடுவிப்பு சுருக்கத்தில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிவுரைகள் அவரவர் தாய்மொழியிலோ அல்லது புரியும் மொழியிலோ இருந்தால் அதன்  முழுப்பயன் நோயாளியை சென்று சேரும். வழிமுறைகளை கடைப்பிடிக்கவும் எளிதாக இருக்கும். டிஸ்சார்ஜ் சம்மரி அல்லது விடுவிப்பு சுருக்கம்  பெறுவது நோயாளியின் உரிமையாகும். கேட்டுப்பெறுவது அவசியம்.’

மேற்கத்திய நாடுகளில் டிஸ்சார்ஜ் சம்மரி ஒரு சிறிய புத்தகம் அளவுக்கு விரிவாகக் கொடுக்கப்படுகிறது. இதனைக் கொண்டு உலகில் எங்கு  வேண்டுமானாலும் சிகிச்சை பெறுமளவுக்கு ஒரு நோயாளியின் அத்தனை விவரங்களும் தெளிவானதாக கொடுக்கப்பட்டிருக்கும். வளர்ந்த நாடுகளில்  தட்டச்சு செய்வதற்கு பெரும்பாலானவர்கள் முன் வருவதில்லை. இதன் காரணமாக இந்தியா, பிலிப்பைன்ஸ், கொரியா போன்ற வளரும் நாடுகளில்  மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் நிறுவனங்களைத் தொடக்கி அதன் மூலம் டிஸ்சார்ஜ் சம்மரி போன்ற மருத்துவம் தொடர்பான தட்டச்சுப் பணிகள்  மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவம் தொடர்பான சட்ட ரீதியான வழக்குகள் தொடர்வதற்கும் டிஸ்சார்ஜ் சம்மரி முக்கிய சாட்சியாக விளங்குகிறது.

News

Read Previous

இஸ்லாமிய கேள்வி பதில்கள்

Read Next

கடலாடி, முதுகுளத்தூரை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்திட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *