ஆரோக்கிய வாழ்வுக்கு சிறுதானியங்கள் தான் அடிப்படை

Vinkmag ad

நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியதும், உடல் நலத்துக்கு ஏற்றதுமான சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வலியுறுத்தினார்.

சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், மதுரை தமுக்கம் கலையரங்கில் நடைபெறும் பாரம்பரிய உணவுத் திருவிழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்து, அமைச்சர் மேலும் பேசியது:

இன்றைய சூழலில் நமது உணவுப் பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. நமது முன்னோர், உணவில் சேர்த்துக் கொண்ட கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, மக்காச்சோளம் போன்றவற்றைத் தவிர்த்து, இப்போது துரித உணவுகளுக்கு மாறிவிட்டோம். ஆனால், இந்த சிறுதானியங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவால் வரக்கூடிய நோய்களைத் தடுக்கிறது. அதிகளவு நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள், பல்வேறு நோய்களைத் தடுக்கக் கூடியதாக இருக்கிறது.

சிறுதானியங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழக முதல்வர் இத்தகைய பாரம்பரிய உணவுத் திருவிழாவை நடத்த ஆண்டுக்கு ரூ. 5.44 கோடியை ஒதுக்கியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் என மதுரை மாவட்டத்தில் 48,821 பேர் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

ஆட்சியர் எல். சுப்பிரமணியன்: துரித உணவு வகைகள் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஜீரணக் கோளாறு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது. இன்றைய இளைய தலைமுறைக்கு சிறுதானியங்களின் பெயரும், நன்மைகளும் தெரிவதில்லை. சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவுப் பதார்த்தங்களை தயாரிக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது என்றார் ஆட்சியர்.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். முத்துராமலிங்கம், எம்.வி. கருப்பையா, ஆர். சுந்தரராஜன், மதுரை மாநகராட்சி துணை மேயர் கு. திரவியம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு. தர்மராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வரும் ஜூலை 4ஆம் தேதி வரை இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

இதில், தினமும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த கருத்தரங்கம், உணவு வகைகள் செய்முறை விளக்கம் உள்ளிட்டவையும் நடைபெறும்.

 

News

Read Previous

என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!

Read Next

புலவர் என்பவர் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *