பெயர் மாற்றங்கள் பின்னணியில் மதவாதம்”

Vinkmag ad

பெயர் மாற்றங்கள் பின்னணியில் மதவாதம்”

பாஜக ஆட்சிக்கு வந்து ஆட்சிக்காலம் முடியும் இந்த இறுதிகாலத்தில் நாடெங்கும் பல ஊர்களின் பெயர்கள் அவசர அவசரமாக மாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரை அளிக்க வேண்டும். பெயர் மாற்றத்துக்கு இரயில்வே, அஞ்சல்துறை, மக்கள் கணக்கெடுப்புத் துறை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனில் மத்திய அரசு அனுமதி அளிக்கும். மாநிலங்களின் பெயரை மாற்ற நாடாளுமன்ற தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தி, அரசியல் சாசன திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்த நிலையில் எந்த ஒரு ஆலோசனை மற்றும் முன் அறிவிப்பும் இன்றி கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஊர்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இப்பெயர் மாற்றங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், “நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஊர்களின் பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. நகரங்களில் ராஜமுந்திரியை ராஜ மகேந்திரபுரம் எனவும், அவுட்டர் வீலர் தீவை அப்துல் கலாம் தீவு எனவும் மாற்ற அனுமதி அளித்துள்ளோம்.

சிற்றூர்களில் குறிப்பாக கேரளா, அரியானா, நாகாலாந்து உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெயர் மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அலகா பாத் நகரை பிரயாக் ராஜ் என மாற்றவும், ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்யா மாவட்டம் எனவும் மாற்றப்பட உள்ளன.

தற்போது மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என மாற்றும் பரிந்துரை நிலுவையில் உள்ளது. அண்டை நாடான வங்க தேசத்துக்கு பங்களா என பெயர் உள்ளதால் இதற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளது. நாகாலாந்தில் உள்ள திம்மபூர் மாவட்டத்தில் உள்ள ஊரான கசாரிகயான் என்னும் ஊரை பீவிமா என மாற்ற அனுமதி அளிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பிஜேபி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் நடுவண் அரசின் திட்டங்கள் எல்லாம் சமஸ்கிருத, இந்தி பெயர்கள்தான் திட்டமிட்டுச் சூட்டப்படுகின்றன. நடுவண் அரசு திட்டங்கள்தான் என்றாலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாழும் 125 கோடி மக்களுக்கானது அல்லவா?

அந்த மக்களுக்கெல்லாம் அவர்கள் மொழியில் அந்தத் திட்டங்களுக்குப் பெயர்கள் இருக்க வேண்டாமா? உச்சரிக்கும் பெயரிலேயே அந்நியத் தன்மை இருந்தால் மக்களோடு அந்தத் திட்டங்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும்?

எடுத்துக்காட்டாக-

1. அடல் பென்சன் யோஜனா

2. பசத் ஊர்ஜா யோஜனா

3. தீன் தயாள் திவ்யாங் புனர்நிவாஜ் யோஜனா

4. கிராம் ஜோதி யோஜனா

5. கிராமின் பந்தனர் யோஜனா

6. ஜனனி சுரக்ஷா யோஜனா

7. யுவாஊர்ஜா யோஜனா

8.கிஷோர் வைக்யஞ்க் ப்ரொஷ்தன் யோஜனா

9. ப்ரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா

10. பிமா யோஜனா

11. ஜீவஜோதி யோஜனா

12. ஜனதன் யோஜனா

13. கிராம் சடக் யோஜனா

14. ராஷ்டிரிய கிரிஷி விகாஷ் யோஜனா

15. ராஷ்டிரிய சுவஸ்திக் விகாஷ் யோஜனா

16. ஷக்சம் யோஜனா

17. சம்பூர்ண கிராம் ரோஜ்கார் யோஜனா

18. ஸ்வபிமான் பாரதி

19. ஸ்வர்ண ஜெயந்தி கிராம்ஸ்வர் ஊர்ஜா யோஜனா

20. ஸ்வலாபமபன்

21.. உதிஷா யோஜனா

22..சுகன்யா சமருத்தியோஜனா

23. ப்ரதான் மந்திரி அவாஜ் யோஜனா

24. அந்தயோதா அன்ன யோஜனா

25. ப்ரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா

26. பிரதான் மந்திரி உஜவல் யோஜனா

27. ஸ்வட்ச் பாரத்

28. நயி நிவாஜ் யோஜனா

சமஸ்கிருதம், இந்தி தெரிந்தவர்களைத் தவிர மற்ற எவருக்காவது இவை விளங்குமா?

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் ஊர்கள் பெயர்கள் சமஸ் கிருதமயமாக்கப் பட்டுள்ளன. குறிப்பாக விருத்தாசலம், வேதாரண்யம், திண்டிவனம், கபிஸ்தலம், கும்பகோணம், சிதம்பரம் என்று நீண்ட பட்டியல் உண்டு. மாயவரம் மறுபடியும் மயிலாடுதுறையாக மறைந்த சட்டப் பேரவை உறுப்பினர் ந. கிட்டப்பா அவர்களின் முயற்சியாலும், மயிலாடுதுறை வாழ் திராவிட இயக்க உணர்வாளர்களின் விருப்பத்தாலும் மாற்றப் பட்டது.

அதே தன்மையில் சமஸ் கிருதமயமாக்கப்பட்ட தமிழ் ஊர்ப் பெயர்களை மாற்ற தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்க வலியுறுத்துகிறோம். இது ஒரு வகையான பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பாகும். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பெயர் மாற்றம் நடப்பதை எடுத்துக்காட்டிக்கூட இதுதான் சரியான வாய்ப்பு என்று தமிழ்நாடு அரசு முயலட்டும். மாற்றங்கள் வரட்டும்!

நன்றி : “விடுதலை” நாளிதழ் தலையங்கம் 15.11.2018

News

Read Previous

தொட்டிலிட்டுத் தமிழ் வளர்ப்போம் !

Read Next

மரணம்

Leave a Reply

Your email address will not be published.