தேரிருவேலி பைத்துல்மால்

Vinkmag ad

#பைத்துல்_மால்

#தேரிருவேலி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள ஒரு சிறு ஊர் தேரிருவேலி.

சுமார் 250 தலைக்கட்டுகள் அதாவது சுமார் 1000-1500 முஸ்லிம்கள் இங்கு வசித்து வருகின்றனர். ஒரு தொழுகைப் பள்ளிவாசல். அந்த ஜமாஅத் சார்பாக ஒரு மேல்நிலைப்பள்ளி ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளி வரை அரசு உதவி பெறும் பள்ளியாகவும் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகள் ஜமாஅத் நிதியுதவியிலும் நடைபெறுகிறது. சகோதர சமுதாய மக்களும் சுற்றிலும் பெருமளவு வசித்து வருகின்றனர்.
ஊரிலுள்ள முஸ்லிம்கள் அநேகம் பேர் மலேசியாவில் தொழில் செய்பவர்கள். பலர் மலேசிய குடியுரிமை பெற்றவர்கள்.

சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்ட எனது நண்பர் தனது ஊரில் நடத்தப்பட்டு வரும் பைத்துல் மால் பற்றிச் சொன்னதைக் கேட்டு அதிசயத்து விட்டேன். தமிழ் கூறும் முஸ்லிம் நல்லுலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அவாவில் எழுதப்பட்டதுதான் இந்தப் பதிவு.

தேரிருவேலி ஜமாஅத்தை சேர்ந்தவர்களுக்கு வட்டியில்லா நகைக்கடன் திட்டத்தை பைத்துல் மால் மூலம் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். குடும்பத்தில் ஒருவருக்கு தங்க நகை ஈட்டின் பேரில் ₹.50000/- ஒன்பது மாதத் தவணையில் வழங்கப்படுகிறது.

ஒன்பது மாத முடிவில் பணத்தை முழுமையாகச் செலுத்தி நகையை மீட்ட வேண்டும். இவர்களிடம் ஆவணக் கட்டணமாக ₹.100/- மற்றும் தங்க நகை மதிப்பீட்டுக் கட்டணமாக ₹.70/- மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள்.

இதற்கான முதலீட்டை பைத்துல் மால் வைப்புநிதித் திட்டம் மற்றும் மாதாந்திர தொடர் நிதித்திட்டம் மூலம் பெறுகிறார்கள். இவை தவிர நன்கொடைகளும் உண்டு.

ஜமாஅத் உறுப்பினர்கள் தங்களிடமுள்ள தொகையை வைப்புநிதியாக பைத்துல் மாலில் வைக்கலாம். அதற்கு வட்டி எதுவும் கிடையாது. தேவைப்படும் போது தொகையை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர மாதாந்திர தொடர் சேமிப்புத் திட்டமும் உண்டு. மாதம் ₹200/- லிருந்து ₹.1000/- வரை மாதாமாதம் சேமிக்கலாம். எந்த விதக் கால நிர்ணயமுமின்றி சேமிப்புப் பணத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

மாதம் 30 நபர்களுக்கு நபர் ஒன்றுக்கு ₹.50000/- வீதம் சுமார் ₹.15 லட்சம் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு சுமார் 360 நபர்களுக்கு மொத்தம் ₹.1 கோடியே 80லட்சம் கடனாக வழங்கப்படுகிறது.

இது தவிர மருத்துவ அவசரக் கடனாக ₹.30 ஆயிரம் முதல் ₹.1லட்சம் வரை 15 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஜமாஅத் வட்டியை முஸ்லிம்களிடையே ஒழிப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதை அறிந்து ஆச்சரியம் மேலோங்குகிறது.

இது போல் ஒவ்வொரு ஜமாஅத்திலும் பைத்துல் மால் அமைத்து இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

சிந்திப்போம். செயல்படுவோம்.

News

Read Previous

மின்னம்பலம் தளத்தில் தோழர் குமரேசன்

Read Next

தொலைநுட்பத்தின் தொல்லைகள்

Leave a Reply

Your email address will not be published.