தகவல் பெறும் உரிமைச் சட்டம்

Vinkmag ad

தகவல் பெறும் உரிமைச் சட்டம் – விகடன் காட்டும் வழி !

Image result for Right To Information Act 2005 - RTI
கேள்வி கேட்பது சுலபம்… பதில் சொல்வதுதான் சிரமம் என்கிறீர்களா? பதில் சொல்லக்கூடிய மாதிரியான கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகப் பதில் கிடைக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 – RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு தனிநபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்டுப் பெற முடியும். ‘எனக்கு இந்தக் காரணத்துக்காக அந்தத் தகவல் தேவைப்படுகிறது’ என்று நாம், தேவைக்கான காரணங்களைத் தகவல் கொடுப்போரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதற்காக. ‘என்னுடைய பக்கத்து வீட்டுல இருக்குற ஆசாமி ரொம்ப ஹெல்த்தியா இருக்கான். அவன் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்கிறான்னு தெரியலை. கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா… என்று நாம் கேட்க முடியாது; பதிலும் கிடைக்காது. இதுபோன்ற ஒரு தனி மனிதனின், தனிப்பட்ட விஷயங்களைக் கேள்வியாகக் கேட்டால் நேரம்தான் வீண்.
ஆர்.டி.ஐ சட்டத்தில் தகவலைக் கேட்டு வாங்க, நாம் அனுப்பும் சம்பந்தப்பட்ட துறை அலுவலரால் தள்ளுபடி செய்ய முடியாதபடி அந்த விண்ணப்பம் இருக்கவேண்டும். மனுவில், நம்முடைய கையெழுத்தும் பெயரும் இருந்தால் போதுமானது. நம்முடைய வேலை, பதவி, பொறுப்பு போன்ற எதையும் குறிப்பிட வேண்டியதில்லை.
மனுவின் தொடக்கத்திலேயே, ‘‘ஏன் அந்தச் சாலையில் ஆறு மாதங்களாகக் கல்லைக் கொட்டி வைத்திருக்கிறீர்கள் என்றோ, எப்படி அந்த இடத்தில் கொட்டினீர்கள் என்றோ அல்லது எப்போது கல்லைக் கொட்டினீர்கள் என்றோ கேள்வியை ஆரம்பித்தால் பதிலை வாங்குவது கடினம். கான்ட்ராக்ட் எடுத்தவர், அதை மேல் கான்ட்ராக்ட்டுக்கு பெற்ற நான்கைந்து பேர், கல்லைக் கொட்டிய லோடு லாரி ஓனர், லாரியில் வந்த ஊழியர்கள் (இப்போது அவர்கள் எங்கு கல்லைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்களோ?) என்று பலரைத் தேடிப்பிடித்துப் பதிலை வாங்கித் தரவேண்டும் அல்லவா?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், கேள்வி வடிவத்திலோ, ஆலோசனை வழங்கும் விதத்திலோ இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ‘என்னுடைய தொகுதியில் பல ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அங்கு ஒரு கோழிப்பண்ணை வைத்தால் என்ன’ என்று கோரிக்கை மனுபோல விண்ணப்ப மனு இருத்தல் கூடாது.
தகவலைத் தருகிற பொதுத் தகவல் அலுவலர், இந்த மனுமீது பதிலை தரலாம்… தராமலும் இருக்கலாம். அவர் தகவல் தரவில்லையே என்பதற்காக நாம் அடுத்தடுத்து மனு செய்யலாம்.
ஆனால், நம்முடைய மனுமீது பொதுத் தகவல் அலுவலர் பதில் தரவில்லை என்பதற்காக நாம் அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. ‘நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறேன். இந்த மனுதாரரை என்னால் சமாளிக்கவே முடியவில்லை’ என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்தான் நம்மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்.
விண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை பேப்பர் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் (கோர்ட் ஸ்டாம்ப்) தேவையில்லை. எழுதுவதைத் தெளிவாக எழுதினால் போதும். கையால் எழுதினால்கூடப் போதும். டைப் செய்து அனுப்புவது நம்முடைய நேரம், விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு மனுவில் எத்தனை தகவல்களைக் கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்துக்கொள்வது நல்லது.
நாம்
தகவலைக் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுத் தகவல் அலுவலர் யார், நாம் அவருக்குத்தான் மனுவை அனுப்புகிறோமா என்பதைத் தயக்கம் காட்டாமல் பலமுறை உறுதி செய்துகொண்டு, பின் மனுவை அனுப்பலாம். இதனால், ‘அவர் வருவாரா, பதிலைத் தருவாரா’ என்று ஒரு மாத காலம் வரையில் காத்திருப்புப் பாடல் பாடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
பொதுத் தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால் நாம் தகவலைக் கேட்கும் மாவட்டத்தில் வருகிற மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பிவைக்கலாம். ‘அவர் வருவாரா’ என்ற பாடலைப் பாடாமல் மூச்சுக்காற்றை மிச்சப்படுத்தலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், தலைமைத் தபால் துறை அலுவலக அதிகாரிகளும் நம்முடைய மனுக்களை எங்கு அனுப்பிவைக்க வேண்டுமோ, அங்கே அனுப்பிவைப்பார்கள்.
‘திரு. திருவாடானை மெய்யகாத்தான் அவர்கள்’ என்று ஆரம்பித்து பின்னர் அந்த அதிகாரியின் பதவி, பொறுப்பைக் குறிப்பிடுவது எப்போதும் சரியாய் வராது. நாம் மனுவை அளிக்கும்போது திருவாடானை மெய்யகாத்தான் இடத்துக்கு, வேப்பம்பட்டி வேம்புலிங்கம் வந்திருக்கக் கூடும். அதிகாரிகள் மாறுவர், பதவி, பொறுப்பு, இடம் மாறுவதில்லை. ஆக, எப்போதுமே அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களின் பதவிப் பொறுப்பையும், குறிப்பிட்ட மாவட்டத்தையும் மட்டும் குறிப்பிடலாம்.
முதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 10 ரூபாய். நாம் விண்ணப்பித்துப் பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். குறுந்தகடுகள் வழியில் தகவலைப் பெற கட்டணம் 50 ரூபாய். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து
அனுப்ப வேண்டும்..

News

Read Previous

மழை தூறும் வானில் நீயும் நானும்…..

Read Next

பூவாறு நூஹு வலியுல்லாஹ் சரித்திரம்

Leave a Reply

Your email address will not be published.