ஏப்ரல் 17: வீரன் தீரன் சின்னமலை பிறந்த தின சிறப்பு பகிர்வு

Vinkmag ad

ஏப்ரல் 17: வீரன் தீரன் சின்னமலை பிறந்த தின சிறப்பு பகிர்வு

வீரம் வீரம் என்கிறார்களே அதற்கான அசல் அடையாளமாக திகழ்ந்த தமிழகத்து வீரன் தீரன் சின்னமலை பிறந்தநாள் இன்று .காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர் ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும் ,தானியமும் வசூலித்து கொண்டு போன பொழுது அதை பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் .சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என கம்பீரமாக சொல்லி அனுப்பினார்.

தீர்த்தகிரி என்பதே இவரின் உண்மையான பெயர் இந்த சம்பவத்துக்கு பிறகே சின்னமலை என்பது அவரின் பெயரானது . வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி சென்றார் . தனது படைகளை திரட்டி வந்து சின்னமலையில் படையுடன் காங்கேயம் நொய்யல் ஆற்றில் போரிட்டார் .வெற்றி தீரன் சின்னமலை பக்கமே ! மீண்டும் படை திரட்டி வரலாம் என மைசூர் போனால் அங்கே திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்திருந்தார் .மனிதர் தீரன் சின்னமலையை நோக்கி நேசக்கரம் நீட்டினார்

கொங்குப் பகுதியில் பழைகோட்டை பாளையத்தில் அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த இவரின் ஆட்சி ஆங்கிலேய அரசுக்கு உறுத்தலாக இருந்தது .நடுவில் ஒரு பாளைய வீரன் நமக்கு சவாலாக இருப்பதா என பொங்கினார்கள் .ஆங்கிலேய எதிர்ப்பு படையில் திப்புவோடு இவர் கைகோர்த்து நின்றது இன்னமும் உறுத்தியது

1799ம் ஆண்டு நடைபெற்ற மைசூர் யுத்தத்தில் தீர்த்தகிரியின் படைகள் மாளவல்லி என்ற இடத்தில் ஆங்கிலேயப்படையுடன் மோதியது.திப்பு வீர மரணம் அடைந்து மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது .வேலப்பன் எனும் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய ஆள் ஆங்கிலேயரிடம் பிடிபட்டான் .அவர்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து தகவல்களை சின்னமலைக்கு அனுப்பி கொண்டிருந்தான்

தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி கேப்டன் மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை ஆங்கிலேய அரசு அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்து நொய்யல் ஆற்றில் வெள்ளையர் படையை சிதறடித்து கேப்டன் மக்கீஸ் கானின் தலையை துண்டித்து வீரம் காட்டினார் சின்னமலை

ஆங்கிலேயர்கள் மீண்டும் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் 1802இல் குதிரைப் படைகளை அனுப்பியது. இப்படை ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் படையுடன் மோதியது. மீண்டும் ஆங்கிலேய அரசு தோல்வி கண்டது மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை. ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன்.

இவரின் கோட்டையை தகர்க்க பீரங்கி படையோடு ஆங்கிலேய அரசு வருவதை வேலப்பன் மூலம் அறிந்து கோட்டையை விட்டு வெளியேறினார் அவர் .ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகில் உள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய கோட்டை, 143 பீரங்கிகளை வைத்து, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிய அளவுக்குப் பலமானதாக அது இருந்தது . அந்தக் கோட்டையில்தான் வெடிமருந்து, துப்பாக்கிகளை சின்னமலையே தயாரித்தார். கடைசிக் கட்டத்தில் பீரங்கிகளும் தயாரித்தார்.

பழனிமலைத் தொடரில் கருமலைப் பகுதி வனத்தில் சின்னமலை தலைமறைவாக இருப்பது அவரது சமையல்காரர் நல்லப்பனுக்கு மட்டும்தான் தெரியும். நல்லப்பன் விலை போனான் .சாப்பிட மட்டும் அவர் வீட்டுக்கு வரும் சின்னமலையை கைது செய்ய ஆங்கிலேய அதிகாரிகள் அவன் வீட்டுக்கு கீழே சுரங்கம் அமைக்க ஒத்துக்கொண்டான் .சின்னமலை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சுரங்கத்துக்குள் இருந்து பிரிட்டிஷ் படை வீரர்கள் வந்து, சின்னமலையைப் பிடித்துவிடுகிறார்கள். சங்ககிரிக் கோட்டையில் வைத்து தூக்கிலிடப்படுகிறார்.

பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டே சின்னமலைக்குத் தகவல் அனுப்பும் காரியத்தை தொடர்ந்து செய்த வீரன் வேலப்பன் அனுப்பிய ஓலைச்சுருளை இவர் ஆங்கிலேயர் பிடிக்க வந்த பொழுது நெருப்பில் இட்டு எரித்த பொழுது ஒரு பகுதி சிக்கி வேலப்பனை அடையாளம் கண்டு விசாரிக்க ,”என் நாட்டுக்காக இப்படி ஒரு செயல் செய்ததற்கு பெருமைப்படுகிறேன் !”என்றார் .அவரை சுட்டுக்கொன்றது ஆங்கிலேய படை.வீரர்கள் மற்றும் துரோகிகளால் நிரம்பிக்கிடக்கிறது வரலாறு .தீரன் சின்னமலையை நினைவு கூர்வோம்.

News

Read Previous

மகுடம் என் கையில்

Read Next

என் உயிர் பருகுவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *