ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?

Vinkmag ad

கிரீன் கார்டு என்ற முறையை அமல்படுத்தி, வாடிக்கையாளர்களை குழப்புவதோடு, அலைகழிப்பதாகவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மீது புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கி கிளை ஒன்றிற்கு சென்றார் நண்பர் ஒருவர். மதுரையில் இருக்கும் தனது உறவினர் ஒருவரது மருத்துவ செலவிற்காக அவசரமாக அவரது கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும். அந்த உறவினர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறார். ஆனால் செலான் மூலமாக சேமிப்பு கணக்கில் பணம் கட்ட முடியாது. கிரீன் கார்டு இருந்தால்தான் பணம் கட்ட முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டனர்.
அவசரமாக பணம் அனுப்ப வேண்டிய நிலையை எடுத்துச் சொல்லியும், இந்த நடைமுறை இருந்தால்தான் பணம் கட்ட முடியும் என்று கறாராக சொல்லிவிட்டனர். இந்த நடைமுறை இதர வங்கிகளில் இல்லாத நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டும் பிரத்யேகமாக கடைபிடித்து வருகிறது. வங்கி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற நடைமுறைகளால் மக்களை கவர முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
‘‘இந்த நடைமுறை மைக்ரேண்ட் லேபர்ஸ் என்று சொல்லப்படுகிற தொழிலாளிகளுக்காக கொண்டு வரப்பட்ட நடைமுறை என்கிறார்கள். கணக்கு எண்ணை தவறாக எழுதுவது, பெயரை தவறாக குறிப்பிடுவது போன்றவற்றில் பிழை செய்கிறார்கள் என்பதற்காக இந்த நடைமுறை சரியானதாக இருக்கும். சராசரியாக ஒரு வாடிக்கையாளர் கணக்கில் மாதத்திற்கு இவ்வளவு தொகைதான் பரிவர்த்தனை நடக்க வேண்டும் என்று வங்கி கட்டாயப்படுத்த முடியாது. தவிர இதர தனியார் வங்கிகளில் நடைமுறைகள் எளிதாக இருக்க, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மட்டும் விதிமுறைகளை கடுமையாக வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி  மாணவர் ஒருவர். இவர் அவசர வேலையாக பணம் அனுப்ப வேண்டிய சூழ்நிலையில், இந்த நடைமுறையால் எனது வேலைகள் பாதிக்கப்பட்டன என்று குமுறுகிறார்.
இந்த கிரீன் கார்டு முறை என்பது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் உள்நடைமுறை வேலைகளை எளிமைப்படுத்த 2011ஆம் ஆண்டு இறுதி வாக்கில் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். வாடிக்கையாளருக்கு காலதாமதம் இல்லாமல் சேவை செய்ய அல்லது  சரியான கணக்கு எண்ணை தேர்வு செய்ய என காரணங்கள் சொன்னாலும் இதனால் அசௌகரியங்கள்தான் மிஞ்சுகிறது என்பதை வங்கி கவனிக்கவில்லை.
இதனால் பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் வங்கி சேவையை சிறப்பாக உணர வேண்டுமே. எனவே இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரிகளை சந்தித்தோம்.
பணம் செலுத்துபவர் இன்னார்தான் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும், முறையான பண பரிவர்த்தனைதான் என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த கிரீன் கார்டு உதவுகிறது என்றவர்களிடம், இந்த திட்டத்தை கறாராக கடைபிடிப்பதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கினோம். ‘‘இந்த கிரீன் கார்டு திட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் வலியுறுத்தும் அதே நேரத்தில், செலான் எழுதி பணம் கட்டும் நடைமுறையிலோ, ஆன் லைன் பேங்கிங் வசதியிலோ எந்த கட்டுபாடுகளும் விதிக்கவில்லை. ஒரு கணக்கில் இவ்வளவுதான் பணம் கட்டலாம் என்பதில் கட்டுபாடுகள் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவைக்காகத்தான் இந்த நடைமுறை. சில கிளைகளில் கிரீன் கார்டு திட்டத்தை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கறாராக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் இந்த கார்டு இல்லாமலும் பணம் கட்ட முடியும்” என்கிறார்கள்.
சமீபத்தில் நண்பர் ஒருவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனுக்கான ஸ்டேட்மெண்ட் கேட்டு அலைந்து கொண்டிருக்கும் அனுபவத்தை குறிப்பிட்டிருந்தார். ”ஸ்டேட்மெண்ட் வேண்டுமானால், ஆன்லைனில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கைவிரித்து விடுகிறார்கள். எனக்கு ஆன்லைன் வசதியை பயன்படுத்த தெரியாது. தவிர எனக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையில் வரி செலுத்துவதற்குரிய காசோலை கொடுத்தேன். உங்களது கணக்கு உள்ள கிளையை தொடர்பு கொள்ளுங்கள் என திருப்பி அனுப்பி விட்டனர். இது எனக்கு கூடுதல் அலைச்சல். வங்கி நடைமுறையை நவீனமாக்குகிறேன் என்பது ஒரு பக்கம், பழைய நடைமுறையை வைத்திருப்பது ஒரு பக்கம் என வாடிக்கையாளர்களை குழப்புகிறார்கள்” என்கிறார் அந்த நண்பர்.
ஆன் லைன், ஆஃப் லைன் எந்த வழியாக இருந்தாலும் வாடிக்கையாளர் சேவைதான் முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதர வங்கிகள் வாடிக்கையாளர் சேவையில் கடைபிடிக்கும் நடைமுறைகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் கடைபிடிப்பது நல்லது.

கிரீன் கார்டு
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஒரு வாடிக்கையாளர் கணக்கிற்கு, வேறொருவர் பணம் கட்ட வேண்டுமென்றால் இந்த கிரீன் கார்டை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கார்டின் மூலம் ஒரு கணக்கு எண்ணிற்கு மட்டுமே பணம் செலுத்த முடியும். ஒரு கணக்கிற்கு மேல் பணம் கட்ட வேண்டும் என்றால், ஒவ்வொன்றிற்கும் ஒரு கார்டு வாங்க வேண்டும்.
ஒரு கார்டின் மூலம் மாதத்திற்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் மட்டுமே செலுத்தலாம். அதிலும் ஒரு முறை கட்டும் போது அதிகபட்சமாக 5 ஆயிரம் மட்டுமே செலுத்த முடியும். இந்த கார்டை வாங்குவதற்கு கே.ஒய்.சி. (Know Your Customer)விண்ணப்ப படிவம் வாங்க வேண்டும். ஒரு கார்டிற்கான கட்டணம் 20 ரூபாய்.
-நீரை.மகேந்திரன்

News

Read Previous

இறைவா,இவர்களை பொருந்தி கொள்வாயாக!

Read Next

நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *