ஹஜ் யாத்திரை

Vinkmag ad

ஹஜ் யாத்திரை

“சமீர்….நேத்து நான் சொன்ன விசயத்தைப்பத்தி என்ன முடிவு செஞ்சிருக்கே?” அம்மாவின் கேள்விக்கு “ஏம்மா கவலைப்பட்றீங்க? அவளுக்கும் எனக்கும் ஒரு குறையுமில்லையாம். நேத்துப் கன்சல்ட்பண்ணிய டாக்டர் ஆறாவது லேடி டாக்டர். நேரம் காலம் வரும்போது எல்லாம் நல்லதா அமையும்மா” என்று சமாதனம் சொன்ன மகனைக் கோபமாகப் பார்த்தாள் அம்மா சுபைதா.

“நேரம் காலம்னா எத்தனை வருசம்டா? எட்டு வருசமாச்சுடா உனக்குக் கல்யாணமாகி, உங்களுக்குப்பின்னால கல்யாணமானவங்களோட புள்ளைகளெல்லாம் பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சிட்டாங்கப்பா, பேரன் பேத்திகளப் பார்க்க எவ்வளவு துடிப்பா இருக்கேனு தெரியுதா உனக்கு?”பேசிக் கொண்டே வந்த அம்மா அழவே ஆரம்பித்துவிட்டார்.

“அழாதீங்கம்மா, அல்லாஹ் நாடினால் உங்க விருப்பம் சீக்கிரமா நிறைவேறிடும்” என்ற மகனிடம், “அதுக்குத்தான் சொல்றேன் சமீரு, நீயும் சபீராவும் ஒருதடவை ஹஜ்ஜூக்குப் போய்ட்டுவாங்க. அடுத்தவருசமே நம்ம குறையை அல்லாஹ் நீக்கிடுவான்பா” என்று கெஞ்சாத குறையாகப் பேசிய அம்மாவின் முன்னால் ஒன்றுமே பேசமுடியவில்லை சமீருக்கு. “சரிம்மா, பேங்கிலிருந்து பணத்தையெடுத்து ஹஜ் போறதுக்குள்ள ஏற்பாடுகளை ஆரம்பிச்சிட்றேன். சபீ… நம்ம ரெண்டுபேருடைய பாஸ்போர்ட்டையும் எடுத்து வச்சுக்க. வேற என்னென்ன ஃபார்மாலிட்டீஸ்னு கேட்டு போன்பண்றேன்” என்று சொல்லிவிட்டு பேங்கிற்குக் காரில் கிளம்பிய மகன் சென்ற வழியைப் பார்த்து “யா அல்லாஹ், நல்ல மகனைக் கொடுத்தே, அவனுக்கு நல்ல வாரிசுகளையும் கொடு” என்று இருகைகளையும் ஏந்தி பிரார்த்தித்தாள் அம்மா.

பேங்கிற்குப் போகும்வழியிலேயே இரண்டுபேர் ஹஜ் செல்வதற்கு எவ்வளவு பணம் தேவை, வேறு என்னென்ன முறைகள் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டான் சமீர். பேங்கிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு வெளியேவந்த சமீரின் கண்ணில் ஒருவயதான பெரியவர் தள்ளாடியபடியே, மிகுந்த கவலைகளுடன், வறுமையின் அடையாளங்களுடன், துக்கங்களை அடக்கியவராக படியேறி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவரைக் கடந்து சென்ற அத்தனைபேரும் பாவமாகவேப் பார்த்துச் சென்றார்கள். சமீரும் அதுபோலவே கடக்க நினைக்கையில், ஏதோ ஒன்று அவன் மனதில் உறுத்தியது. அருகில் சென்று பார்த்தவன் அதிர்ந்தான். “காதர் மாமாதானே நீங்க? மாமா நான் சமீர், உங்க தங்கச்சி சுபைதாவுடைய மகன்” என்றவனிடம் நெற்றியைச் சுருக்கிப்பார்த்த பெரியவர், “சமீரு…” என்று அடக்கிவைத்த துக்கமும் கண்ணீரும் சேர்ந்து சமீரைக் கட்டிப்பிடித்து அழத் தொடங்கினார்.

“என்ன மாமா இதெல்லாம்? எப்படி இருந்த மனுசன் நீங்க. உங்கள நான் இப்படியா பார்க்கணும்? “ என்று கேட்ட சமீரிடம் “ எல்லாம் நான் செஞ்ச பாவங்கள் சமீரு இப்போ அனுபவிக்கிறேன். அஞ்சு வயசுல தகப்பன பறிகொடுத்திட்டு வந்து நின்ன உன்னையும் எந்தங்கச்சி சுபைதாவையும், பொண்டாட்டி பேச்ச கேட்டு ஆதரிக்காமல் அனுப்பிட்டேன். பணக் கொழுப்பும், திமிரும் என் கண்ண மறச்சிருச்சு. ரெண்டு மகன்களும் கல்யாணம்பண்ணின கொஞ்ச நாள்ல என்னமாதிரியே பொண்டாட்டி பேச்சைக் கேட்டுத் தனியா போய்ட்டானுக, அதோட சொத்து பிசினஸ் எல்லாம் பிரிச்சு எடுத்துட்டு எங்களத் தனியா விட்டுட்டானுங்கப்பா. இத நெனச்சு நெனச்சே உங்க மாமிக்கு அடிக்கடி நெஞ்சுவலி வந்துருச்சு, வைத்யம் பாக்கக்கூட காசு இல்ல. கவர்மென்டு ஆஸ்பத்திரிலதான் சேர்த்துருக்கேன். பெத்த புள்ளைகளட்ட பேச முடியல, போன கட்பண்றானுகள். இப்போ மாமிக்கு இருதயத்துல அடப்பு இருக்காம். ஆபரேசன் பண்றதுக்கு நெறய செலவாகுமாம். ஏதாவது லோன் கெடைக்குமானு கேக்கத்தான் பேங்குக்கு வந்தேன் சமீரு” விம்மல்களுடனும் அழுகைகளுடனும் சொல்லிமுடித்தார் காதர்பாய்.

“மொதல்ல என்கூட வாங்க மாமா”என்று அருகிலிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். “நல்லா சாப்பிடுங்க” என்று வயிறார சாப்பிடவைத்தான். நல்ல துணிகள் எடுத்துக் கொடுத்தான். மாமிக்கு இந்த சேலைகளைக் கொடுத்துருங்க மாமா என்றான். கவர்ன்மென்ட் வாசலில் இறங்கையில் சமீரும் சேர்ந்து இறங்கினான். பேங்கிலிருந்து எடுத்த பணத்தை மாமியின் ஆபரேஷன் செலவுக்குக் கொடுத்தான். டாக்டரிடம் சென்று தனது போன் நம்பரைக் கொடுத்து,”என்ன விவரமென்றாலும் இந்த நம்பருக்குக் கால்பண்ணுங்க டாக்டர், நானும் அடிக்கடிவந்து பார்த்துக்கறேன்”என்று புறப்படத் தயாரானான் சமீர்.

“சமீர், அம்மா எப்படி இருக்கா? நீ என்ன செயறப்பா?” என்று மனசாட்சி உறுத்தியவராய் கேட்டார்காதர்பாய்.” நல்லாருக்காங்க மாமா, இட்லி, இடியப்பம் செஞ்சு வித்து என்னைப் படிக்க வச்சாங்க. நான் படிச்சு முடிச்சதும், அதையே பெரிசாக்கி பேக்டரி தொடங்கி நிறையப் பேருக்கு வேலை கொடுத்திருக்கேன். வசதியில்லாத குடும்பத்திலிருந்து பெண் பார்த்து கல்யாணம்பண்ணி வச்சாங்க அம்மா. இப்போ எல்லாரும் ஒன்னா நல்லாருக்கோம் மாமா” என்ற பதிலைக் கேட்க கேட்க காதர்பாய் வெட்கி தலை குனிந்து கொண்டார்.

“சரிவரேன் மாமா, இனி பிள்ளைகளுக்குப் போன்பண்ண வேணாம், எனக்கு போன் பண்ணுங்க. அம்மாவிடம் வெவரத்த சொல்லி கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு காரில் கிளம்பிய சமீரையும், அவனை நல்ல பிள்ளையாக வளர்த்த தங்கையையும் நினைத்து பெருமைபட்டார்.

காரில் கிளம்பிய சிறிது நேரத்தில் அம்மாவிடமிருந்து போன் வந்தது சமீருக்கு. “யா அல்லாஹ், ஹஜ்க்குப் போக வைத்திருந்த பணத்தை மாமியின் ஆபரேசன் செலவுக்குக் கொடுத்திட்டேனே, மீதமுள்ள பணம் பிசினஸ்க்குத் தேவைப்படுமே, அம்மாவிடம் எப்படி சொல்லப் போறேன்?” என்று கலங்கியபடியே போனை எடுத்தான்.
“சமீர், நீ எங்கே இருக்கே? வீட்டிலேருந்து நீ போன கொஞ்ச நேரத்தில சபீரா அடுப்படியில மயங்கிவிழுந்துருச்சுப்பா. நம்ம மேரி டாக்டருக்கு போன்பண்ணினேன். அவங்க வந்து பார்த்துட்டு சபீரா கர்ப்பமா இருக்கறதா சொன்னாங்க சமீரு. எனக்கு சந்தோசம் தாங்கமுடியல. நீ உடனே வீட்டுக்கு வா. இறைவன் நாடினால் கொழந்தையோட நீங்க அடுத்த வருசம் ஹஜ்க்குப் போகலாம்.” என்ற அம்மாவின் பேச்சைக் கேட்டதும், மனதார இறைவனுக்கு நன்றி செலுத்தினான் சமீர்.
நிறைய ஹஜ் யாத்திரைகள் செய்த உணர்வு சமீருக்கும், சபீராவுக்கும்.

ஃபாத்திமா,
ஷார்ஜா.

News

Read Previous

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு

Read Next

பணிவும் துணிவும்

Leave a Reply

Your email address will not be published.