வாசிப்புக்கு திசை இல்லை

Vinkmag ad

வாசிப்புக்கு திசை இல்லை எஸ் வி வேணுகோபாலன் 

சுவாரசியமான ஒரு கோப்பை தேநீர், கடலை மிட்டாய் இருந்தால் போதும்,  தொழிற்சங்க வாழ்க்கையில் மணிக்கணக்கில், மாநாட்டு அறிக்கை விஷயங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பேன். மூன்றாவது விஷயம் ஒன்று உண்டு எனில், அது நல்ல கவிதை புத்தகம். 
கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் மீதான காதல் வலுத்திருந்தது. பழந்தமிழ்ச் செய்யுள்கள், திரைப்பாடல்கள், புதுக்கவிதைகள் பாகுபாடு இன்றி ரசிக்கும் மனம் வாய்த்திருந்தால் வாசிப்பின் ரசனை விட வேறென்ன வேண்டும் வாழ்க்கையில். வழக்கமான வாசிப்பிலிருந்து கொஞ்சம் ஆளை உலுக்கி எடுக்கும் புத்தகங்கள் வாசகர் பார்வையில் தட்டுப்படவே செய்கின்றன. மொழி பெயர்ப்புக் கவிதைகள் சில அப்படி புரட்டிப் போட்ட வரிசையில் வருபவை. எண்பதுகளில் வங்கிப் பணியில் சேர்ந்து மாற்றலில் சென்னைக்குச் சென்றபிறகு, வங்கியில் கவிதை போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடப்பது அறிந்தபோது வியப்பாக இருந்தது. இந்தியன் வங்கியின் சென்னை மண்டலத்தில் ஆர்வமிக்க சிலர் உருவாக்கி இருந்த பண்பாட்டு அமைப்புக்கு MAZONIB என்று பெயர் வைத்தவர் அப்போதைய மண்டல மேலாளர் எம் எஸ் கந்தப்பன் அவர்கள்.  சென்னை அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் பெற்ற மெடல்களோடு மூட்டை கட்டி வைத்திருந்த கவிதையும், பேச்சும் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்கின. 
அப்படியான ஒரு பேச்சுப் போட்டியில் பங்கேற்று, முதல் பரிசும் அறிவிக்கப்பட்டு முடிந்து இறங்கி வரும்போது, தொழிற்சங்க நிர்வாகிகளோடு, அதிகாரிகள் சிலரும் வந்து பாராட்டினார். பர்சனல் துறையில் அப்போது இருந்த ஜி ராமதாஸ் எனும் அதிகாரி ஒரு பேனா பரிசளித்தார். அதுவரை அறிமுகம் அற்ற வேறோர் அதிகாரி என்னருகே வந்து ‘சிறப்பாகப் பேசினீர்கள்’ என்று வாழ்த்திவிட்டுப் போய்விட்டார். 
‘சமூக முன்னேற்றத்தில் தனி மனிதனின் பங்கு’ என்ற தலைப்பிலான போட்டியில் பேச்சின் நிறைவில் கியூப புரட்சியாளர் தோழர் ஃ பிடல் காஸ்ட்ரோ தாம் எதிர்கொண்ட  சவால் மிகுந்த நீதிமன்ற விசாரணையில் நிகழ்த்திய அற்புதமான உரையின் எழுத்து வடிவமான ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ நூலில் இருந்து கொஞ்சம் மேற்கோள் காட்டி இருந்தேன். போட்டி நடுவர்களைப் பார்த்து, ‘நீங்கள் என்ன தீர்ப்பு எழுதுவது, வரலாறு எழுதும்’ என்று அந்தப் புத்தக வாசகங்களைத் தழுவிச் சொல்லி முடித்ததை சிலாகித்து வேகமாக வாழ்த்திவிட்டுப் போன அதிகாரி யாரென்று தெரியவில்லை.  திரு ராமதாஸ் அவர்களிடம் கேட்கவும், “அவரைத் தெரியாதா, அவர் பெயர் பி ஜி ராஜேந்திரன், புனைபெயர் இந்திரன்” என்றார். பேரின்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தேன்.
மறுநாள் காலை, வழக்கம்போல் கோடம்பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நடந்து போய்க் கொண்டிருக்கையில் அவரைப் பார்த்துவிட்டேன். அவரும் நெருங்கி வந்து, ‘நேற்று போட்டியில் பேசியவர் நீங்கள் தானே, வாழ்த்துகள்’ என்றார். ‘உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றேன். ‘நன்றாகப் பேசியவரைப் பாராட்டுவதில் வியப்பு இல்லை’ என்றார். 
நான் உடனே, ‘ஆம், காற்றுக்கு திசை இல்லை’ என்றேன். 
அவர் அதிர்ந்துபோய், ‘சொல்லுங்க…என்ன சொன்னீங்க, திரும்ப சொல்லுங்க’ என்று ஆர்வத்தோடு கேட்டார். “உங்களது அருமையான மொழிபெயர்ப்புப் புத்தகத்தின் பெயரைத் தான் சொன்னேன்” என்றதும், பன்மடங்கு பூரிப்பு அவருக்கு. 
“படிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார், ‘செலவழித்த புன்னகைகள்’ என்ற கவிதையை அப்படியே சொல்லவும், எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் கட்டித் தழுவிக்  கொண்டார். ‘சிந்தி மொழி கவிஞர் மோதிலால் ஜத்வானி அவர்களது, ‘செலவழித்த புன்னகைகள்’ என்ற கவிதை எளிமையானது, ஆனால் நுட்பமானது. பொருள்களை வாங்க அங்காடிக்குச் செல்லும் ஒருவனைப் பற்றிய அரசியல் கவிதை அது. தொகுப்பு கையில் இல்லை, கவிதை நினைவில் இருந்தே இங்கே:
……………………………..மளிகைக் கடைக்காரனிடம் சிறிது புன்னகை செய்கிறேன்பொருள்களைத் தராசில் வைத்து நிறுத்தும்போது என் பக்கம் சிறிய சாய்வு செய்யக் கூடாதா என்று 
எனது அன்றாடத் தேவைகளின் விலை கூடிக் கொண்டே செல்கிறது, காய்கறிக்கடைக்காரனிடம் கூடப் புன்னகை செய்கிறேன்என்னுடையதைப் போன்ற குறைந்த தேவைக்கு அவன் அதிக விலை வைத்துவிடக் கூடாதே என்று 
இப்படி கடைத்தெரு முழுக்க செலவாகின்றன என் புன்னகைகள் 
வீடு திரும்புகிறேன் மனைவி பிள்ளைகளைப் பார்த்துச் சிரிக்க புன்னகை கைவசம் இல்லை
என்று முடிகிறது. 
எண்பதுகளில் இரண்டு மொழி பெயர்ப்பு நூல்கள் கொண்டு வந்திருந்தார் கவிஞர்-ஓவியர்-கலை விமர்சகர் இந்திரன். ‘காற்றுக்கு திசை இல்லை’ என்பது, இந்திய மொழிகள் பலவற்றில் வந்த கவிதைகளை அவர் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியது. ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’, முழுக்க கறுப்பின மக்களது போர்க்குரல்கள் நிரம்பியது, கவிதைகளும் கதைகளுமாக.  – 

‘காற்றுக்கு திசை இல்லை’ தொகுப்பில், அபாரமான கவிதைகள் நிறைய உண்டு. அதிகார வர்க்கத்தைப் பற்றிய அருமையான கவிதை ஒன்றின் கடைசி வரியில், ‘எங்களைத் தூக்கிப் போட்டு விடாதீர்கள், தவிரவும் எங்களால் ஊர்ந்து செல்ல முடியாது’ என்று வரும். மற்றுமொரு கவிதையில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகிறான் ஒருவன், அவன் இருந்தும் இராதது போலவே பணிப்பெண் அறையைக் கூட்டிவிட்டுப் போகிறாள். வானொலி கேட்கலாம் என விசையை முடுக்கப் போகிறான், கைகளைக் காணோம். ஓ, அவை பேருந்தில் மேலே பிடிகளைப் பற்றிய இடத்திலேயே இருக்கக் கூடும், கண்களைக் காணோம், அவை அலுவலகத்தில் கோப்புகளின் மீது கழற்றி வைத்த இடத்திலேயே இருக்கக் கூடும், கால்கள்? ஆம், நகரத்தில் நகரவே நகராத ஏதோ ஒரு கியூ வரிசையிலேயே அவை இருந்து கொண்டிருக்கக்கூடும், என்ன உடலற்ற வாழ்க்கை என்று எந்திரத்தனமான நகர வாழ்க்கையைச் சொல்லி முடியும்.
தொகுப்பில் வரும் ஒரு கதையைச் சட்டென்று கடந்து போய்விட முடியாது. அந்த நகரத்தில், இரவு நேரம். ஊரில் மெல்ல நடமாட்டம் குறைய ஆரம்பிக்கிறது. அந்த அழகான இளம்பெண் சகிக்காத பழைய உடையொன்றில் வேகவேகமாக வந்து, சிறிய தேநீர்க் கடை ஒன்றினுள் நுழைந்து உள்பக்கம் பழைய தகரப் பெட்டி ஒன்றைத் திறந்து அதிலிருந்து கொஞ்சம் புதிதாகத் தோன்றும் மங்கலான நிறத்துச் சேலையொன்றிற்கு மாறுகிறாள். தலையில் பூ வைத்திருக்கிறாள். பிறகு கடை வாசலில், வெளிச்சம் மேலே பட, வருவோர் போவோர் பார்வையில் படுமாறு நின்று கொண்டு தனது வாடிக்கையாளனுக்குக் காத்திருக்கத் தொடங்குகிறாள். 
அதே நேரத்தில், ஓர் இளம் வாலிபன் கையில் நிறைய பூக்கள் சுமந்தபடி ஜன சந்தடியில் யாரிடமாவது விற்கத் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறான். கார் ஏதேனும் சிக்னலுக்காக நிற்கும்போது ஓடியோடிப் போய் யாருக்கேனும் கொஞ்சம் விற்று விட்டு வருவான். கையில் இன்னும் மலர்கள் நிறைய வைத்திருக்கிறான். அவளை அவனோ, அவனை அவளோ கண்டு கொள்வதில்லை. அவரவர் வாடிக்கையாளருக்கான காத்திருப்பு நேரம் அது. 
தொலைவில் இருந்து யாரோ இருவர் வேகவேகமாக வருகின்றனர், ‘எங்கே?’என்று கேட்கிறாள் அவள். அவர்கள் கடற்கரை பக்கம் எங்கோ தொலைதூரத்தைக் காட்டி ஏதோ சொல்கிறார்கள். படுமோசமான வசவு மொழியொன்றைச் சொல்லி அவர்களை விரட்டித் திருப்பி அனுப்பி விடுகிறாள் அவள். 
பூ விற்கும் இளைஞன், அவளிடம் வந்து, ‘வந்த ஒரே ஒரு கிராக்கியையும் ஏன் மறுத்துவிட்டாய்?’ என்று ஆதரவாகக் கேட்கிறான். 
“சைத்தான்கள், கப்பலுக்கு அழைக்கிறார்கள், எங்கிருந்தோ வந்து இந்த இரவு தங்கிப் போகும்வரை சும்மா இருக்க முடியாது போலிருக்கிறது, எத்தனை பேர் என்று தெரியாது, என்னைக் கிழித்து விடுவார்கள், நான் தான் அகப்பட்டேனா..” என்று அப்படியே பொரிந்து தள்ளுகிறாள் கோலாப்பி. ஆம், அவள் பெயர் நினைவு இருக்கிறது. 
“இன்றைக்கு எனக்கும் சரியாகப் போணியாகவில்லை.” என்று மிச்சமிருக்கும் பூக்களைக் காட்டி வருத்தம் பொங்கப் பேசுகிறான் அவன். 

“ஆம், சுடுகாட்டில் பிணங்கள் மீதிருந்து கவர்ந்து வந்த பூக்கள் தானே,  உனக்கு என்ன நஷ்டம் அதில்?” என்று அவனைப் பகடி செய்கிறாள் அவள். 
“நீ மட்டுமென்ன முதலீடு செய்கிறாய் உன் தொழிலில்?”என்று பதிலுக்கு அவளை மடக்குகிறான் அவன். 
நேரம் நடுநிசி தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்குமேல் எந்த வாய்ப்புமில்லை என்ற முடிவுக்கு இருவரும் வருகின்றனர். கடைக்காரர் கடையை  அடைக்கப்போகுமுன், கோலாப்பி போய்த் தனது சேலையைக் களைந்து உள்ளே வைத்துவிட்டுப் பழைய உடையில் வெளியே வருகிறாள். 
பின், இருவரும் நடக்கின்றனர். அந்தப் பூவில் ஒன்றை எடுத்து சினிமாவில் வரும் காதலன் போல் அவளிடத்தில் நீட்டுகிறான் அவன், அவள் அதை முகர்ந்து கூடப் பாராது தூக்கி எறிந்துவிட்டு நடக்கிறாள். 
ஆனால், கதை அங்கே முடிவதில்லை, கதாசிரியர் சொல்கிறார், இந்தக் காட்சியை நீங்கள் இலக்கியமாக இப்படி வருணிக்கலாம் என்று சில எழிலான வாக்கியங்களை எழுதிவிட்டு, சட்டென்று முறித்து, ஆனால், அவர்கள் வாழ்க்கைக்கும் இந்த வரிகளுக்கும் யாதொரு தொடர்புமில்லை, அவரவர் வழியில் போகின்றனர் அவர்கள் என்று மண்டையில் அடித்தாற்போல் முடித்திருப்பார்.  வாழ்க்கைப் போராட்டத்தின் வலி வாசகருக்குள் அப்படியே இறங்கும்.
தமிழிலும், படிப்பின் பகுதியாகக் கொஞ்சம் ஆங்கிலத்திலுமாக இருந்த வாசிப்பு, மொழி பெயர்ப்பில் வெவ்வேறு நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியல் பாடுகளை நம் மொழியில் வாசித்து அறியும் போது, மனித குல விடுதலைக்கான சிந்தனைகளை அவை மேலும் தூண்டி இருக்கின்றன என்பது இப்போது திரும்பிப் பார்க்கையில் தோன்றுகிறது. வாசிப்பு, மனத்தின் உள்வெளியை எத்தனை விரிவுபடுத்திக் கொடுத்திருக்கிறது என்பது நினைக்க நினைக்க வியக்க வைக்கிறது. அதன் நீட்சியில் மேலும் வாசிக்கக் கிடைத்த புத்தகங்களும், பத்திரிகைகளும் எத்தனை முக்கியமானவை….
(தொடரும் ரசனை)கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com அலைபேசி எண்: 9445259691

News

Read Previous

பத்திரிகைப் பணி…

Read Next

பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும், நீதிக் கட்சியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *