பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும், நீதிக் கட்சியும்

Vinkmag ad

பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும், நீதிக் கட்சியும்.
— முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி.

சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் சங்கத்தைத் துவக்கியவர்கள் நாயக்கர்கள் மட்டுமல்ல, அதில் எல்லாப் பிரிவினரும் இருந்தனர். குறிப்பாகப் பெரியார் அந்த அமைப்பிலேயே இல்லை. இதற்குச் சற்று நீண்ட விளக்கம் தேவை.
1900 – 1920 ஆம் ஆண்டுகளின் இடையில் சென்னை மாகாணத்தில் வர்ணாசிரமப் பாதுகாப்புச் சங்கம், சனாதன தர்ம சங்கம், சனாதனச் சங்கம் என்ற பெயர்களில் கிராமங்கள் மட்டத்திலும் இயங்கக்கூடிய இந்துமதச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்து மதத்தின் பெயரால் உயர்வு தாழ்வுகளை உறுதிசெய்வதும், வேத, ஆகம, இதிகாச, புராணங்களின் பெயரால் மூடப்பழக்கங்கள், விழாக்கள், பண்டிகைகள் ஆகியவை நிலை பெறுகின்ற அளவில் தொடர்ந்து பரப்புரை செய்வதும் சங்கங்களின் நோக்கங்களாக இருந்தன.
1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் மிண்டோ மார்லி சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய மாகாணங்களில் சட்டமன்றம் போன்ற ஒர் அமைப்பை ஏற்படுத்த வகை செய்தது. இதில் உள்ள ‘இந்திய உறுப்பினர்’களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் இல்லை. விவாதங்கள் செய்யலாம். ஆனால் அதைப் பிரிட்டிஷ் கவர்னர் ஏற்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் இந்திய உறுப்பினர்கள் ஒரு சில இஸ்லாமியர், ஜமீன்தார்கள் தவிரப் பெரும்பான்மையோர் பார்ப்பனர்களாக இருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கப் பதவிகளிலும் இதே நிலைதான் நீடித்தது.
இந்தக் காலகட்டத்தில் சென்னையில் பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தம நாயுடு என்னும் இரண்டு வழக்கறிஞர்கள் “தி மெட்ராஸ் non-brahmin அசோசியேஷன்” என்ற ஒர் அமைப்பை ஏற்படுத்தினர். 1912 ஆம் ஆண்டில், பார்ப்பன அரசு ஊழியர்களால் பிற சாதியினர் இன்னல் அடைவதைக் கண்டித்து “தி மெட்ராஸ் யுனைடெட் லீக்” என்ற ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட இது ஒரு தொழிற்சங்க அமைப்புப் போலச் செயல்பட்டது. இதன் செயலாளராக டாக்டர் சி. நடேசன் இருந்தார். இதற்கு அரசு, அரசு சாரா அமைப்புகளின் ஆதரவு ஓரளவு இருந்தது. 
பின்னாட்களில் இச்சங்கத்தின் பெயரைப் “பார்ப்பனரல்லாதார் சங்கம்” என மாற்றக் கருதினர். ஆனால் எதிர்மறைப் பெயராக இருக்கிறது என்பதால் “சென்னை திராவிட சங்கம்” என்று பெயர் மாற்றம் செய்தனர் (10.11.1912). டாக்டர் நடேசன் சங்கத்தின் செயலாளராகத் தொடர்ந்தார். பின்னர் சங்கத்தின் சார்பில் 1914 ஆம் ஆண்டில் திராவிட மாணவர் விடுதி நடத்தப்பட்டது. பொதுவாகப் பார்ப்பனர்,  பார்ப்பனரல்லாதார் என்று குறிப்பிடும் வழக்கம் இதற்கு முன்பாகவே சமூக நிலைகளில் வழக்கிலிருந்து வந்தது. இது அரசு ஆவணங்களிலும் எதிரொலித்தது. 1870-71 பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கல்வித்துறை அறிக்கையில் பிராமின், hindu’s non-brahmins என்று குறிப்பிடப்பட்டது. 1891 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பிராமணர்கள், பிராமணரல்லாதார், தீண்டத்தகாதவர்கள் என்ற மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதன்படி கணக்கெடுக்கப்பட்டன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலாம் உலக யுத்தம் குறுக்கிட்டது. அப்போது பார்ப்பனர்களைப் பெருவாரியாகக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இந்தியாவுக்கு டொமினியன் ஆட்சி வேண்டும் என்று கோரி வந்தது.
“அந்தக் கட்டத்தில் பிரிட்டிஷார் தம்மிடமிருந்த அதிகாரத்தை இந்தியர் கைக்கு மாற்றினால் தென்னாடு சம்பந்தப்பட்ட மட்டில் இது பார்ப்பனர் ஆதிக்கமாகவே இருக்கும் என்று பிராமணர் அல்லாதவர்களில் படித்தவர்களும், பணக்காரர்களும் அஞ்சினர் அல்லது அச்சத்தைக் கிளப்பினர். இவர்கள் தென்னிந்திய லிபரல் பெடரேசன் என்ற சங்கத்தை அமைத்தனர்” – இது தினமணி ஆசிரியர் திரு ஏ. என். சிவராமன் அவர்களின் கருத்து (1971). 
இப்படிப்பட்ட சூழலில்தான் சென்னை மாகாணத் திராவிட சங்கம் நடைபெற்று வந்தது. இந்தச் சங்கத்தில் திரு சிங்காரவேலர், திரு லட்சுமி நரசு திரு.வி.க. போன்றோர் அவ்வப்போது உரையாற்றி வந்தனர். 1915 ஆம் ஆண்டில் இச்சங்கம் ‘Dravidian Worthies’, ‘Non-Brahmin Letters’ என்ற இரு நூல்களை வெளியிட்டது.
இக்காலகட்டத்தில் நிலவிய சனாதன சங்கங்களின் செயல்பாடுகளும், அவர்களுக்கு ஆதரவாகப் பார்ப்பன ஏடுகளின் அச்சுறுத்தல்களும் பார்ப்பனர் அல்லாதவருக்குக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இந்நிலையில் டாக்டர் டி. எம். நாயர், பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசனார் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் விளைவாகச் சென்னை வேப்பேரியில் 20.11.1916 அன்று பார்ப்பனரல்லாத தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இங்குதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) தோற்றம் பெற்றது. இதில் பார்ப்பனர் தவிர்ந்த அனைத்துச் சாதியினரும் கலந்து கொண்டனர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி. எம். நாயர், டாக்டர் நடேசன், ராவ்பகதூர் எம். சி. ராஜா, வரதராஜுலு நாயுடு, முத்தையா முதலியார் உள்ளிட்ட 26 தலைவர்கள் ஒன்று கூடி முடிவெடுத்து திரு. ராஜரத்தினம் முதலியார் தலைமையில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினைத் தோற்றுவித்தனர். இது குறித்துத் திரு.வி.க. இப்படி எழுதுகிறார்:
“1916 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஓய்வில் சென்னை ஹாமில்டன் வாராவதி அருகே ராஜூ கிராமணியார் தோட்டத்தில் யாழ்ப்பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடு கூடியது. மகாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஓர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம்மாநாட்டுக் கொட்டகையிலேயே அன்று மாலை பிராமணரல்லாதார் முன்னேற்றம் பற்றி பி. தியாகராயச் செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்விதமே அவர் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும், அதனால் பிராமணரல்லாதார் நசுக்குண்டு நாசமடைவதைப் பற்றியும் பேசி, காங்கிரசை நம்ப வேண்டாம், அவற்றினால் பிராமணரல்லாதார் மயங்குறல் வேண்டாம் என்று வற்புறுத்தினார்” என்று திரு. வி.க. குறிப்பிடுகிறார். 
இதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு பிட்டி தியாகராயர் கையொப்பமிட்ட பிராமணரல்லாதார் அறிக்கை 20.12.1916 அன்று வெளியிடப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டில் சென்னை சேத்துப்பட்டுச் சாலையில் டாக்டர் டி. எம். நாயர் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவும் பார்ப்பனரல்லாதார் சங்கத்தின் மற்றொரு பிரகடனமாகக் கருதப்படுகிறது. இக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் ராவ்பகதூர் எம்.சி. ராஜாவும், திரு. ஜான். ரத்தினமும் ஆவார்கள். இரட்டைமலை சீனிவாசன் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார். இந்நிகழ்வு குறித்து 9. 11. 1917 அன்று ஜஸ்டிஸ் இதழில் டாக்டர் டி. எம். நாயர் பின் வருமாறு எழுதுகிறார்:
“கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ் பிரதேசங்கள் அடங்கியதுதான் தென்னிந்தியா. இவைகள் சேர்ந்ததே இன்றைய சென்னை மாகாணம். இந்தத் தென்னிந்தியாவில் வாழும் மக்கள் ஒரே கூட்டத்தவர் (திராவிடர்). இந்த நான்கு சகோதரர்கள் பேசும் பாஷைகள் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை. இந்தத் தென்னிந்தியா, இந்தியாவின் மத்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களும் சேர்ந்த கூட்டு அரசு ஏற்படவேண்டும். எங்கள் தென்னிந்தியர் விடுதலைக் கழகம் அதற்காகவே ஏற்பட்டது; அதற்காகவே பாடுபடப் போகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். 
இவர்கள் எல்லாம் ஒன்று கூடித் தான் திராவிட சங்கம் அல்லது பார்ப்பனர் அல்லாதார் சங்கம் அல்லது தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்புக்கு ஆந்திரப் பிரகாசிகா, திராவிடன், ஜஸ்டிஸ் என்னும் மூன்று பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலப் பத்திரிகையான ஜஸ்டிஸ் அந்நாளில் பிரபலமாகவே, இந்த இயக்கத்தின் பெயரும் ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் நீதிக்கட்சி என்று வழங்கலாயிற்று.
பார்ப்பனர்களை எதிரியாகக் கருதாமல், தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பொது அமைப்பாகத்தான் அன்றைய நீதிக் கட்சியாக இருந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் செயல் பட்டு வந்தது. ஆனால் இந்த நீதிக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரசில் இருந்த பார்ப்பனர்கள், காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்களைக் கொண்டு, தனியே “சென்னை மாகாணச் சங்கம்” என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்தனர். “ஜஸ்டிஸ் கட்சியை மாய்க்கச் சென்னை மாகாணச் சங்கம் எழுந்தது” என்று திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்பில் எழுதுகிறார். இதையே முழு வேலையாகக் கொண்டு டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் ஹோம் ரூல் இயக்கத்தை 1916 இல் தொடங்கினார். 
காங்கிரசின் கிளை அமைப்பாக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கம், தென்னாட்டு பிராமணர் அல்லாதவர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டதாக உறுதி கூறியது. இச்சங்கத்திற்குத் திவான்பகதூர் பி. கேசவப்பிள்ளை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் உதவித் தலைவர்களாக லாட் கோவிந்த தாஸ், சல்லா குருசாமி செட்டியார், ஈ. வெ. ராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமி பிள்ளை, சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை சீனிவாசப் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இச்சங்கத்தின் செயலாளர்களாகத் தி. வி. கோபாலசாமி முதலியார், குருசாமி நாயுடு, டாக்டர் வரதராஜுலு நாயுடு, சக்கரைச் செட்டியார், திரு. வி.க. ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இச்சங்கம் முதல் இரண்டு ஆண்டுகள் நீதிக்கட்சிக்கு எதிராக செயல்பட்டு, மூன்றாம் ஆண்டில் சிறிது சிறிதாகத் தேய்ந்து முடங்கிப் போனது. 
இந்நாட்களில், படிப்படியாக அரசியலில் வளர்ச்சி அடைந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் ஆனார். அதேநேரம் அவர் இயல்பான பகுத்தறிவாளர் ஆக இருந்ததால் நீதிக்கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். நீதிக்கட்சியில் பேசப்பட்டு வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற திட்டத்தைக் காங்கிரசு கட்சி ஏற்க வேண்டுமென்று, அவர் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்த தீர்மானம் அவர் தலைவராக இருந்த போதிலும் பலமுறை தோற்கடிக்கப்பட்டது. 
1919 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்ட மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டத்தின் படி இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் சென்னை மாகாணத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சியினர் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தைச் செயல் படுத்தும் நோக்கில் (இட ஒதுக்கீடு) அரசாணை வெளியிட்டனர். அது கம்யூனல் ஜி. ஓ. என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதை நடைமுறைப் படுத்த விடாமல் காங்கிரஸ் பார்ப்பனியம் தடுத்துக் கொண்டிருந்தது. அந்நேரம், அடுத்து வரும் 1926 ஆம் ஆண்டின், அன்றைய இரட்டை ஆட்சி முறையில் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டி இருந்ததால், ஒருவேளை அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பெரியார் கொண்டு வந்த தீர்மானம் ஏழாவது முறையாகக் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தோற்கடிக்கப்பட்டது. அதே மேடையிலேயே பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். 
அந்த ஆண்டில்தான் (1925) அவர் குடியரசு இதழை ஆரம்பித்திருந்தார். குடிஅரசு இதழின் இயக்கமும், தொடர்ந்து தமிழகமெங்கும் நடத்திய பரப்புரைகளும் சுயமரியாதை இயக்கமாக உருவெடுத்தது. இது தான் சுயமரியாதை இயக்கம் என அழைக்கப்பட்டது.
1938 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி, சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியைத் திணிப்பதற்காகக் கொண்டு வந்த ஆணையை எதிர்த்துச் சுயமரியாதை இயக்கம் முழு அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்தது. அப்போது தமிழகத்தில் இருந்த அனைத்துத் தமிழ் அமைப்புகளும், சமூக அமைப்புகள் அத்தனையும் ஒரே புள்ளியில் இணைந்ததன் விளைவாகத் தமிழகம் போராட்டக் களமாக மாறியது. போராட்டத்தில் பலர் கைதானார்கள். பெண்மணிகள் அதிகளவில் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றனர். பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையில் கடுங்காவலில் வைக்கப்பட்டார். இக் காலகட்டத்தில் தான் நீதிக்கட்சியினர் ஒன்று கூடி சிறையிலிருந்த பெரியாரை நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். இன்றைய ஆந்திர மாநிலம் எரவாடா சிறையில் பெரியாரைச் சந்தித்து நீதிக்கட்சியின் தலைமையை ஏற்குமாறு கூறினர். அவர்கள் நிலையைக் கண்டு பெரியாரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுவரை சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்த பெரியார் 1939 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியின் தலைவராகவும் ஆனார். 
அதற்குப் பிறகு 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக நீதிக்கட்சியில் இருந்த கனவான்கள், ஜமீன்களின் நிலை கேள்விக்குறியாகியது. அவர்கள் நீதிக்கட்சி தொடரும் என்று அறிவித்தனர். ஆனால் மக்கள் ஆதரவின்றி நீதிக்கட்சி தொடர்ந்து இயங்க முடியாமல் போய் விட்டது. திராவிடர் கழகம், தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் தீவிரமாகப் பரவலாயிற்று.

துணை நின்ற நூல்கள்:1) தமிழர் தலைவர், சாமி. சிதம்பரனார், 2009.2) பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், வே. ஆனைமுத்து, 2009.3) நீதிக்கட்சி வரலாறு, க. திருநாவுக்கரசு, 2009.

News

Read Previous

வாசிப்புக்கு திசை இல்லை

Read Next

பண்டிதர் அயோத்திதாசரின் வாழ்வும் பணிகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *