மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு

Vinkmag ad


மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு

 எஸ் வி வேணுகோபாலன் 

நாளேடு வாசிப்பு, எங்கள் தந்தையிடம் இருந்து எங்களுக்கெல்லாம் பரவி இருக்கக் கூடும். வேலூரில் குடியிருக்கையில், வீட்டுக்கு அவர் செய்தித்தாள் போடச் சொல்வதற்குமுன், அடுத்த வீதியில் இருந்த அவருடைய நண்பர் புஜங்க ராவ், அன்றாடம் தாம் வாசித்த தாளைக் கொடுத்து அனுப்புவது வழக்கம். ஐந்தாறு நாள் அலுவலகப் பணி காரணமாக வெளியூரில் முகாமிட்டுத் திரும்பி வரும் என் தந்தை, அத்தனை நாள் செய்தித்தாள்களையும் போய் வாங்கிவருமாறு என்னைப் பணிப்பதும், அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று தயங்கித் தயங்கிப் போனால் அவர்கள் வீட்டில் தயாராக எடுத்து வைத்துத் தருவதை இங்கே வந்து கொடுப்பதுமான நாட்கள் நினைவில் இருக்கிறது. 
செய்திகள் தவறாது வானொலியில் கேட்பதும், நாளேடுகள் வாசிப்பதும் அப்பா ஒரு நாள் கூட விடாது கடைப்பிடித்து வந்தவர், தமது இறுதிக் காலத்தில் தொலைகாட்சி செய்திகள் மிக அருகே போய் அமர்ந்தாவது கேட்டுவிட்டுத் தான் அடுத்த வேலை என்று வாழ்ந்தவர். 
என்னுடைய கதை வேறு. நாளிதழ்கள் அன்றாடம் படிக்கும் வழக்கம் இருந்தாலும், சில நாட்கள் வேறு முன்னுரிமை காரணமாகப் பிரிக்காமல் கூட சோபாவில் கிடந்து, நாற்காலிக்கு இடம் மாறிப் பின் மொத்தமாக உள்ளே அடைந்துவிடும் நாளேடுகளைப் பழைய பேப்பர்காரரிடம் எடைக்குப் போடும்போது மிகுந்த குற்ற உணர்ச்சி தாக்கும். ஆனால், பள்ளிக் கல்வி முடித்தபின், ஆங்கில மொழியை நுட்பமாக ரசித்து வாசிக்க, எழுத நாளேடுகள் பேருதவி புரிந்ததை மறக்க முடியாது. 
ஏ எம் ஜெயின் கல்லூரியில் பியுசி படிக்கையில், ஆங்கில அறிவு போதாமையால், வகுப்பில் ஆசிரியர் நடத்துவது பிடிபடாமல் போனதில் பிசிக்ஸ் பாடத்தில் காலாண்டுத் தேர்வில் 150க்கு வெறும் 48 மதிப்பெண்கள் வாங்கி, ஃபெயில் ஆனது வாழ்க்கையில் முதல் தோல்வி. தேர்வில் தவறியவர்களுக்கு மாலை நேரத்தில் பிசிக்ஸ் பாடத்திற்கான சிறப்பு வகுப்பு நடத்துவார்கள், அதில் போய்க் கலந்து கொள்ளவேண்டும் என்று எழுதிக் கொடுத்து விட்டனர். 
நேரே கல்லூரி முதல்வர் திரு வி வி ராமன் அவர்களைப் போய்ப் பார்த்து, ‘எனக்கு பிரச்சனை பிசிக்ஸ் பாடத்தில் அல்ல, ஆங்கிலத்தில் சிறப்பு வகுப்பு நடத்தினால் பிழைத்துக் கொள்வேன்’ என்று சொல்லவும், அவர் ‘அதெல்லாம் கிடையாது, இந்தப் பாடத்தைக் கற்றுக் கொண்டு தேறும் வழியைப் பார்’ என்று விரட்டி அனுப்பினார். அந்த ஆண்டு இறுதித் தேர்வில் 160/200 மதிப்பெண்கள் பெற முடிந்ததற்குக் காரணம், அப்போது நாளேடுகள், ஆங்கில மாத இதழ்கள், இலக்கணப் புத்தகம் ஒன்று பழைய புத்தகக் கடையில் வாங்கி விடாது வாசித்தது எல்லாம் உறுந்துணை புரிந்தது தான். 
நாளேடு கையில் எடுத்தால் முதலில் விளையாட்டுச் செய்தி, அப்புறம் மெல்லத் தலையங்கம், நடுப்பக்கக் கட்டுரைகள்….என்று பரவி, ஞாயிறு இணைப்பு இதழ்களில்  கலை, இலக்கியம், நூல் அறிமுகம் என்றெல்லாம் விரிவடைந்தது. குறுக்கெழுத்துப் போட்டியில் கிறங்கி அதிலேயே ஆழ்ந்து இருந்த ஒரு காலம் இருந்தது, அதன் சுவையைத் தனியே விவாதிக்க வேண்டும். 
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் எண்பதுகளில் வாசித்த ஒரு கவிதை தொகுப்பு அறிமுகமும், பின்னர் படித்த சிறுகதையும் இப்போதும் நினைவில் நிற்கிறது. முதலில் சிறுகதை. நேர்முகத் தேர்வு (இன்டர்வியூ) என்பது அந்தக் கதையின் பெயர். எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எட்டு பத்திகளில் அரை பக்கத்திற்கு வெளியாகி இருந்த கதை அது. யார் எழுதியது என்பது நினைவில் இல்லை. மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறுப்பில் இருக்கும் நிர்வாக அதிகாரியின் நேர்முக உதவியாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு அது. ஓர் இளம் பெண் முதல் கட்டத் தேர்வுகள் முடித்து, அந்த நேர்காணல் இடத்திற்கு வந்திருக்கிறார். 
நேர்முகத் தேர்வு செய்பவர், அந்த இளம் பெண்ணின் திறமைகள் சோதித்தறியக் கேட்கும் வினாக்களுக்கு சிறப்பான பதில்கள் கிடைக்கிறது. அவர் தமது மன நிறைவைத் தெரிவித்துப் பாராட்டுகிறார். அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியில் திளைக்கிறார். ஊதியம் எவ்வளவு, மாதத்தில் வேறென்ன படிகள், சலுகைகள் என்றெல்லாம் தேர்வாளர் விளக்கிச் சொல்கிறார். அப்புறம், “இந்த வேலைக்கான ஆற்றல், வேகம், முனைப்பு எல்லாம் உங்களிடம் இருக்கின்றன. கொஞ்சம் பக்குவமும், விவேகமும், புரிந்து நடந்து கொள்ளும் திறனும் உங்களுக்கு இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்று சொல்கிறார். 
அந்த இளம் பெண், “விளக்கமாகச் சொல்ல முடியுமா, புரியவில்லை” என்று கேட்கிறார். 
நிறுவனத்தின் அந்த அதிகாரி, தன்னை நிலையாக அமர்த்திக் கொண்டு, குரலை இலேசாகக் கனைத்துக் கொண்டு, “நீங்கள் இந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரிக்கு நேர்முக உதவியாளராகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள். உங்களுக்கே தெரிந்திருக்கும், இந்தத் தொழிலில் போட்டியாளர்கள் யார் யார் என்று…எனவே  சந்தையில் எந்த இடர்ப்பாடும் இன்றி வர்த்தகத்தைக் கையகப்படுத்தி, வாடிக்கையாளரையும் இழந்து விடாது நிறுவனத்தின் இடத்தைத் தக்க வைப்பது குறித்த பெருங்கவலையில் 24 மணி நேரமும் மண்டை உடைத்துக் கொண்டு  சிந்தனையிலும் செயலிலும் இருப்பார் அவர். அந்த அழுத்தம் அவரது உடலை பாதிக்குமானால், நிறுவனம் பெரிய சேதத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.” என்று நிறுத்துகிறார். 
“சரி, இதில் நான் என்ன செய்ய?” என்று விளங்காது கேட்கிறாள் அந்தப் பெண்.
“சொல்கிறேன்…சொல்கிறேன்… உங்களுக்கு இதில் நிறுவனத்திற்கு விசுவாசமான ஓர் ஆக்கபூர்வமான பொறுப்பு இருக்கிறது. அதில் தான் உங்களது முழு அர்ப்பணிப்பும் தேவைப்படும்” என்று மீண்டும் ஒரு சிறு மௌனத்தில் ஆழ்கிறார், அப்புறம் தொடர்கிறார்,”அந்த மாதிரி நெருக்கடியான தருணங்கள் நம் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிக்கு நிறைய நேரக்கூடும். அதை அவர் தணித்துக் கொண்டு, மன அழுத்தங்கள் எதிர்கொண்டு நிறுவனத்தின் நலன் யோசிக்க வேண்டும். அதற்காக அவரும் நீங்களும் மட்டுமே தனித்திருக்கும் அவர் அறையில் கொஞ்சம் அந்தரங்கமாக அவர் நடந்து கொள்ள முற்பட்டாலும், புரிந்து கொண்டு உரிய விதத்தில் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று முடிக்கிறார். 
கொதித்து எழுகிறாள் அந்த இளம் பெண்.  “உங்களுக்குத் தேவை ஒரு விலைமாது என்று நீங்கள் நேரடியாகவே விளம்பரம் கொடுத்திருக்கலாமே, அதைச் சொல்வதற்கு இத்தனை பீடிகைகள் எதற்கு?” என்று சாட்டையடியாக அடிக்கிறாள்.
எழுத்தின் வேகம், தாக்கம், விளைவுகள், எதிர்வினைகள் குறித்த சிந்தனை வரும்போதெல்லாம் இந்தச் சிறுகதை நினைவுக்கு வரும். ஒழுக்கம் குறித்து கீழ்நிலைப் பணியாளர்களுக்கு மணிக்கணக்கில் பாடம் நடத்தி அற்பப் பிழைகளுக்கெல்லாம் அநியாயத்திற்குத் தண்டனையும் விதிக்கும் நிர்வாகத்தின் மேல் மட்ட ஒழுக்க நடைமுறைகள் எத்தனை அராஜகமாகவும் அருவருக்கத் தக்கதாகவும் இருக்கும் என்பதைப் பேசும் சிறுகதை இது. வாசித்து முடித்தபின்னும் சிந்தனைகள் கிளர்த்தும் எழுத்துகள் முக்கியமானவை. ண்பதுகளில், ஆங்கில நாளேட்டில் நூல் அறிமுக பக்கத்தில் வாசித்த ஒரு கவிதை எழுப்பிய கனல் மறக்க முடியாதது.  தீமா புக்ஸ் ஆஃப் நக்சலைட் பொயட்ரி என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். அகில இந்திய அளவில் நக்சலைட் படைப்பாளிகள் அவரவர் மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு புத்தகம் அது. எடுத்துக் காட்டுக்கு சில கவிதை வரிகள் வந்திருந்தன.  எல்லாம் நினைவில்லை என்றாலும், சில வரிகள் பொதிந்திருக்கின்றன. 
இப்போது தேடினால், சட்டென்று இணையத்தில் அந்தப் புத்தகம் அடுத்த பதிப்புகள் வந்திருப்பது காணக் கிடைக்கிறது.  என் நினைவில் தெறித்துக் கொண்டிருக்கும் அந்தக் கவிதையும் முழுதாகச் சட்டென்று தட்டுப்பட்டது சிலிர்ப்புற வைத்தது. சிறையில் இருந்து வரையப்பட்ட கவிதைகளில் ஒன்றான அதை எழுதியவர் செரபண்டராஜூ. தெலுங்கு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழங்கப்பட்டிருக்கும் அந்தக் கவிதையின் தொடக்க வரிகளை எளிய தமிழில் இப்படி எழுதிப் பார்க்கலாம்:நான் குழந்தைகளை முத்தமிடும் போது அவர்களது கன்னத்து ஈரத்தை இவர்கள் கத்தியால் சுரண்டி எடுக்கப் பார்க்கின்றனர்…
இந்த முதல் வரி எப்போது நினைத்துக் கொண்டாலும் அதிர்ச்சியடைய வைக்கும். அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தக் கவிதை எப்படி முடிகிறது எனில், கைதி தான் நான் ஆனால், அடிமை அல்ல கடல் அலையைப் போலவே
அடிவாங்கியும் உடைந்தும் நொறுங்கியும் போனாலும் நானும் மீண்டும் மீண்டும் பிறந்து வருவேன்.
செரபண்டராஜூ அவர்களது வேறு சில கவிதைகள் அருமையான தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்ததுண்டு, அதுவும் எண்பதுகளில் வாசித்தது தான். இந்தியக் கவிஞர்கள் சிலரது மிகச் சிறந்த கவிதைகளைத் தமிழில் கொண்டு வந்திருந்தவர் ஓர் இலக்கிய விமர்சகர் மட்டுமல்ல, ஓவியர், எழுத்தாளர்! அந்தப் படைப்பாளியோடு  அறிமுகம் வாய்த்தது மிகவும் சுவாரசியமான அனுபவம். பின்னர் விரிவாகப் பேச வேண்டியது.  நாளிதழ்களில் கலை, இலக்கியம் பேசும் பக்கங்கள் எப்போதும் தவிர்க்க முடியாதவை. மறைந்த மூத்த பத்திரிகையாளர் யெஸ் வீ என்று அறியப்பட்ட எஸ் விசுவநாதன் அவர்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் பணியாற்றுகையில், தமிழ் இலக்கியம், இசை குறித்தான எழுத்துகள் அதில் முக்கிய இடம் பெறத் தொடங்கின என்று அவர் மறைவின் போது செலுத்தப்பட்ட புகழஞ்சலி குறிப்புகளில் இடம் பெற்றிருந்தது.  
செய்தித் தாள்களில் என்ன இருக்கிறது எனில், என்னென்னவோ இருக்கிறது. எவ்வளவோ இருக்கிறது. இழக்கக் கூடாத பல முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. வாசிப்பு தான் எத்தனை முக்கியமானது.
(தொடரும் ரசனை)கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com அலைபேசி எண்: 9445259691

News

Read Previous

இராமநாதபுரத்தில் போலீஸ் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
நவாஸ் கனி எம்.பி. பங்கேற்பு

Read Next

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் சார்பில் முப்பெரும் விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *