மாமனிதர் ஜவஹர்லால் நேரு

Vinkmag ad

மாமனிதர் ஜவஹர்லால் நேரு.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை சீர்படுத்தும் போது சில நேரங்களில் கோபத்துடன், ஏன் சோம்பேறியாக இருக்கிறாய்? இன்னும் கடுமையாக நீ வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் நீ உருப்பட மாட்டாய்… என்றெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்வதுண்டு. பின்நாட்களில் வளர்ந்த குழந்தைகள் பெற்றோர்களை அந்த வார்த்தைகள் பேசினார்கள் என்பதற்காக கடிந்து கொள்வதில்லை. பெரும்பாலான குழந்தைகள் அதனை மறந்து விடுவார்கள்.

தான் பெற்ற பிள்ளைகள் மிகச் சரியாக வர வேண்டும். முன்னேற வேண்டும். என்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தைகள் அது. அப்படித்தான் ஜவஹர்லால் நேரு இந்திய மக்களை தான் பெற்ற பிள்ளைகளாகவே மதித்தார். குழந்தைகளை நேசித்தார். நேரு மாமா என்று பெயர் பெற்றார்.

நேரு மறைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களை நேரு சோம்பேறிகள் என்று சொன்னார் என ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு பேசுகிறார். பொதுவாக இறந்து போனவர்களை பற்றி சாதாரண மக்கள் கூட குறைகள் சொல்லி பேச மாட்டார்கள். அப்படி பேசினால் இறந்து போனவரைப் பற்றி ஏன் பேசுகிறாய்? என்று அருகில் இருப்பவரே கண்டிப்பது உண்டு.
அந்தப் பண்பாடுகள் எல்லாம் இப்போது காற்றில் பறக்க விடப்படுகிறது.

நேரு எந்த அளவுக்கு இந்திய மக்களை நேசித்தார் என்பதை அவரின் இறுதிக் கால உயில் ஒன்று சாட்சியாக… இன்றைக்கும் ஆவணமாக திகழ்கிறது.

“இந்திய மக்களிடமிருந்து அளவிலா அன்பையும் மதிப்பையும் நான் பெற்று இருக்கிறேன். அதில் ஒரு சிறு பங்கினைக் கூட என்னால் திருப்பித் தர இயலாது. அன்புக்கு ஏது கைமாறு?”
என்று தன் உயிலில் எழுதி வைத்த நேரு… தன் இறுதி ஆசையை இப்படி எழுதுகிறார்

“நான் இறந்த பின் என் உடலை எரித்து விட வேண்டும். அயல்நாட்டில் நான் இறந்தால் அங்கேயே என் உடலை எரித்து சாம்பலை மட்டும் அலகாபாத்திற்கு கொண்டு வந்து, ஒரு பிடி சாம்பலை கங்கையில் கரைக்க வேண்டும். சாம்பலின் பெரும் பகுதியை இந்திய வயல்களில், மலைமுகடுகளில் தூவ வேண்டும். மனிதன் உள்ளிட்ட எல்லா உயிரினங்களையும் எந்த பேதமும் இல்லாமல் அனைத்தையும் சுமந்து காலம் தோறும் பயணிக்கும் கங்கையின் சமத்துவ அழகை நான் ரசிக்கிறேன்… அதனால் நான் அவளிடமும் கரைய விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்!!

நேருவின் சாம்பல் அவர் விருப்பப்படியே கங்கையில் கரைக்கப்பட்டது. மலைகளின் மேல் தூவப்பட்டது. வயல்வெளிகளில் வீசப்பட்டது. நதியும் மலையும் மண்ணும் நேற்று இருந்தன.இன்றும் இருக்கின்றன. நாளையும் இருக்கும். நேரு என்கிற ஜனநாயகவாதியின் புகழ் காலத்தால் ஒரு போதும் அழியாது.

1916 ல் தன்னுடைய 26 ஆவது வயதில் 16 வயது கொண்ட கமலாவை கரம் பிடிக்கிறார். நேரு.
நேரு தன் மனைவி கமலாவுடன் வாழ்ந்த நாட்களை விட சிறைச்சாலைக்குள் வசித்த துயர நாட்களே அதிகம்.

1921 முதல் 1945 வரையில் 9 ஆண்டுகள் அதாவது 3276 நாட்கள் நேரு சிறைச்சாலையில் அடைபட்டுக் கிடந்தார்.
1936 இல் நோய்வாய்ப்பட்டு காலமாகிறார் கமலா நேரு. மனைவியின் இழப்பை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார். உறுதிமிக்க நேருவை நிலைகுலையச் செய்தது தன் மனைவியின் மரணம்.

என் வாழ்வில் வசந்தமாக வந்தவள் என் மனைவி. அவளால் என் வாழ்க்கை எத்தனையோ வகைகளில் செம்மைப்பட்டது.

என் மனம் துயரில் துடித்த போதெல்லாம் அவள் ஆதரவாக இருந்திருக்கிறார். ஆறுதல் தந்திருக்கிறார்.ஆனால் நான் அவளுடன் சரியாகக் கூட பேசியதில்லை. அதற்கான நேரம் காலம் எதுவும் இருந்ததில்லை… என்று ஒரு கடிதத்தில் வருந்தி எழுதி இருந்தார். பின்நாட்களில் நேரு எழுதிய சுயசரிதையினை தன் மனைவி கமலாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்தவர் நேரு. அவர் காலத்தில் அஜித் பவார்கள் உருவாகவில்லை. எதிர்க்கட்சிகள் உடையவில்லை. மக்கள் வாக்களித்த தீர்ப்புக்கு மாறாக குறைந்த எண்ணிக்கை கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சியின் தலைவர்கள் முதல்வரானது இல்லை .
சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படவில்லை.

கேரள மக்களால் தேர்வு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை கலைத்தார் என்கிற கரும்புள்ளி நேருவுக்கு இருந்தது.

ஆனாலும் …

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

என்கிற வள்ளுவரின் வாய்மொழிக் கேற்ப குறைகள் இருந்தாலும் நேருவிடம் நிறைகளே அதிகம் காணப்பட்டன.

அதைவிட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு செவிமடுத்து பதில் வழங்கிய மாபெரும் ஜனநாயகவாதி நேரு எனச் சொல்லலாம்.

சொல்லின் செல்வர் என பெயர் பெற்ற சம்பத் அவர்கள் நாடாளுமன்றத்தில் மொழி குறித்து பேசுகிறபோது இந்தியும் ,ஆங்கிலமும் தெரிந்தால்தான் நாடாளுமன்றத்தில் நாம் பேச முடியுமா? என்று தமிழில் தன்னுடைய விவாதத்தை தொடங்குகிறார் .குறைந்தபட்சம் மொழியாக்கம் செய்கிற கருவினை பயன்படுத்தி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்கக் கூடவா எங்களுக்கு உரிமை இல்லை என கேட்டார் சம்பத் .

அவையில் இருந்த நேரு குறுக்கிட்டு… நீங்கள் அருமையாக ஆங்கிலத்தில் பேசுவீர்கள் என்பதை நான் அறிவேன். ஏன் இப்போது தமிழில் பேசி எனக்கு புரியாததை இங்கு பதிவு செய்கிறீர்கள் எனக் கேட்டார் அதற்கு சம்பத் எனக்கு ஆங்கிலம் தெரியும்.

இந்தியில் அமைச்சர் பெருமக்கள் பேசுகிறபோது நீங்கள் எப்படி தமிழ் தெரியாமல் தடுமாறுகிறீர்களோ அதுபோலத்தான் நானும் இந்தியில் பேச்சை கேட்கிறபோது தடுமாறுகிறேன். இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதற்காகத்தான் தமிழில் பேசினேன் என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

நிலைமையினை உணர்ந்த நேரு உடனடியாக மொழியாக்கம் செய்கின்ற கருவிகளை ஏற்பாடு செய்தார் என்பதும் வரலாறாகும்.

நேருவின் காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிரில் இருந்து அரசியல் செய்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் விவாதத்திற்கு எந்த வேலையாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் வந்து அமர்ந்து கேட்டு பதில் சொல்வார்.

பல நேரங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனியாக சந்தித்து அரசின் திட்டம் குறித்தும் அதனை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசித் தீர்வு காண்பார். அப்படி உருவானது தான் நாட்டின் நவரத்தினா என்று பெயர் பெற்ற பொதுத்துறைகள். இன்று சந்திராயன் 2 விண்ணில் பறப்பதற்கு அடிக் கற்களாக இருந்தது நேருவின் நிர்வாகம் தான்.

வறுமையோடு போராடும் ஒரு நாடு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கலாமா? என்று கேட்டவர்கள் மத்தியில் அதுதான் எதிர்காலத்தில் நமக்கு, இந்தியாவுக்கு புகழை கொடுக்கும் அறிவியல் துறையில் முன்னேற்றம் ஏற்படும் என்று தொலைநோக்கு பார்வையோடு ராக்கெட் ஏவுதலங்களை அமைத்தவர்.

தன் கட்சியை விட வாக்களிக்கும் ஜனநாயக உரிமை வலிமையானது எனக் கருதியவர்.

இந்தியாவின் முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சட்டப்பேரவை தேர்தல்களுடன் நடைபெறுகிறது.

அன்றைக்கு பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு இந்தியா முழுவதிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியினுடைய வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார்.

இன்றைய மத்திய பிரதேச மாநிலம் அன்றைக்கு விந்தியப் பிரதேசம் என்று அழைக்கப்பட்டது.
அங்கு ரேவா என்கிற சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ராவ்சிவ் பகதூரை ஆதரித்துப் பேரணியும் பேரணியில் நிறைவில் நேரு பேச இருப்பதாக பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை நேர பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்த நேருவை விடுதலைப் போராட்டத்தில் நேருவுடன் சிறையில் இருந்த அந்தப் பகுதியின் தியாகி ஒருவர் சந்திக்கிறார்.

நேரு மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று உரையாடத் தொடங்குகிறார். இரண்டொரு நிமிட உரையாடலுக்கு பின்… நீங்கள் இப்போது ஆதரித்துப் பேச வந்திருக்கின்ற வேட்பாளரை பற்றிய விவரம் உங்களுக்கு தெரியுமா ?என்று கேட்கிறார் அந்தத் தியாகி…

மௌனமாக கூரிய விழிகளுடன் தியாகியை உற்று நோக்குகிறார் நேரு. தொடர்ந்து தியாகி பேசுகிறார்…

ராவ்சிவ் பகதூர் அதிகார துஷ்பிரேகம் தொடர்ந்து செய்து வருகிறார் என்றும்… கடந்த ஐந்தாண்டுகளில் அமைச்சராக இருந்து பண்னா வைரச் சுரங்க நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டவர்.

அதற்காக 25 ஆயிரம் ரூபாய் அந்த நிறுவனத்தில் இருந்து லஞ்சமும் வாங்கி இருக்கிறார். மேலும் பல பல்வேறு குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இவரைத்தான் ரேவா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவருக்கு வாக்கு சேகரிக்க நீங்கள் பேச வருவது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது என்கிறார் தியாகி .நேருவின் மௌனம் தொடர்கிறது.

சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த நேரு தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுருங்கி விட்டாரோ என்கிற கவலையுடன் அந்தத் தியாகி நேருவிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல் மௌனமாக வெளியேறி விடுகிறார்.

அன்று மாலை பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார் நேரு. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்திற்கு முன்பு நின்று பேச ஆரம்பிக்கிறார். “எனக்கு காங்கிரஸ் கட்சி முக்கியம். அதைவிட ஜனநாயகம் தான் பொதுவானது. உயர்வானதும் கூட .நான் சார்ந்த காங்கிரஸ் கட்சியா அல்லது ஜனநாயகமா என்றால் ஜனநாயகம் தான் முதலில் வேண்டும் என்பேன்.”

என்று பேசிக்கொண்டே வேட்பாளராக மேடையில் அமர்ந்திருந்த ராவ் பகதூர் பக்கமாக திரும்பி…

“இந்த வேட்பாளரை ரேவா மாவட்ட காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்துள்ளது.
அதன் அடிப்படையில் நான் இவரை ஆதரித்துப் பேச வந்துள்ளேன்.
ஆனால் சற்று முன் ஒரு நண்பர் வந்து என்னை சந்தித்தார். இந்த வேட்பாளர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் லஞ்ச வழக்கு மற்றும் அதிகார அத்துமீறல் தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

இந்த மேடை முன் வீற்றிருக்கின்ற பொது மக்களே இப்போது நான் தெளிவாகச் சொல்கிறேன்.

நீங்கள் வாக்களிக்கும் போது வேட்பாளர் குற்றப் பின்னணி உடையவரா, பதுக்கல் பேர்வலியா ,அல்லது சுயநலத்திற்காக பதவியை தவறான முறையில் பயன்படுத்தியவரா,அடித்தட்டு மக்கள் மீது அடக்குமுறை செய்தவரா என்பதெல்லாம் பார்த்து வாக்களிக்கப் பழகுங்கள்.

அப்படி செயல்பட்டால் தான் ஜனநாயகம் வலிமை பெறும். இதோ இந்த மேடையில் உள்ள வேட்பாளர் நான் சொன்ன எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளார். எனவே இந்த ராவ்சிவ் பகதூரை நீங்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அப்படி வாக்களித்தால் அது ஜனநாயகத்திற்கு செய்கிற துரோகமாகும்.

இந்த வேட்பாளரை நேருவின் பிரதிநிதியாக நினைத்தோ அல்லது காங்கிரஸ் கட்சியின் மேல் உள்ள அபிமானத்தின் அடிப்படையிலோ நீங்கள் வாக்களித்தால் அது ஜனநாயகத்திற்கு செய்கிற துரோகமாகும். எனவே இவரை தோற்கடிப்பது தான் ஜனநாயக வெற்றியாக அமையும் .என்று கோபம் கொப்பளிக்க கண் சிவக்க பேசுகிறார் நேரு .

தன் கட்சியின் வேட்பாளர் சரியில்லை என்பதை உணர்ந்த உடனே நேரு எடுத்த முடிவு இது. செல்வாக்கு மிகுந்த அந்த குறுநில மன்னரான ராவ் சிவ் பகதூர் அந்தத் தேர்தலில் டெபாசிட் இழந்தார் என்பதும் வரலாறு.

உயர்ந்து நிற்கிற கோபுரத்தின் மீது சில நேரங்களில் காற்றின் வேகத்தால் தூசுகள் குப்பைகள் படிவதுண்டு. ஆனால் அந்த குப்பைகள் நிரந்தரமாக கோபுரத்தில் நின்று விடாது காற்றின் வேகம் குறைந்த உடன் படிந்த தூசுகளும் குப்பைகளும் காணாமல் போகும் இது இயற்கையின் நியதி.

நேரு மீது என்னதான் விமர்சனம் வைத்தாலும
அவரின் தியாகம் செரிந்த வாழ்க்கை வரலாறு… அவர் கட்டிக் காத்த நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள் காலத்தால் ஒருபோதும் அழியாது.

நீ சு பெருமாள்
பரமக்குடி.
nsperumalcpi@gmail.com

News

Read Previous

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா

Read Next

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published.