புனித ஹஜ்

Vinkmag ad

புனித ஹஜ்

வீடியோ காலில் மனைவியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை காமிலுக்கு. இவனைப் பார்த்ததும் மனைவி ஹவ்வாம்மா அதிகமாக அழத் தொடங்கிவிட்டாள். அழாதே ஹவ்வாம்மா, எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும் இப்படி நடந்துவிட்டது. நீ கவலைப்படாம இரு. என்று ஆறுதல் கூறினான்.

ஒருதடவைன்னா சரி, மறுபடியும் உண்டான குழந்தை கலைஞ்சிருச்சே?
இனிமேல் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?
என்று அழுகையினூடே பேசிமுடித்த மனைவியிடம், என்ன செய்வது, ரெண்டு மாசம் உன்கூடத்தான் இருந்தேன். அப்போல்லாம் கரு நல்லா இருக்குனுதான் டாக்டர் சொன்னாங்க. லீவ் முடிஞ்சு துபாய் வந்து பத்து நாள்தான் ஆகுது. இந்த சேதிய நான் எதிர்பார்க்கல. நீ தைரியமா இரு. இறைவன் நாட்டமிருந்தா நமக்கு குழந்த பிறக்கும்.

இதைக்கேட்க தெம்பில்லாத ஹவ்வாம்மா தலையணையில் சாய்ந்துவிட்டாள். உடனே பக்கத்திலிருந்த காமிலின் அம்மா போனை வாங்கிப் பேசினார். “காமில், நாங்க ஹவ்வாம்மாவ பாத்துக்கறோம், டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க. எனக்கென்னவோ குழந்தை பிறக்கும்வரை நீ அவகூட இருக்கறதுதான் நல்லதுனு தோணுது. அதனால ஒருமாசம் கழிச்சு பேமிலி விசா எடுத்து ஹவ்வாம்மாவ உன்கூடவே வச்சுக்க.” என்ற அம்மாவிடம், “ நானும் அதுதான் நல்லதுனு நினக்கிறேன்மா. விசாவுக்கு ஏற்பாடு செய்றேன், நீங்க அவள பத்திரமா பார்த்துக்கங்க” என்றான் காமில்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. ஹவ்வாம்மாவை துபாய்க்கு அழைத்துக் கொண்டான் காமில். கல்யாணமாகி எட்டு வருஷமா குழந்தையில்லை. உண்டான இரண்டு குழந்தைகளும் அபார்ஷனாகிவிட்டது. இறைவா… எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வதற்காகவாவது குழந்தை பாக்கியத்தைக் கொடு என்ற வேண்டுதல்களே அதிகமாக இருந்தது இருவருக்கும். துபாய்வந்து ஒருவருடமாகியும் பிள்ளை உண்டாகவில்லை ஹவ்வாம்மாவின் வயிற்றில். ஆனால் உறக்கத்தின் போதெல்லாம் ரெண்டு குழந்தைகள் அவளை “அம்மா, அம்மா” என்று கூப்பிடுவதுபோல் இருக்கும். உறக்கம் தொலைந்து அழுகையில் பகல்விடிந்துவிடும் அவளுக்கு. மனைவியின் ஏக்கம் காமிலுக்கு மிகுந்த வருத்தம் கொடுத்தது.

ஒருநாள் நண்பன் உசேன் போனில் பேசும்போது “ஹஜ்ஜு மாசம் வருதுடா காமில். ரெண்டுபேரும் ஒருதடவை ஹஜ்ஜுக்குப் போய்ட்டு வாங்களேன். இறைவனின் இல்லத்தில் முறையிடுங்கள். நிச்சயம் குழந்தை பிறக்கும்” என்றான். ஹவ்வாம்மாவிடம் விவரத்தைச் சொன்னான் காமில். “இன்னும் இரண்டு மாசம் இருக்குது. ஹஜ்க்குப் போய்ட்டு வருவோம். எத்தனையோ டாக்டரிடம் காண்பிச்சிட்டோம், எல்லாத்துக்கும் மேலே பெரிய டாக்டர் இறைவன், அங்கே போய்ட்டு வருவோம்.” என்றாள் ஹவ்வாம்மா.

ஹஜ் செல்வதற்கான ஏற்பாட்டில் இருவரும் முனைப்பாக ஈடுபட்டார்கள். “இன்னும் ஒருவாரம் இருக்கு ஹவ்வாம்மா, ஏன் இப்படி சோர்ந்து உட்காந்துக்கறே? என்னாச்சு உனக்கு?” என்ற காமிலிடம் “என்னவோ போல இருக்கு, தலசுத்துது, கண்ண இருட்டுது, மயக்கமா வருது” என்றாள் ஹவ்வாம்மா. ஒழுங்கா சாப்பிட்டாதானே, எப்போப்பாத்தாலும் தூங்காம குழந்தங்க கூப்பிட்றாங்கனு ஒழுங்கான தூக்கமுமில்ல. சரி வா பக்கத்தில டாக்டர பார்த்துட்டு வந்துருவோம்” என்று அழைத்துச் சென்றான் காமில்.

பரிசோதித்த டாக்டர் சொன்ன வார்த்தைகள் இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “உங்க வொய்ஃப் கன்சீவ் ஆகியிருக்காங்க. ரொம்ப கேர்ஃபுல்லாப் பார்த்துக்கணும். இந்த மருந்துகளத் தொடர்ந்து எடுத்துக்கணும்” என்று டாக்டர் எழுதிய மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். யா அல்லாஹ், என்ன இது சோதனை? அடுத்தவாரம் ஹஜ் செய்யணுமே? குழந்தையும் வேண்டுமே? என்று இருவரும் குழம்பிப் போனார்கள். தன் அம்மாவுக்கு போன் செய்தான் காமில். “நல்ல சேதிதான் காமில், அவ்வளவு தூரம் ரெஸ்ட்டில் இருந்தும் ரெண்டு குழந்தைகள் அபார்ஷனாகிடுச்சு. இந்த ஹஜ் கூட்டத்தில் எப்படி, வயித்தில குழந்தையோட கடமையை முடிக்கப் போறீங்க? ஏற்கனவே ஹவ்வாம்மா ரொம்ப வீக்கா இருக்காள்.நீயே பார்த்து நல்ல முடிவா எடுப்பா. “ என்ற அம்மாவிடம் “ சரிம்மா” என்று சொல்லி போனை வைத்தான்.

இரவெல்லாம் தூக்கமில்லை, ஹவ்வாம்மாவோ எந்த சோர்வுமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். காலையில் எழுந்தவுடன்,ஹவ்வாம்மா துணிகளை எடுத்துப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். “ என்ன செய்ற ஹவ்வாம்மா?” என்றவனிடம் “ரெடியாகிட்ருக்கேன், உங்க துணிகளையும் குடுங்க” என்றாள். இந்தமாதிரி நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கச் சொன்னாங்களே டாக்டர்? எப்படி இந்த வெயில்ல, நெருக்கடியான கூட்டத்தில ஹஜ் செய்யப் போறோம்? இன்ஷா அல்லாஹ், அடுத்த வருஷம் குழந்தையோட போய் ஹஜ் செய்வோமா? காசு போனா போய்ட்டுப் போகுது” என்ற காமிலை நிமிர்ந்து பார்த்தாள் ஹவ்வாம்மா. “ இந்த நாட்டுக்கு வந்து ஒருவருசமா குழந்த உண்டாகல, ஹஜ்க்குப் போறதுக்கு முடிவெடுத்து, எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு, பிளைட் டிக்கட் வரை வந்தபிறகு, குழந்த உண்டாகியிருக்குனா, இப்படிப்பட்ட சூழ்நிலைல நீ என் இல்லத்திற்கு வருகிறாயா? என்பது இறைவனின் சோதனை. என் குழந்தைக்கு அவனே பாதுகாப்பு. புறப்படுங்க” என்றாள்.

பெற்றவர்களும், உறவினர்களும், தோழிகளும் ஹவ்வாம்மாவை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். ஹஜ் செய்வதில் உறுதியாக இருந்தாள். “இரண்டு மாசம்தான் ஆகுதும்மா, அல்லாஹ் மன்னித்துக்கொள்வான். அடுத்த வருசம் போகலாமே “என்ற தாய்பேச்சைக்கூட கேட்கவில்லை ஹவ்வாம்மா. புதிய தெம்புடன் இருந்தாள். சௌதி அரேபியா சென்று முறைப்படி ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள் இருவரும். மனைவியை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் பொண்டான் காமில். சோர்வான நேரங்களிலெல்லாம் இறைவனைத் துதித்துக் கொண்டிருந்தாள். புது உத்வேகம் ஒன்று அவளுக்குள் உண்டாகும். சிறப்பாக ஹஜ் நிறைவேற்றி துபாய் வந்தடைந்தார்கள்.

எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பினாள் ஹவ்வாம்மா. இறைவன் எங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டான் என்று. மறுநாள் ஆஸ்பத்திரிக்கு செக்கப் செய்வதற்காக மனைவியை அழைத்துச் சென்றான் காமில். மீண்டும் டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். “குழந்தை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு. சாரி, சாரி குழந்தைகள். ஆமாம் உங்களுக்கு ரெட்டைக் குழந்தைகள் உருவாகியிருக்கு. ரெண்டு பேருமே நல்ல ஆரோக்கியமா இருக்காங்க” என்றதைக் கேட்டதும், இருவரும் ஆனந்த கண்ணீருக்கு ஆளானார்கள். இருவரின் கண்ணிலும் இறைவனின் இல்லம் தோன்றியது. “இரண்டு கருக்களோடு சென்ற எனக்கு எவ்வளவு பாதுகாப்புக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறாய் இறைவா…அதே பாதுகாப்போடு குழந்தைகளையும் நல்லபடியாகப் பெற்று வளர்க்கும் பாக்கியங்களையும் கொடு “என்று பிரார்த்தித்தாள்.

சஃபா, நபவீ என்ற பெண் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஹவ்வாம்மா. இப்பொழுதெல்லாம் ஹவ்வாம்மாவின் கனவில் இல்லை, உண்மையிலேயே இரண்டு குழந்தைகள் “அம்மா…அம்மா என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஃபாத்திமா ஹமீத்,
ஷார்ஜா.

News

Read Previous

கஃபா ஆலயம்

Read Next

தியாகம் என்பதே குர்பான்

Leave a Reply

Your email address will not be published.