பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்!- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

Vinkmag ad

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை
அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட
உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், எந்த நோக்கத்திற்காக அந்த வாரியம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான மிகச்சிறிய உதவிகள் இன்னும் ஒருவருக்குக் கூட வழங்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் குடும்ப நல நிதி, ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ரூ.12,000 மாத ஓய்வூதியம் உள்ளிட்ட பல உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து பத்திரிகையாளர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவி உள்ளிட்டவை வழங்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று கடந்த 2021&ஆம் ஆண்டு செப்டம்பர் 6&ஆம் நாள் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2022&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டதுடன், அதன் அலுவலகமும் கலைவாணர் அரங்கில் திறக்கப்பட்டது. நல வாரியத்தின் மூலம் பத்திரிகையாளர்களில் குடும்பத்தினருக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உள்ளிட்ட 6 வகையான உதவித்தொகைகள் ரூ.500 முதல் ரூ.6000 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், அறிவிப்பு வெளியாகி இரு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், எந்த நோக்கத்திற்காக பத்திரிகையாளர் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாரியம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டு, 20 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதைத் தவிர இதுவரை அந்த வாரியத்தின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கோ, அவர்களின் குடும்பங்களுக்கோ எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் கூட இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தித்துறை உயரதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் பல முறை முறையிட்டும் கூட பயனில்லை. ஒவ்வொரு முறையும் நலவாரிய உறுப்பினர்கள் முறையிடும் போதெல்லாம் நிதித்துறையின் அனுமதி கிடைக்கவில்லை என்ற பதில் தான் கிடைப்பதாக பத்திரிகையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களை இறுதி செய்வதற்கு கூட நிதித்துறை அனுமதி தேவை என்பது எந்த வகையான விதிமுறை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவித்தொகை மிகவும் குறைவாகும். கல்வி உதவித் தொகையாக ரூ.1000 முதல் ரூ.6000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பள்ளி இறுதி வகுப்புக்கான உதவித் தொகையை அந்த ஆண்டில் பெற முடியவில்லை என்றால், அடுத்த ஆண்டில் அதை பெற முடியாது. கிராமப்புறங்களில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் அல்லாத ஊடக நிறுவன பணியாளர்களுக்கு இந்த உதவித் தொகை பெரும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தொடங்கப்பட்டது முதல் இன்று வரை எந்த உதவித்தொகையும் வழங்காமல் பொம்மை அமைப்பாகவே வாரியம் நீடிப்பதால் பயன் இல்லை.

அனைத்து வகையான செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக 24 மணி நேரமும் பத்திரிகையாளர்கள் பணியாற்றுகின்றனர். அதனால், அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அண்மைக்காலங்களில் பல பத்திரிகையாளர்கள் இளம் வயதில் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நலவாரியம் மூலம் வழங்கப்படும் உதவிகளை உரிய காலத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் பொதுத்துறை நிறுவனத்தில் ரூ.1 கோடி வைப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டி நிதியைக் கொண்டு தான் நலவாரியம் மூலம் உதவிகள் வழங்கப்படுகிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல என்பதால், வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையின் மதிப்பை ரூ.10 கோடியாக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

News

Read Previous

தமிழ் நாடு

Read Next

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு…

Leave a Reply

Your email address will not be published.