சிறுகதை – நீர்த் தாரை

Vinkmag ad

நீர்த் தாரை..

      இருளின் பிடியிலிருந்து பகல் கொஞ்சம், கொஞ்சமாக நழுவத் தொடங்கியது. தவலைகளின் சப்தங்கள்  ஓய்த் தொடங்கின. நிசப்தம் விரவிக் காணப்பட்டது. வாகனக்  கண்ணாடியில் புகை போல் காணப்பட்டது பனியின் மிச்சம்.   இரவு முழுவதும் தாழ்ப்பாளில் சிக்கிக் கொண்ட இருக்  கதவுகளை விடுவித்து ஃபஜர் நேரத் தொழுகைக்கு வெளியேறினார் ஹபீப்.

தெரு முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது.. இரவு முழுவதும் மாடுகள் கடந்தச்  செய்தியைச் சாணம் சொன்னது. பள்ளிக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டார். பள்ளிவாசலுக்கு எதிரில் தேநீர்க்கடை வைத்திருக்கும் கணேசன் கடையைத் திறந்து சாமிப் படத்திற்கு மாலை போட்டு வணங்கிவிட்டு அடுப்பில் நெருப்பு வைத்தார். பாலை ஊற்றி நன்கு சூடேற்றினார். தொழுகை முடித்தவுடன் இங்கு ஒரு கூட்டம்  கூடுமென்பதால் அதற்கான தயாரிப்பில் இறங்கினார். இரவு முழுவதும் விழித்து இருந்ததால் கண் மூடியது கடைக்கு முன்பிருந்த தெரு விளக்கு.

தொழுகை முடிந்து ஒவ்வொருவராக வெளியேறினார்கள். வழக்கம் போல் கணேசன் தேநீர்க்கடையின்  முன்பு வைக்கப்பட்ட கட்டையால் செய்யப்பட்ட பெஞ்சைத்  தனது துண்டால் துடைத்து அமர்ந்தார் ஹபீப்.

“கனேஷா எப்படி இருக்கே?”…”ம்ம் ஆண்டவன் புண்ணியத்தில் நல்லா இருக்கேன் பாய்” என்றவாறு நுரை பொங்க தேநீர்  கொடுத்தான். அருகில் இருந்த நாளிதழைப்  படித்தவாரு தேநீரை  மெல்லப்  பருகினார் . கூட்டம் அதிகமானது. குடித்த தேநீர்  கிளாசுடன், சில்லறையைக் கணசேனிடம் கொடுத்தார். சூரியன் தன் கண்ணைக்  கொஞ்சம், கொஞ்சமாகத்  திறக்க தொடங்கியதால் …. வெளிச்சம் வெளிவரத் தொடங்கியது.

இதற்கிடையில், இவரின் நண்பரும் இணைந்து கொள்ள நடக்கத் தொடங்கினார்கள். காலைத் தென்றலின்  சொல்லுக்கேற்ப ஹபீபின் தாடி முடிகள்  அசைந்துக் கொடுத்தன. பால் வேன் ஒன்று சப்தமாக ஒலி எழுப்பிக் கொண்டு வேகமாகச்  செல்ல முயற்சிக்க, அதற்கு இருவரும் வழிக் கொடுத்து ஒதுங்கி நின்றனர்.

வழக்கமாக அமரும் இடத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க நண்பரின் வாட்சப் குழுமத்திற்கு துபையில் வேலை ஒன்று காலியாக இருக்கிறது என்ற குறுச் செய்தி வந்து விழுந்தது. அதுவே அன்றைய அவர்களின் பேசும் தலைப்பாக மாறிப்போனது.

தான் துபையில் 30 வருடம் பணி செய்தாகவும், அதில் சம்பாதித்த பணம்  வீட்டுச் செலவுக்குப் போக, வங்கியில் கொஞ்சம் சேமிப்பு இருக்கிறது. அதுப்போக, ஓய்வுபெறும் வயது வரும் போது அவரின் நிறுவனம் கொடுத்த சர்வீஸ் தொகையில் ஒரு இடம் வாங்கி விவசாயம் செய்வதாகவும் இதுதான் வெளிநாட்டின் முப்பது வருடச்  சேமிப்பு என்றும் ஹபீப் நினைவுக்களை  கூறிக் கொண்டிருந்தார். இடையில்  ஹபீபின் மனைவி அலைப்பேசியில்  அழைக்க. பேச்சை நிருத்தி விட்டு, மனைவியோடு  பேசலானார்.

“வரும் போது பால், பிஸ்கட் வாங்கி வரக் கூறினாள்”.

 “ம்ம்.. சரி வருகிறேன்” என்று கூறி அமர்வை ரத்து செய்துவிட்டு கடைக்குச் சென்று மனைவி கூறியதை வாங்கிக் கொண்டு சென்றார்.

வீட்டிற்குள் நுழையும் போது, ஹபீபின் மகன் மக்தப் செல்ல தயாராக நின்றான். வாங்கி வந்த பொருளை மனைவியிடம் கொடுத்துவிட்டு. சுவரில் அடிக்கப்பட்ட அணியில் சட்டையைத் தொங்கவிட்டார்.

ஹபீபின் மகள் தேநீர்  எடுத்துக் கொண்டு கொடுக்க பாதியில் விட்ட செய்திகலைச்  சோஃபாவில் கிடந்த நாளிதலில் படிக்கத் தொடங்கினார்.

தூரத்தில் ஒரு பூனை ஒன்று இரையைத் வேட்டையாட நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்த அந்தக் காட்சி யதார்த்தமாக இவர் கண்ணில் பட, நாழிதழை  மேசையில் பரப்பி விட்டு பூனையின் பக்கம் அவர் கவனத்தைச்  செலுத்தினார்.  வேட்டையாடப்  பூனை எடுக்கும் வியூகத்தை  உற்று நோக்கினார் ஹபீப். நான்கு கால்களையும் மெதுவாக எடுத்து வைத்து  இரையின் பக்கம் சென்று கவ்விப் பிடித்தது. சிக்கிய இரை கன நேரத்தில் பறந்து சென்றது. இறகுகள் மட்டுமே மிதமாக அதன் வாயில் ஓட்டிக் கொண்டிருந்தன.

நீண்ட நேரம் முயன்று  வாயில் ஒட்டிய இறகுகளுடன் பூனை செல்வதைக்  கவனித்துக் கொண்டிருந்தார். “அத்தா பசியார ரெடியாகிடுச்சி. சாப்பிட அம்மா கூப்பிடுராங்கன்னு” ஹபீபின்  மகள் அஸ்மா அழைத்தாள்.

“ம்ம்.. வரேன்” என்று எழுந்துச் சென்றார். சாப்பிட்டு முடித்து எழுந்து  அருகிலிருந்த கட்டையால் செய்யப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். 

அலைப்பேசி கதறியது, மனைவியை எடுத்துப்  பேசக் கூறினார். இருபது நிமிடம் உறையாடலுக்குப் பிறகு… “ஆசிபா மச்சித்தான் பேசினாங்க ” . ”என்னவாம்”? “அவங்களுக்கு தெரிஞ்சவங்க நம்ம அஸ்மாவை பொண்ணு கேட்கறாங்கலாம்”. “பையன் என்ன செய்றாராம்? கட வச்சி இருக்கிறாராம்”

மகள் திருமணம்  பற்றிப்  பேசிக்  கொண்டிருக்கும் போது சற்று  அமைதியானார். அமைதிக்குக்  காரணம் தெரித்துக் கொண்டு. “பணத்திற்கு பார்க்க வேண்டாம்.  நம்ம பொண்ணு வயசில் உள்ள புள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிடுச்சி. அதான் என்று நிறுத்தினாள்”.

“சரி பையனைப்  பற்றி முழுசா விசாரிச்சிட்டு, அஸ்மா கிட்டயும் கேளு. அப்புறம்  ஒகே சொல்லாம்” ன்னு எழுந்து சென்றார். மாப்பிள்ளையின் தரவுகள் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டன. அஸ்மாவுக்கு மாப்பிள்ளைப்   பிடித்துப் போனதை அவள் நாணம் படம் பிடித்துக் காட்டியது.

இரு வீட்டாரின் மன ஒற்றுமைக்குப்  பிறகு நிச்சயதார்த்த நாள் குறிக்கப்பட்டு, நன்றாக நடந்தேறியது.

“முடிந்த வரை வங்கியில் இருக்கும் சேமிப்பை மட்டுமே வைத்து திருமணத்தை நடத்தனும். என்று கூறினார். “இல்லைங்க நம்ம சம்பந்தம் பண்ண போற இடம் பெரிய இடம் அதனாலே.”…… என்று இழுத்தாள். அப்படின்னா ? நம்ம பொண்ணு திருமணத்தை எந்த கொற இல்லாம நடத்தனும்”.

“சிக்கனமா நடப்படுறே திருமணம்தான் சிறந்தது! நமக்குப்  பையன் ஒருத்தன் இருக்கான். அவன் படிப்புக்குப்  பணம் தேவைப்படும் அந்த நேரத்தில் நம்ம வயலை விக்கலாம்”ன்னு. கோபமாகப்  பேசினார்…

“அக்கம், பக்கம் நம்மள பத்தி தப்பா பேசுவாங்க. நாம் என்னா ரெண்டு, மூனு பொண்ணா வச்சியிருக்கோம்? அந்த வயலை விக்க வழிய பாருங்க” என்று கூறி வீட்டு வேலையில் கவனம் செலுத்தினாள்.

எளிமையாக நடைபெற வேண்டிய திருமணம், வங்கி சேமிப்பு மற்றும் வயலை பகரமாக எடுத்துக் கொண்டு ஆடம்பரமாக நடைபெற்றது.

” ஆடம்பரமான திருமணத்தை விடக் கல்விக்குச் செலவு செய்வது  சிறந்தது” என்று எழுதப்பட்ட வாகனத்தில் மாமியார் வீட்டிற்கு மகள் செல்லும்போது கண்கள் ஈரமானது‌.

 ஆடம்பரமற்ற திருமணத்திலும், தரமான கல்வியிலும்  இச்சமூகத்தின் வெளிச்சம் இருக்கிறது. இதனை இச்சமூகம் எப்போது புரிந்துகொள்ளுமோ? அப்போதுத்தான் !  முன்னேற்றக் காற்றைச்  சுவாசிக்கும் என்று மனதுக்குள் பேசிக் கொண்டிருந்தார். விருந்துகளுக்கு செலவு செய்யும் செல்வங்களைக்  கல்விக்குச்  செலவு செய்யும் முறைகளை  நம் சமுகம் எப்போதும் கற்கப் போகிறது ? என்று மனதுக்குள் புலம்பித் தீர்த்தார்.

பல மணிநேரம் முயற்சித்து வேட்டையாடி மிஞ்சிய இறகுகளுடன் சென்ற  பூனை, அவருக்கு முன்னால் மற்றொரு இரையை வேட்டையாடிக் கொண்டிருந்தது.

சரியான கட்டமைப்பு கொண்ட இஸ்லாம் மார்க்கத்தைப்  பின்பற்றாமல், ஊர் பேச்சில் அகப்படக் கூடாதென்பதற்காக, கடல் நீரை உறிஞ்சும் மேகம் போல் ஆடம்பரமாக  செய்த திருமணம்    வெளிநாட்டின் 30 வருட உழைப்பை உறிஞ்சி விட்டது. அதன்  விளைவால் மறுபடியும் வேலைக்குச் சேர்ந்தார் ஹபீப்

A.H.யாசிர் அரபாத் ஹசனி லால்பேட்டை, 

       தொடர்புக்கு : 971-556258851            Mail id : Lptyasir@gmail.com

News

Read Previous

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்

Read Next

ஆதரவற்றோர் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *