கைலி ஒரு விடுதலை

Vinkmag ad

கைலி ஒரு விடுதலை
<<<<<<<<<<<<<<<
கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ்முஸ்லிம்கள்.

கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கௌரவமான கதர் வேட்டிக்கு சமமாய் ஆனது.

ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்கள்.

‘லூஜீ’ என்ற பர்மியச் சொற்களுக்கு சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள்.

‘லூஜீ’யே மருவி லுங்கி ஆனது.

சங்கு மார்க் லுங்கி நிறுவனம் முதலில் பர்மாவில்தான் தொடங்கப்பட்டது.

அங்கு கொப்பரை வியாபாரம் செய்துவந்த இப்றாகிம் என்பவரின் மகன் அபூபக்கர் அதைத் தொடங்கினார்.

இப்போதும் சங்கு மார்க் லுங்கி லேபிளில் பர்மி எழுத்துக்களும் இருக்கும்.

கம்பெனியின் பெயர் KE MD ABOOBACKER Co. அதில் KE என்பது கொப்பரை இப்றாகிம் என்பதின் சுருக்கம்.

கண்கா (Kanga) மற்றும் கைடெங்கி (Kitenge or chitenge) என்பது ஆப்ரிக்கர்கள் உபயோகிக்கும் ஒருவகை உடம்பை மறைக்கும் துணி. அது நாளடைவில் “கைலேஞ்சி” ஆனது.

இந்த கைலி இப்படி பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு தமிழ் முஸ்லிமிற்கு வெள்ளை நிறத்தில் கட்டினால் அது தேசிய உடை, மற்ற நிறங்களில் கட்டினால் அது வீட்டு ஆடை.

வெள்ளைக் கைலியைப் பள்ளி கல்லூரிகளிலும் கட்டும், பொது உடையாக கடற்கரை வாழ் தமிழ்முஸ்லிம் ஊர்களில் அங்கீகரித்துக்கொண்டனர்.

பெரும்பாலும் வயதான பெண்கள் (பாட்டிமார்கள்) பத்தை (batik) கைலியும் அதற்கேற்ற சின்னச் சின்னப் பூக்கள் நிறைந்த பருத்தித் தாவணியும்தான் அணிவார்கள்.

அந்த கைலி பல வண்ணங்களில் வெகு அழகாக இருக்கும்.

அவை மலேசியாவில் இருந்தும் இந்தோநேசியாவில் இருந்தும்தான் பெரும்பாலும் வரும்.

சிங்கப்பூரிலிருந்து ஊர்வரும் தமிழ்முஸ்லிம் ஒவ்வொருவரின் பெட்டியிலும் வெகு நிச்சயமாக பெண்கள் அணியும் இந்த வகை வண்ணக் கைலிகள் இருக்கும்.

எனக்கெல்லாம் வெள்ளைக்காரனின் பேண்ட் சட்டையோடு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், கவ்விப் பிடித்திருக்கும் அந்தக் கடைசிக் கவசத்தையும் கழற்றி எறிந்துவிட்டு கைலிக்குள் மாறினால்தான் மூச்சே வரும்.

சுதந்திரம் கிடைத்த நிறைவு நெஞ்சில் ஏறும்.

சிறுவயதில் குளத்தில் குளிக்கும்போது கைலியின் ஒர் முனையைக் காலுக்கிடையில் முடிச்சுப்போட்டுவிட்டு, காற்றை உள்நிரப்பி அந்தக் கப்பலில் உட்கார்ந்து ஒய்யாரமாய்ச் செல்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

பொது இடங்களில் குளிக்கச் செல்லும் தமிழ்முஸ்லிம் பெண்கள் கைலியை அப்படியே உயர்த்தி நெஞ்சுக்குமேல் கட்டிக்கொள்வார்கள்.

அத்தனைப் பாதுகாப்பாய் இருக்கும்.

கைலிகள் இருமுனையும் மூட்டப்பட்டிருப்பதால், காற்றின் திடீர்த் தாக்குதல்களும் லீலைகளும் கைலியிடம் செல்லுபடி ஆகாது.

பொது இடங்களில் ஆண்களும் ஆடைமாற்றுவதற்கு கைலியைப் போல் வசதியான ஆடை இன்னொன்றில்லை.

’சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க’ என்று ஒரு பாட்டு புகழ் பெற்றது. ஆனால் கைலி என்பது ஏற்கனவே கட்டப்பட்ட பாதுகாப்பான வீடு. அப்படியே உள்நுழைந்து வசிக்கவேண்டியதுதான்.

விருந்தினர்கள் வீடு வந்தால், தவறாமல் கேட்கும் ஓர் உபசாரக் கேள்வி கைலி கட்டிக்கொண்டு வசதியாக இருக்கிறீர்களா என்பதுதான்.

இப்படியாய், தமிழ்முஸ்லிம் வாழ்வில் பிரிக்கமுடியாத ஓர் ஆடை உண்டென்றால் அது கைலிதான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அன்புடன் உங்கள் காரைக்கால் நண்பன்.

News

Read Previous

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !

Read Next

பரபரப்பில் தலைமை செயலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *