கைம்மை பெண்கள் நாள்

Vinkmag ad

கைம்மை பெண்கள் நாள் 22-6-23
பூவையாய் இருந்தும் பூச்சூட முடியா
பொட்டிழந்த கட்டழகு காரிகை நாங்கள்

பிஞ்சாய் இருக்கையில் பிரிந்த கணவனை
நெஞ்சில் வைத்திருக்கும் நிசமான நிழல்கள்

குறிஞ்சிப் பாட்டும் குற்றாலக் குறவஞ்சியும்
குறிக்கும் மலர்களாய் நாங்கள் இருந்தாலும்

மலர்சூடா மங்கை மயிருள்ள சீமாட்டி
உலர்ந்த பூக்களா உற்சவத்திற்கு
உகந்த பூக்களா நீங்களே முடிவெடுங்கள்

வெள்ளை ரோசாவானாலும் நாங்கள் என்றும்
வெள்ளெருக்கும் பூவாக வெறுக்கப் படுகிறோம்

மணக்கும் மல்லிகைப் பூவானாலும் நாங்கள்
பிணத்தின் மேலே போடப்பட்டு வீணானோம்

சம்பரதாய சதியாலே சாக்கில் இடப்பட்ட
சந்தைக்கு வாராத சாமந்தி பூநாங்கள்

மாலை ஆனாலும் மஞ்சம் இல்லா
நாளை ஓட்டும் அந்திமல்லி நாங்கள்

பெற்றோர் இருந்தும் பேணப்படாது தவிக்கும்
கற்றாழை, கள்ளிப் பூக்கள் நாங்கள்

அரைநிலவு நெறியில் அறைத்த சந்தனத்தை
ஆசையால் வைக்க இயலா அல்லிப்பூக்கள்

குடும்ப நந்தவனத்தில் கூட்டத்தின் நடுவில்
விடுபட்ட மலரான ஊமத்தை நாங்கள்

தெய்வத்திற்கு உகந்ததாய் தேடி எடுத்தாலும்
தையலார் சூடாத அரளிப் பூக்கள்

அறியாப் பருவத்தில் அடைந்த நிகழ்வுக்காய்
புரியாது பூத்திருக்கும் பூசினிப் பூக்கள்

கண்ணுக்கு அழகாகக் காட்சி அளித்தாலும்
கணிகையரும் சூடாத காகிதப் பூக்கள்
வண்ண மலராக வலம்வந்த போதும்
வாடும் நாங்கள் வாடா மல்லிகையே

மஞ்சள் பத்திரிக்கை மாளாது படிப்பாரும்
நெஞ்சத்தில் குத்துகிற நெருஞ்சிப் பூக்கள்

சிவனுக்கு உவப்பென்று சிரசில் சூட்டினாலும்
நமக்கு ஆகுமென நாடாத மத்தங்கள்

கலியாணக் காட்சியிலே கதவிடுக்கில் மறைகின்ற
எல்லோரும் வெறுக்கின்ற எட்டிப் பூக்கள்

காமக் குளம்வற்றி கண்ணீர் வடிக்கின்ற
ஊமையாய் உள்புளுங்கும் உதிர்ந்த பூக்கள்

கவிதையும் கண்டுகொள்ளாக் கைம்பெண் நாங்கள்
புவியோர் விரும்பா அழுகிய மலர்கள்.

எங்களுக்கும் ஒருதினம் ஏக்கம் தவிர்த்தோம்.
உங்களைக் கைகூப்பி உண்மையாய் வணங்குகிறோம்.
இப்படிக்கு
காட்டுப் பூக்களாம் கைம்பெண்கள்
ஆக்கம் தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன்
தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993

News

Read Previous

தீபம் மாணவர் மாணவியர் விடுதி

Read Next

மூத்த பத்திரிகையாளர் ஏர்வாடி மீரா சாகிப் காலமானார்

Leave a Reply

Your email address will not be published.