ஒரு கௌரவ விரிவுரையாளரின் வேதனைப் பதிவு

Vinkmag ad

ஒரு கௌரவ விரிவுரையாளரின் வேதனைப் பதிவு

என் சம்பளம் சமூகநீதியா?
நான் தமிழக அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளன் நான் 20000 சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன், இப்ப 5000 உயர்வு அறிவித்து உள்ளது சமூக நீதி அரசு.

நான் வேலை பார்க்கும் இடத்தில் அரசின் நிரந்தர பேராசிரியர்கள் வேலை செய்கிறார்கள் அவர்கள் 100000 மேல் சம்பளம் வாங்குகிறார், அதை விட முக்கியமாக மாதத்தின் முதல் நாளே முழுமையாக பெற்றும் விடுகிறார்.

கல்வித் தகுதியில் அவரைப் போலவே நானும் முனைவர் பட்டம் பெற்று இருக்கிறேன். வேலையில் அவரை விட கூடுதலான பாட வேளைகள் கற்பிக்கிறேன், தவிர பல வகுப்புகளில் அவர் அமர்ந்து இருக்கும் போது நான் முழு பாட வேலையும் நின்றுக் கொண்டு தான் கற்பித்தல் பணியை செய்கிறேன்.

NAC போன்ற மத்திய மாநில அரசுகளின் கேள்விகளுக்கு ஏற்ப கோப்புகளை நான் தான் தயார் செய்கிறேன், கோப்பின் இறுதியில் நிரந்தர பேராசிரியர் கோப்பை தன் கையெழுத்து மூலம் தனதாக்கி கொள்கிறார்.

மாணவர்கள் சேர்க்கையின் போது விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு நான் என் தொலை பேசியில் இருந்து ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு மிகாமல் அழைத்து 3 நிமிடங்களுக்கு குறையாமல் பேசி கல்லூரிக்கு விரும்பியவர்களை அழைக்கிறேன், வருபவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து முறைப்படுத்தி கோப்பாக தயார் செய்தபின் நிரந்தர பேராசிரியர்கள் கையெழுத்து மூலம் சேர்க்கையை உறுதி செய்கிறார்.

மாநில அரசின் புதுமைப்பெண் திட்டத்துக்கு நான் தான் தகவல்களை சேகரித்து சமர்ப்பிக்கிறேன், தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டத்துக்கு 5 நாள் பயிற்சிக்கு எனது சொந்த செலவில் போய் வருகிறேன், திட்ட பயிற்சி வகுப்புகளை நான் தான் நடத்தி மதிப்பெண் பட்டியலை தயாரித்து சமர்ப்பிக்கிறேன்.

மாணவர்களின் கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி உறுதி செய்தல் சார்ந்த பணிகளையும் நான் தான் செய்கிறேன். எப்போதும் போல அரசு பேராசிரியர் கையெழுத்து மூலம் உறுதி செய்கிறார்.

எனது துறையில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து மாற்றுப் பணிக்கு பணிக்கப் பட்ட பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரும் மாதத்தின் முதல் நாளே முழுசம்பளத்தை பெற்று விடுகிறார்.

நான் கல்லூரிக்கு வந்த புதிதில் சில நாட்கள் மாணவர்கள் இருக்கையில் தான் அமர்ந்து இருந்தேன், அதன் பிறகு என்னைப் போன்ற நண்பர்கள் சிலருடன் ஒரே மேசையில் அமர்ந்து கொண்டோம்.
எனக்கு தனி மேசை நாற்காலி அனுமதிக்கப்பட்ட பின் அதிர்ஷ்ட மூங்கில் செடியை வளக்க வேண்டும்.

எல்லா மாதமும் சம்பளம் வருமா என பேசிக் கொண்டே 5 ஆம் தேதி வரை கல்லூரிக்கு வருகிறோம். முதல்வரை சந்தித்து அலுவலர்களுடன் பணிந்து பேசி ஒருவழியாக சம்பளம் கிடைக்கும் போது தேதி 10 என மளிகை கடைக்காரர் நினைவூட்டுகிறார்.

நான் சொந்த ஊரில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து தான் கல்லூரிக்கு வருகிறேன் தினமும் 100 பயண செலவு என 20 நாட்களுக்கு 2000 என் நண்பர் ₹200 மேனிக்கு 4000 ஒதுக்கி பணிசெய்கிறோம்.

மளிகைக்கடை அண்ணாச்சிகள் எனக்கு எப்போதும் விலை குறைந்த ஓரளவு தரமான பொருள்களை கொடுத்தாலும் குறைந்தது 5000 கணக்கு சொல்கிறார். வீட்டு வாடகை 2500, மின்சாரம் 250, கேபிள் 200, ரேசன் கடைக்கு 200 முடி திருத்தம் 100 போக பிள்ளையின் படிப்பு செலவுக்கு 1000, அம்மாவின் மருத்துவ செலவுக்கு 2000, பிள்ளைகள் மற்றும் இணையருக்கு 1000, நான் எப்போதும் போல கசாயம் குடித்துக்கொள்கிறேன்.
செய்முறைகள் செய்ய குறைந்து 5000 என ஆடி மாசத்தில் கூட அளந்து தான் செலவு செய்கிறேன், தினமும் பால் பிஸ்கட் கணக்கில் மாதம் 1000, துணி கடைக்கு 1000 இணையரின் அவசர செலவுக்கு 1000, வாரத்துல ஒருமுறை அசைவத்துக்கு 1000 நடைமுறை செலவுக்கு 3000 என எளிமையாக வாழ்ந்தாலும் 25000 த்தை தாண்டும் மாத செலவில் எந்த சங்கடமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்.

என் பட்டங்கள் உயர்ந்த பட்டங்கள் என பல்கலைக் கழகம் சொல்கிறது. என் வாழ்க்கை சராசரிக்கும் கீழானது என இணையரும் சமூகமும் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் நினைவூட்டுகிறார்கள்.

எல்லா சங்கடங்களுக்கு பிறகும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது. நிச்சயம் ஒருநாள் அரசு நிரந்தர பேராசிரியர்கள் பணிக்கு தேர்வு அறிவிக்கும் அதுவரை எந்த சங்கடமும் இல்லாமல் வாழவே விழைகிறேன்.

News

Read Previous

சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு

Read Next

உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..!

Leave a Reply

Your email address will not be published.