அவர் என்னென்ன சொன்னாலும் ரசனை

Vinkmag ad

அவர் என்னென்ன சொன்னாலும் ரசனை எஸ் வி வேணுகோபாலன் 
ர் அருமையான ரசிகர் அண்மையில் காலமாகி விட்டார். தமிழ் ஆசிரியர், புலவர், அரசவை கவிஞர், மேலவை உறுப்பினர், துணைத் தலைவர், திரைப்படப் பாடலாசிரியர் புலமைப் பித்தன் மறைவுச் செய்தி கேட்டதும், ஒரு ரசிகரைத் தமிழ் சமூகம் இழந்து விட்டது என்ற உணர்வு தான் முதலில் ஏற்பட்டது. ஒரு படைப்பாளியின் ஆக முக்கிய பண்பாக்கம் ரசனை. தன்னைக் கடந்து பரவும் ரசனை. அடுத்ததைக் கொண்டாடும் வளமிக்க உளமார்ந்த ரசனை. ஒரு ரசிகனைத் தான் இழந்துவிட்டது தமிழ் ரசிக சமூகம். 
வானொலியில் மட்டுமே பாடல்கள் கேட்டுத் திளைத்து மகிழ்ந்த காலங்களில், சென்னை வானொலியில் பெரும்பாலும் திரைப்பாடல்கள் ஒலிபரப்பும்போது, படத்தின் பெயரும், பாடியோர் பெயரும் மட்டுமே சொல்வது வழக்கமாக இருந்து வந்தது. இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள் பெயர்கள் வராது. குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் இந்த நான்கு அடையாளங்களும் சுமந்து பாடல் காற்றில் மிதந்து வரும். விவித பாரதி வர்த்தக ஒலிபரப்பு என்ற அலைவரிசை கேட்கத் தொடங்கியதும் என் போன்ற பாமர ரசிகர்கள் காட்டில் அமுத மழை பொழியத் தொடங்கியது. 
புலமைப் பித்தன் அவர்களைக் கண்டடைந்தது, அடிமைப் பெண் படத்தின், அபாரமான ‘ஆயிரம் நிலவே வா’ பாடலில் ஆழ்ந்து தோய்ந்து தேட ஆரம்பித்த போது தான்… எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்களது தமிழ்த் திரை நுழைவுப் பாடலாகக் கருதப்படும் இந்தப் பாடல், ஹார்மோன்களின் சித்து வேலைகளைக் கடந்து செதுக்கப்பட்ட இசை சிற்பம். திரை இசைத் திலகம் என்று சும்மாவா அழைத்தார்கள், கே வி மகாதேவன் அவர்களது அற்புதமான இசையமைப்பில் தாளக்கட்டின் இனிய சந்தங்களில், புலமைப்பித்தன் பாடல் சொற்கள், மயக்கமும் கிறக்கமும் ஊட்டும் எஸ் பி பி – பி சுசீலா இணைகுரல்களில் இசை நெசவாக மின்னிக் கொண்டிருக்கும். முழு பாடலையும் சொல்ல வேண்டி இருக்கும் என்றாலும், ‘இல்லை உறக்கம்…ஒரே மனம்’, ‘கள்ள விழி பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்’, ‘இன்பம் எதுவோ….இன்னும் எதுவோ/’ என்ற இடங்கள் போதும் கவிஞரது ஆழ்ந்த ரசனைக்கு.
சிவகாமியின் செல்வன் படத்தின், இனியவளே பாடலில் தமிழின் மடக்கணி பயன்படுத்தி இனி அவளே இனி அவனே என்று பிரித்துச் சிறப்பாக எழுதி இருப்பார். காதல் பாடல்கள் பலவும் ஆண் மையமாக, ஆண் கொள்ளும் மையலாக அதிகம் நிரம்பித் ததும்பும். அல்லது, பெண்ணின் ஏக்கம், காத்திருப்பு, தவிப்பு போன்றவற்றைப் பேசும். புலமைப்பித்தனின் காதல் பாடல்களில் காதல் வாழ்க்கையின் பாலின சமத்துவம், சம கொண்டாட்டம் குதூகலித்துக் கூவுவதைக் கேட்க முடியும். 
நேற்று இன்று நாளை படத்தின் பாடல்களில் அவரது தமிழ், காதல் இன்பத் தமிழாகத் துள்ளுவதைக் கேட்க முடியும். ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடல், டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா குரல்கள், வயலின், புல்லாங்குழல், சிதார் உள்ளிட்ட இசைக்கருவிகள், சிறப்பான தாள வாத்தியங்கள் அனைத்தும் சிறப்பென்றாலும், பாடல் வரிகளுக்காகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பாடல் அது. ‘பொன்னின் அழகிய மனதினை வரைந்து…..’ என இழைக்கும் சுசீலா, ‘பொங்கும் தமி…ழினில் கவிதைகள் புனைந்து’ என்று வளர்க்குமிடத்தில் காதல் தமிழும், தமிழின் மீதான காதலும் சேர்த்துப் பொங்குவதைக் காண முடியும். 
காதலின் கொண்டாட்டத்திற்கு, நாயகன் படத்தின் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ ஓர் அருமையான எடுத்துக்காட்டு. பின்னோக்கிய காலத்தின் நிகழ்வுகளைப் பேசிய படத்திற்கான இசையை இளையராஜா அமைக்க, அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் (நிலா அது வானத்து மேலே  பாடல் மட்டும் ராஜாவே எழுதியது) புலமைப்பித்தன் சிறப்பாகப் புனைந்தவை. ‘தென் பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே’ பாடல் காலத்தில் நிலைத்துவிட்டவற்றில் ஒன்று என சொல்ல முடியும்.  எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு உறக்க நேரத்தில் பாடிய பாடல்களில் முக்கியமானது அது. 
சங்கர் கணேஷ் இசையில் உருவான கன்னிப் பருவத்திலே படத்தின் பாடல்கள் மிகவும் பேசப்பட்டவை. மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணமாக மென்குரல் ரசனைக்கு உகந்த ‘பட்டு வண்ண ரோசாவாம்’ பாடலின் ஒவ்வொரு  வரியும், ஒவ்வொரு சொல்லும் கதைப்போக்கின் துயர நெஞ்சத்தின் கண்ணீர் கசிய வந்து விழும். ‘காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம், கரையுது எம் மனசு உன்னாலே’ என்ற வரியும், ‘மனம் கல்லாலே ஆனதில்லே கண்ணம்மா’ வரியும் (அதை இரண்டாம் முறை இழைக்கையில் கரைய வைத்துவிடுவார் மலேசியா) எத்தனை உருக்கத்தைக் கடத்துபவை!
உன்னால் முடியும் தம்பி  படத்திற்காக புலமைப்பித்தன் எழுதி இருந்த ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னுமிங்கே மாறவில்ல, இந்த பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்ல ‘ அவரது முத்திரைப் பாடலாகவே அதிகம் பேசப்படுவது. ‘காற்றுக்குப் பாட்டு சொல்லி யாரு தந்தது தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது’ ‘சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா’ போன்ற வரிகளும், ஏற்றத்தாழ்வுகள் பற்றிய வரிகளும் இளைய தலைமுறையை அந்நாட்களில் மிகவும் ஈர்த்தவை. 
எனக்கு ராகம் தெரியாது என்று அவர் மேடைகளில் சொன்னாலும், மிகவும் நுட்பமான சந்தங்கள் நிறைந்த மெட்டுகளுக்கான தேனருவியான பாடல்கள் பலவும் புனைந்தவர் புலமைப்பித்தன். கோயில் புறா படத்தின், ‘அமுதே தமிழே’ அற்புதமான ஓர் இசைப்பாடல். 
 ‘கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா’ பாடலைப் பற்றி அவரே சொந்த ரசனையோடு, பாடகர் மனோவுடன் நடத்தும் ஓர் உரையாடலில், ‘இந்தப் பாட்டில் 72 லா வருகிறது, நானென்ன சட்டம் படித்தவனா’ என்று சொல்லி சிரிக்கிறார். அவரது ரசிகையான ஓர் இளம் பெண், இந்தப் பாடலில் வரும், உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா என்று வரும் இடத்தை அப்படி ரசித்து ரசித்து, நீங்கள் சரியான கிரிமினல், எங்களைப் போன்ற இளம் உள்ளங்களைத் தூண்டும் குற்றத்தைச் செய்கிறீர்கள் என்று சொல்வாராம், இதை விட வேறென்ன விருது வேண்டும் என்று புலமைப்பித்தன் நெகிழ்ந்து போகிறார். கே ஜே யேசுதாஸ், சித்ரா இருவரும் அவரது தமிழின்பத் தேனை அத்தனை சுவாரசியமாக ரசிகர்களுக்குப் பரிமாறும் பாடல் அது. 

சிவகுமார் அவர்களது நூறாவது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி  படம் வந்த சமயத்தில், விவித பாரதி வர்த்தக ஒளிபரப்பு அலைவரிசையில் விளம்பரதாரர் நிகழ்ச்சியில் இரவு பத்து மணிக்கு ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்கள் புலமைப்பித்தன் தமிழை இரவின் நட்சத்திரப் பூக்களாகத் தூவிக் கொண்டே இருக்கும். எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்களது அசாத்திய குரல் வளத்தின் மகத்தான பாடல்கள் வரிசையில் முக்கியமான பாடல், ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி’.  சோகத்தை அசாதாரண சந்தங்களில் அசாத்திய சுவையோடு படைத்திருப்பார் புலமைப்பித்தன். ‘வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க’ என்பதில் மட்டுமல்ல, அதையடுத்து, ‘கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத’ என்றெடுக்கும் இடத்தின் வேகத்தில் விளையாடும் சொற்கள் பாடல் முழுவதும் தெறிக்கும். பாடலில், ‘சித்தகத்திப் பூ விழியே’ என்ற வருணிப்பின் அழகு தனி. ஹம்மிங் பற்றிப் பொதுவாக சிலாகிக்கும் புலமைப்பித்தன், இந்தப் பாடலில், எஸ் பி ஷைலஜா ஹம்மிங் மிகவும் ரசித்திருப்பார்.. 
மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்களைச் சிறப்பிக்கும் மேடையொன்றில் புலமைப்பித்தன் பேசியதன் காணொளிப் பதிவைச் சில மாதங்களுக்குமுன் பார்க்க நேர்ந்தது. தமது முப்பதாம் வயதில்,  எம் எஸ் வி இசையமைப்பில் அவருக்கே தெரியாமல், முதல் பாடலான ‘நான் யார்’ எழுதிக் கொடுத்த அனுபவத்தைச் சொன்ன புலமைப்பித்தன்,  இசைப்பாடல்களை அணு அணுவாகக்  கரும்பின் கணுவாக எண்ணியெண்ணி ரசிப்பதை வியந்து பார்க்க முடிந்தது. 
எம் ஜி ராமச்சந்திரன் அவர்களது அரசியல் அடையாளப் பாடல்கள் சிறப்பாகப் புனைந்து பெயரெடுத்திருந்தவர் புலமைப்பித்தன்.  எம் ஜி ஆர், இவரை வைத்துக்கொண்டு பேசிய மேடையொன்றில், ‘எல்லோரையும் விட சிறப்பாக எழுதுபவர் புலமைப்பித்தன், ஆனால் நான் வாலிக்குத் தான் அதிகம் பாட்டு தந்தேன்’ என்ற போது, ‘பாட்டு அவருக்கே அதிகம் போகட்டும், என்னைப் பற்றிய பாராட்டு அப்படியே உள்ளத்தில் இருக்கட்டும்’ என்று பதில் சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 
அவரை நினைக்கையில், இயற்கையை மறுத்துக் கொள்ளாத நரைமுடியும், மீசையும், யாருக்கும் அஞ்சாத கம்பீரப் பேச்சும், துணிவுமிக்க தன்னம்பிக்கையும் நினைவுக்கு வரும் என்றாலும்,  இசைக்குத் தன்னை வசப்படுத்திக் கொண்ட ரசனை மனிதர் புலவர் புலமைப்பித்தன் என்பதே மேலோங்கி நிற்கிறது.
நன்றி: வண்ணக்கதிர் (தீக்கதிர்: 19 09 2021 இணைப்பு)

News

Read Previous

உயர்வான வாழ்க்கைக்கு….

Read Next

மண்ணடி மாமூர் பள்ளியின் ருசிகர தகவல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *